வீடு என்ன செய்ய வேண்டும்

வீடு என்ன செய்ய வேண்டும்?

ஐயப்பனின் மனைவிக்கோ, அவர்களது குழந்தைகளுக்கோ தாங்கள் குடியிருக்கும் வீட்டை பற்றி அவ்வளவான நல்லபிப்ராயம் இல்லை. இது என்ன வீடு நீளமா? தீப்பெட்டி மாதிரி கட்டியிருக்கீங்க, நம்ம தெருவுலயே போய் பாருங்க, “வீடுன்னா” அப்படி இருக்கணும். பையன் அவரிடம் நேரிடையாகவே சொல்லியிருக்கிறான்.
ஐயப்பனின் மனைவி மகனை விட ஒரு படி மேலே சென்று அதை ஏண்டா கேக்கறே? என்னைய கல்யாணம் பண்ணிட்டு வரும்போது, உங்கப்பா இந்த வீட்டுக்கே, அவ்வளவு ஆர்ப்பாடம் பண்ணுனாறு எங்க வீட்டுல..! சிட்டிக்குள்ள வீடு வச்சிருக்காறாம், அப்படி இப்படீன்னு ஒரே பெருமைதான். இவரோட குடித்தனம் வந்த பின்னாடிதான் இந்த இத்துணூண்டு வீட்டுக்கு இத்தனை பெருமை தேவையான்னு? இந்த வீட்டுக்குள்ள உங்க தாத்தா பாட்டி வேறே, அவங்களுக்கு இதுக்குள்ளயே தனியா ஒரு ரூம்.
பத்து வருசமாச்சு, அவங்க போய் சேர்ந்து அந்த ரூமை காலி பண்ணி. அதுக்குள்ள நீங்க இரண்டு பேரு வளந்துட்டீங்க, இப்ப “தடி தடியா” நாலு பேரு இருக்கோம், எப்படி பத்தும்? பேசாம இந்த வீட்டை வித்துட்டு..!
ஐயப்பனுக்கு ஆரம்பத்தில் இந்த பேச்சை கேட்கும்போது கோபம் கோபமாக வரும். இப்பொழுது அவர்கள் அறியாமையிலோ, அல்லது அனுபவ குறைவாலோ பேசுவதாக நினைத்து கண்டு கொள்வதில்லை.
மனைவியும் இப்படி பேசுவதுதான் இவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. கணவனை குறை சொல்வதற்காக இந்த வீட்டை இழுத்து பேசுவதாக கூட இருக்கலாம். காரணம் இவர் திருமணம் செய்யும்போது மனைவியின் பெற்றோர்கள் சொந்த வீட்டில் வசிக்கவில்லை. இந்த வீட்டை விட மிகச்சிறிய வீட்டிலேதான் வாடகைக்கு வசித்தார்கள். அதனால் அவர் இதை விட கொஞ்சம் பெரிசாவே இருக்கும், நாம வாடகை கொடுக்காம இருக்க போற வீடு என்று சொல்லி வைத்தார். அதுவே ஏதோ இவர் பெருமை பேசியதாக மனைவி சொல்வதை என்னவென்று சொல்லி குழந்தைகளுக்கு புரிய வைப்பது? விளக்கம் சொல்வதெல்லாம் வெட்டி வேலை என்றும் விட்டு விட்டார்.
இந்த வீட்டை கட்டுவதற்கு இவர் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல, இருபத்தி ஐந்து முன் இருந்த காலகட்டத்தில் தந்தை அப்பொழுதுதான் ஓய்வு பெற்றிருந்தார். அதற்கு கிடைத்த கொஞ்சம் பணத்தை, உறவினர் ஒருவர் தனது மகனின் படிப்புக்காக இந்த சிறிய நிலத்தை விற்க முயற்சி செய்து கொண்டிருந்தார் உடனே கையில் வந்த கொஞ்சம் பணத்தை வைத்து இந்த நிலத்தை விலை பேசி வாங்கி வைத்திருந்தார். அதில் நம்மால் வீடு கட்டமுடியுமா? என்று ஒவ்வொரு நாளும் மலைத்து நின்று கொண்டிருந்தது மட்டுமில்லாமல் ஓய்வு பெற்று தன்னுடன் இருக்கும் வயதானவர் களை வாடகை வீட்டில் வைத்து பரமாரிக்க முடியாது, எப்பொழுது வேண்டுமா னாலும் காலி செய்ய சொல்வார்கள்,அதனால் நிலத்தின் மீது வீட்டை கட்டுவதற்கு வேளாண்மை வங்கி ஒன்றில் கடனுக்கு ஏற்பாடு செய்து கட்ட ஆரம்பித்தார்.
அரசின் வேளாண்மை வங்கி அன்றைய காலகட்டத்தில் பதினாறு சதவிகிதம் வட்டி, கேட்டிருந்த கடன் தொகையை கொடுக்க, அவர்கள் எடுத்து கொண்ட காலமோ இரண்டு வருடங்களுக்கு மேல். அதற்குளாகவே அவர்கள் கேட்டிருந்த நடமுறை சட்ட திட்டப்படி நிலத்தில் வீடு கட்ட அஸ்திவாரம் எடுத்து, இரண்டடி கல் கட்டிடம் வரைக்கும் மேலே கொண்டு வைத்து காட்டவேண்டும். அதன் பின்னேதான் அவர்கள் வந்து பார்வையிட்டு பணம் வழங்க அனுமதி கொடுப்பார்கள். இந்த அஸ்திவாரம் கல்கட்டிடம் கட்டுவதற்கே நகை நட்டு எல்லாவற்றையும் வங்கியில் வைத்தும், விற்றும் கட்டி முடித்தார். அதன் பின்னர் அவர்கள் வந்து பார்த்து அனுமதி கொடுத்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடி விட்டன. அந்த இரண்டு வருடங்களுக்கு வங்கியில் வைத்திருந்த நகைகளின் வட்டி ஏறி, அந்த வட்டிக்கு வட்டி கட்டி, சிரமபட்டு எப்படியோ வீட்டை கட்டி முடித்து பெற்றோரை கூட்டி வந்து குடி வைத்தார். அன்றைய காலகட்டத்தில் அதுவே பெரிய முன்னேற்றம். ஊதியம் வெறும் இரண்டாயிரம் வாங்கி கொண்டிருந்த காலம்.
அதற்கு பின் மள மளவென இவர் வீடு கட்டியிருந்த மனைகளெல்லாம் அசுர வளர்ச்சி பெற்று அக்கம் பக்கம் எல்லாம் பெரிய பெரிய கட்டிடங்களாக கட்டி குடி வந்து விட்டனர். காரணம் இவருக்கு பின்னால். வீடு கட்ட ஆரம்பித்தவர்களுக்கு வீட்டு கடன் ஏராளமான அரசு, மற்றும் தனியார் வங்கிகள் கொடுத்ததால் புற்றீசலாய் கட்டிங்கள் பெருத்து விட்டன.
அக்கம் பக்கம் வீடுகளை பார்க்கும்போது இந்த வீடு சிறியதாக இருப்பதால் இவர்க்ள் இப்படி ஏளனமாக பேசுகிறார்கள். அவர்களுக்கு தெரியாது, பெரிய பெரிய வீடுகள் பெருமாபாலும் கடனில்தான் கட்டப்பட்டிருக்கிறது என்பது. இவரை பொறுத்தவரை “கட்டிடத்து கடன்” சிறியதாய் இருந்ததால் பதினைந்து வருடங்களுக்குள் எல்லா கடனையும் கட்டி முடித்து, இன்று நிம்மதியாய் இருக்கும் படியாகத்தான் கட்டு செட்டாய் செலவுகள் செய்து குடும்பத்தை கொண்டு வந்திருக்கிறார்.
பெற்றோர்களும், கடைசி வரை இவரை பாராட்டி கொண்டே இருந்தார்கள், எப்படியோ எங்களை கடைசி காலத்துல சொந்த வீட்டுல இருந்து போற மாதிரி எற்பாடு செஞ்சுட்டே, ரொம்ப சந்தோசம். அப்பா சொல்வார், நான் எல்லாம் உன்னைய மாதிரி நாலு குழந்தைகளை வச்சு வளர்த்தும் போது “நமக்குன்னு ஒரு வீடு” எப்ப வருமுன்னு? கவலைப்பட்டிருக்கேன்? இந்த வார்த்தைக்கு மேல் ஓரு மனிதனின் மகிழ்ச்சிக்கு வரையறை ஏது?
அன்று தெருவின் வளைவில் ஒரே சத்தமாய் இருந்தது. என்னவென்று சென்று பார்க்க சொன்னார் ஐயப்பன். பையன் சென்று பார்த்தான். அந்த வளைவில் இருந்தது பெரிய பங்களா, அதன் காம்பவுண்ட் கேட் மூடப்பட்டு, சுற்றி வர போலீஸ்காரர்கள் நிற்க, அதில் குடியிருந்த குடும்பம் வெளியில் நின்று கொண்டிருந்தது. இரு பணியாட்கள் கேட் கதவை பூட்டி அரக்கு வைத்து “சீலிட்டு” கொண்டிருந்தார்கள்.
இதுவரை கம்பீரமாய் காரில் சென்றும் வந்தும் கொண்டிருந்த அந்த குடும்பம் அவமானத்துடன் கூனி குறுகி நிற்பதை பார்த்ததும், திகைத்து போனான். இதுவரை அவர்கள் குடும்பத்தை இவர்கள் மிக உயர்வாக நினைத்து கொண்டிருந்தார்கள். இந்த பங்களாவுக்கு இரண்டு கோடிக்கு மேல் கடன் இருப்பதாகவும், அதை கட்ட முடியாமல் இரண்டு வருடங்களாக இழுத்தடித்ததால், கடன் கொடுத்தவர்கள் பங்களாவை “ஜப்தி” செய்து விட்டதாகவும், காரணங்கள் அச்சடித்த ஒரு நோட்டீசை கதவில் ஓட்டுவதை பார்த்தான்.
“சின்ன வீடாய் இருந்தாலும், அந்த வீட்டுக்கு கடன் இல்லாமல் இருக்கறது எவ்வளவு சந்தோசமா இருக்குது” மகன், அம்மாவிடமும் மகளிடம் சொல்லி கொண்டிருந்ததை கேட்ட ஐயப்பனுக்கு மனசுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி. அவரை பொறுத்தவரை தன் பெற்றோர்களையும், இந்த வீட்டால் மகிழ்வித்திருக்கிறார். இதோ தனது குழந்தைகளையும் மகிழ்வித்து விட்டார். கடனில்லாமல் கொண்டு சென்று கொண்டிருக்கிறது இந்த வீடு. இதற்கு மேல் இந்த வீடு அவருக்கு என்ன செய்ய வேண்டும்?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-Oct-25, 1:13 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 6

மேலே