அடையாளங்கள்

================
கோடையில்
ஒரு மழைக்கால இரவின் சிலுசிலுப்பு.
நீ என் வாசல் கடந்து சென்ற
அடையாளம்.
மாக்கோலம் இல்லா உன் வாசல்
நீ ஊரில் இல்லை என்பதற்கான
அடையாளம்.
உன் பகல் தூக்கம்
என்னை நீ கனவுகாணும் அடையாளம்.
உன் கால் சொலுசு சிணுங்கல்
என் கவன ஈர்ப்பு அடையாளம்.
உன் வீட்டு சன்னல்கள் திறப்பு.
எனக்கான பறக்கும்
முத்தகால அடையாளம்.
அம்மா கோயிலுக்குப் போறேன் ..
உன் பயணம் சொல்லும் சப்தம்
என்னையங்கு வரச்சொல்லும் அடையாளம்.
உன் பேசும் கண்கள்
பேசாத கவிதைகளின் அடையாளம்.
நம் நாகரிக காதலின் கண்ணசைப்பு
உன் சொந்தங்களின்
கையசைப்புக்கு வழிவகுக்க
மேனியின் விழுந்த தழும்புகள்
உண்மைக்காதலின் உயர் அடையாளம்.
வலிகள் தாங்கிய மனதுக்கு
இடிகளைப் பரிசளிக்க
நீ நீட்டிய திருமண அழைப்பிதழ்
துரோகத்தின் அடையாளம்.
மஞ்சள் குங்குமம்
மங்கள தாலி எல்லாம்
இப்போது நீ திருமதி
என்றானதற்கான அடையாளம்.
விலாசம் தொலைந்த கடிதமாய்
சேருமிடமின்றித் தவிக்கும்
நான் மட்டும் நடைப்பிணம்
என்பதற்கான அடையாளமாய்....!
*மெய்யன் நடராஜ்
*எண்பதுகளில் பத்திரிகையில் வெளிவந்த என் பழைய கவிதையிது.