ஓர் கணையாழியின் கனவு

யுகம் யுகமாய் மண்ணில்
புதையுண்டு உறங்கினேன்
வெட்டி எடுத்து
என் நித்திரை கலைத்து
உருக்கி உருவம்
கொடுத்தாய் மனிதா?
மதி மயங்கினேன்
இந்த உலகம் இவ்வளவு அழகா..?
மின்சார விளக்கின் மின்னோளியில்
எவ்வளவு ரம்மியமான வாழ்க்கை
எவ்வளவு மரியாதை
எவ்வளவு பாதுகாப்பு...
எனை கைகளில் ஏந்தினால்
எத்தனை பூரிப்பு!
இந்த மனிதர்களுக்கு...
அனைத்தும்
கடை வாயில் வரைதான்....
பசிக்கு அழுதிடும்
குழந்தைகளை கண்டேன்
பாலாய் பிறக்கவில்லையே நான்...
படிப்பிற்கு பரிதவித்திடும்
பிள்ளைகளை கண்டேன்
புத்தகமாய் உதிக்கவில்லையே
நான்....
தங்கமில்லா ஏழை ஏந்திழையின்
கழுத்தில் மஞ்சள் கிழங்காக
வேனும் ஜனித்திருக்கலாமே
நான்....
வறண்ட பூமியை கண்டு
வானம் பார்த்து பார்த்து
கண்ணீர் சிந்தும் விவசாயிகளின்
ஓர் கண்ணீர் துளியேனுமாய்
இனி பிறப்பேனா
நான்....
என்னே! ஒரு இழி நிலை
இங்கே செல்வந்தன் இடக்கையில் பத்தாவதாய்
பரிதவிக்கின்றேன்.....

எழுதியவர் : சுரேஷ் குமார் (30-Jan-18, 11:13 pm)
பார்வை : 95

மேலே