நீ எனக்கானவன் - 2
என்று நீ என்னவனானாய்
தெரியுமா
எனக்கே தெரியாமல்
உன் நினைவுகளில்
தனியே சிரித்து
பின் என் தலையில்
நான் கொட்டுவைத்த
அந்த மாலை பொழுதில்
என்று நீ என்னவனானாய்
தெரியுமா
எனக்கே தெரியாமல்
காலை கண்விழித்ததும்
ஜன்னல் திரைசீலை
அகற்றி அகன்ற
விழியோடு ஒருவேளை நீ
வருவாயோ என பார்க்க
தொடங்கி பின்
வந்து விடமாட்டயா
என்று ஏங்கி
தவித்த அந்த
விடிகாலை பொழுதில்
யாரும்மா என்று
கேட்ட அம்மாவிடம்
அது ஒண்ணுமில்லமா
என்று சமாளித்து
ஓடி ஒளிந்த போது
என்று நீ என்னவனானாய்
தெரியுமா
எனக்கே தெரியாமல்
சுடும் வெயிலிலும்
சாலை நடுவே
உன் நினைவுகளை
சுகமாய் கொரித்துக்கொண்டு
சுகமாய் நடந்துகொண்டிருந்த
என்னை பார்த்துப் போம்மா
என்று யாரோ சொல்ல நான்
வெட்கி தலைகுனிந்து
ஐஸ்கிரீம் போல
அசடு வழிந்த அந்த
உச்சிவெயில் பொழுதில்
என்று நீ என்னவனானாய்
தெரியுமா
எனக்கே தெரியாமல்
என் வீட்டு கண்ணாடியில்
என்னை நான்
அழகு பார்த்துக்
கொண்டிருந்தபொழுது
ஏன் என்னையெல்லாம்
பார்க்கமாட்டாயா என்று
என் நெற்றி பொட்டிலிருந்து
எட்டிப்பார்த்த நீ
கேட்டபோது வெட்கி
சிரித்ததை மறைத்து
உன்னை என்
நெற்றி பொட்டிற்குள்
அழுத்தி மறைத்து
நான் நடக்க
துவங்கிய அந்த
மயக்க பொழுதில்
என்று நீ என்னவனானாய்
தெரியுமா
எனக்கே தெரியாமல்
என் வீட்டு மொட்டை மாடியில்
தனியே நிலவை
ரசித்துக்கொண்டிருந்த
என் முகம் திருப்பி
என் விழி நோக்கி
என் கையோடு
கை சேர்த்து
அந்த நிலவுக்கு
உன்னை தூக்கிப்
போகட்டுமா நான்
என்று நீ கண்சிமிட்டியபோது
தடுமாறிய என்னை
தாங்கிய கரங்களில்
இருந்து விடுபடாமலே
உன் நினைவுகளோடு
படி இறங்கிய அந்த
இரவு பொழுதிலே
என்று நீ என்னவனானாய்
தெரியுமா
எனக்கே தெரியாமல்
என் போர்வைக்குள் நுழைந்து
கிச்சு கிச்சு காட்டி
எனக்கு சிரிப்பு காட்டி
என்னை சிலிர்க்க செய்து
என்னை தாலாட்டி
தூங்க வைத்துவிட்டுப்போன
அந்த நினைவுகளின்
நிலாக்கால இரவொன்றில் !
என்று நீ என்னவனானாய்
தெரியுமா
எனக்கே தெரியாமல்
மூடிய என் விழிகளை
வருடாமல் உள்நுழைய
ஒரு வழிகண்டு
என் கனவுகளுக்குள்ளாக
மெல்ல நுழைந்து
மூச்சு முட்ட முத்தங்களையும்
பேச்சு நிற்காத தருணங்களையும்
தூங்கினேனா தூங்கவில்லையா
என்று தெரியாத
நீண்ட இரவுகளையும்
கனவா நிஜமா என்று
அறிய விரும்பாத
அந்த அந்திப்பொழுதுகளில் !
என்று நீ என்னவனானாய்
தெரியுமா
எனக்கே தெரியாமல்
அரை தூக்கத்திலோ
முழு தூக்கத்திலோ
விழிப்பு வந்த நான்
ஐயையோ என்று அலறி
கலைந்து போன உன்
கனவுகளுக்காக குழந்தையென
சிணுங்கி மீண்டும்
தூங்க முயன்ற அந்த
அழகான அதிகாலை பொழுதில் !