திண்ணையை விட்டு வீட்டுக்குள்

திண்ணையை விட்டு வீட்டுக்குள்
“”கொயிங்” “கொயிங்” முகத்தருகே சுற்றி வந்து ரீங்காரம் பாடிக்கொண்டிருந்த கொசுவை ச்சு..சு..கைகளால் விரட்டி பார்த்தான் சங்கிலி. அவன் கையை விசிறும் போது காணாமல் போவதும், திரும்ப நிலைக்கு வந்ததும் மீண்டும் அவன் முகத்தின் முன்னால் வந்து தலையை சுற்றியபடி வந்த கொசுவை கெட்ட வார்த்தையால் வைதபடி திண்ணையை விட்டு எழுந்தான்.
குனிந்து வாசலை பெருக்கி கொண்டிருந்த சங்கிலியின் மனைவி காளியம்மாள் முதுகை நிமிர்த்து என்ன? என்பது போல் ஒரு பார்வை பார்த்தபடியே தன் கையில் இருந்த விளக்குமாற்றின் அடிப்பகுதியை தொடையில் தட்டினாள்.
சங்கிலி அவள் முகத்தை பார்த்தவுடன் தலையை தாழ்த்திக் கொண்டான். மனைவி மேல் காட்டமுடியாத கோபத்தை இப்பொழுது கொசுவின் மேல் காட்ட தோளில் இருந்த துண்டை எடுத்து தன்னை சுற்றி விசிற ஆரம்பித்தான்.
திண்ணையில் இருந்த எழுந்தவன், மனைவி வழியை மறித்து வாசலை கூட்டிக் கொண்டிருந்ததால் அவளை தாண்டி செல்ல முடியவில்லை. விடியற்காலை குளிர் வேறு வாய்க்கு சூடாய் ஒரு ‘டீ’ குடித்தால் சுகமாய் இருக்கும் என்று எண்ணியது. ஆனால் “டீ யோ காப்பியோ யார் கொடுப்பார்கள்? அதற்கான தகுதியை என்றோ இந்த வீட்டில் இழந்து விட்டவன் தானே..! திண்ணையில் இரவு வந்து படுத்து தூங்க அனுமதித்திருப்பதே அதிகபட்ச உரிமை பெற்று விட்டதாக எண்ண வேண்டி இருந்தது அவனுக்கு.
வேலை வெட்டி எதற்கும் போகாமல் சுற்றிக்கொண்டிருந்தவன், அவ்வப்போது சாராயத்தை ஊற்றிக்கொள்பவன், இப்படிப்பட்டவனுக்கு இதற்கு மேல் இந்த வீட்டுக்குள் யார் உரிமை கொடுப்பார்கள்? காளியம்மாளை கல்யாணம் பண்ணி குடி வந்த போது அம்மா மாரி இருந்தாள். வேலை வெட்டியில்லாம, தண்ணிய போட்டுட்டு சுத்திகிட்டிருக்கானே, ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சா திருந்திடு வான்னு சங்கிலியின் அம்மா மாரி தப்பு கணக்கு போட்டு விட்டாள். இதனால் காளியம்மாளை கட்டி வைத்து அவளிடம் இருந்து “அன்னாடம் மண்டகப்படி” வாங்கி கொண்டிருந்தாள் சாகும் வரைக்கும்.
இப்படி ஒண்ணுத்துக்கும் உதவாத பையனை பெத்து வச்சு என் தலையில கட்டி என் வாழ்க்கைய நாசம் பண்ணிட்டியே கிழவி. அவளின் கூப்பாடு மாரியை நடு நடுங்க வைத்தது. ஏது இவனால நம்ம சோத்துக்கு உலை வச்சிருவான் போலயிருக்கு, சட்டென காளியம்மாளின் கட்சி பக்கமே சாய்ந்து மகன் சங்கிலியை அவளும் சேர்ந்து திட்டி தீர்த்தாள். என்றாலும் மகனை திண்ணை அளவுக்காவது வைத்திருந்ததற்கு காரணமே அம்மா மாரிதான். அதே போல் நேரத்துக்கு வயிற்றுக்கு கொட்டி கொள்ள மகனை காளியம்மாளின் முன் திட்டி தீர்த்துவிடுவது போல பேசி அவன் வயிற்றை நிரப்பி விடுவாள்.
ஒரே ஒரு விசயம் மட்டும் சங்கிலியால் செய்ய முடிந்தது, அவன் காளியம் மாளை கல்யாணம் செய்து முதல் ஒன்றிரண்டு மாத மயக்கத்தில் ஒரு பையனை பெற வழி ஏற்படுத்தியது, அதற்கு பின் மூன்று வருடம் ஓடிய பின் காளியம்மாள் ஏதோ ஒரு “சந்தோச” மன நிலையில் இருந்த போது திண்ணையை விட்டு உள்ளே சென்று அடுத்து ஒரு பெண்குழந்தையை பெற காளியம்மாளுக்கு உதவி செய்தது.
மற்றபடி மாடு கன்னு பார்த்து, பாலைக்கறந்து வீடு வீடுகளுக்கு ஊற்றியது முதல் பையனையும், பெண்ணையும் பள்ளிக்கூடத்தில் சேர்த்து பத்து பனிரெண்டு வரைக்கும் கொண்டு வந்தது, ஒரு மாட்டை ஆறு உருப்படிகளாக்கியது, நாட்டுக்கோழி நாற்பதாக பெருக்கி தினம் அஞ்சாறு நாட்டுகோழி இரைச்சிக்கு அனுப்பறதும், தினம் நாட்டு கோழி முட்டை பத்திருபதை நாடார் கடைக்கு வித்து காசாக்கறதும் எல்லாமே காளியம்மாலும், அவ பையனும், பெண்ணும் தான்.
சங்கிலி அவ்வப்போது நினைத்து கொள்வான், நாம் எப்பவாவது இந்த குடும்பத்துக்கு பிரயோசனப்பட்டிருக்கறமா? ஹூஹூம், அம்மா உயிரோட இருந்த காலத்துலயே உடம்பு வளைஞ்சு எதுவுமே செஞ்சதில்லை, பெத்த கடமைக்கு அப்பன் உழைச்சு கொட்டிட்டு போய் சேர்ந்துட்டாரு. அம்மா அவளால முடியாதுன்னு இந்த காளியம்மா கிட்ட கோத்து விட்டுட்டு போய் சேர்ந்துட்டா.
மனசுக்குள் ஆசை இருந்தது, தானும் ஒரு மனுசனாய் வீட்டுக்குள் நுழைந்து மனைவி குழந்தைகளுடன் சரி சமமாய் உட்கார்ந்து பேச வேண்டுமென்று. ஆனால் அது இனிமேல் நடக்க வாய்ப்பு இருக்குமா?
காளியம்மாளின் சரட்டு சரட்டு வாசல் பெருக்கும் சத்தம் சங்கிலியை உட்கார்ந்த நிலையிலேயே மீண்டும் கண்ணை மூடி தூங்கத்துக்கு கொண்டு போனது. இது தெரிந்து கொண்டாளோ என்னமோ காளியம்மா வாசல் தெளிக்கும் சாக்கில் அவன் உட்கார்ந்திருந்த திண்ணையின் மீதும் தெளித்தது போக மிச்சம் இருந்த தண்ணீரை ஊற்றி விட்டாள்.
விடியல் குளிரால் நடுங்கி கொண்டிருந்த சங்கிலியின் பிட்டத்தில் திண்ணையில் இருந்த தண்ணீர் போய் தொட்டவுடன் விருக்கென எழுந்தவன் திரும்பி பார்க்க அவனருகில் தேங்கியபடி கொஞ்சம் நீர். கோபமாய் விழித்து மனைவியை பார்க்க அவளோ அப்பொழுதே உள்ளே சென்றிருந்தாள்.
இந்த நேரத்துக்கு மேல் திண்ணையில் இடமில்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டாள் காளியம்மாள், என்பதை உணர்ந்த சங்கிலி எழுந்து நடந்தான். நடக்கும் முன்னால் தன் தொண்டையை ஓங்கரித்து வெளியே துப்பி விட்டு பழனியப்பன் டீ கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அங்கு போனால் இவனது சோக்காளிகளில் யாராவது ஓரிருவர் இந்நேரத்துக்கு வந்திருக்கலாம். ‘டீ’ யாராவது வாங்கி கொடுக்காமலா போய் விடுவார்கள். நம்பிக்கையாய் நடந்தான்.
பழனியப்பன் கடையில் யாருமில்லாமல் பாயிலர் மட்டும் கொதித்த நிலையில் இருக்க பழனியப்பன் இவனை கண்டவுடன் வா வா சங்கிலி, கொஞ்சம் பார்த்துக்க, அவசரமாய் காட்டுக்கு லுங்கியை இழுத்து மடித்து கட்டியபடி ஓடினான். சங்கிலி குளிருக்கு இதமாய் பாயிலர் அருகில் போய் நின்று கொண்டு தெருவை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
அம்பாசிடர் ஒன்று கடையின் முன் வந்து நின்றது.அதிலிருந்து வெள்ளை வேட்டி சட்டையுடன் இறங்கினான் மருதன். அரசியல் புள்ளி, கடை பாயிலர் முன் இவன் நின்று கொண்டிருந்ததை பார்த்தவன், அங்கிருந்தே சங்கிலி பழனி எங்க போயிட்டான் ?
சங்கிலி வேகமாய் மருதன் முன் வந்து “காட்டுக்கு” போயிருக்கான். என்றான்.
ஒரு ‘டீ’ போடலாமுன்னு வந்தேன், இவன் எங்கியோ போய் தொலைஞ் சுட்டான், தனக்குள் முணங்கியவன் சட்டென சங்கிலியிடம் உனக்கு ஒரு வேலை இருக்கு, வர்றீயா?
வேலையா? தலையை சொறிந்தவனிடம் பெரிய வேலை ஒண்ணுமில்லை, நம்ம ‘சரக்கு’ வளவன் காட்டுல இருக்கு போய் உக்காந்துக்கோ, வர்றவனுக்கு எடுத்து ஊத்திக்கொடு, மணியான் கொஞ்ச நேரத்துல அங்க வருவான், வாங்கன காச அவன் கிட்ட கொடுத்துடு.
யோசனையாய் மருதனின் முகத்தை பார்த்தபடியே இருந்த சங்கிலியின் எண்ணத்தை புரிந்து கொண்ட மருதன் அப்பப்ப நீயும் ஊத்திக்கோ, ஆனா கவனமா காசு வாங்கறதை கவனிச்சுக்கணும்.
சரி சரி சந்தோசமாய் தலையாட்டினான். அதற்குள் பழனி கடைக்கு வர அவனை பார்த்த மருதன் பழனி சீக்கிரம் இரண்டு ‘டீ’ போட்டு ஒண்ணை சங்கிலிக்கு கொடு, இன்னொணு எனக்கு, எப்படி போடணும்னு உனக்கு தெரியுமில்லை?
தெரியும் என்பது போல தலையாட்டிய பழனி இருவருக்கும் ‘டீயை’ போட்டு கையில் கொடுத்தான்.
சங்கிலிக்கு ஒரே மகிழ்ச்ச்சி, மருதனின் அம்பாசிடரில் பயணம், ‘டீ’ யும் இலவசம், அது போக அவனை வளவன் காட்டில் இறக்கி விடும்போது சரக்கு கேனுடன் கையில் பத்து ரூபாயும் கொடுத்து விட்டு மணியான் வந்துடுவான், பத்திரம் அம்பாசிடர் வளவனுடன் அங்கிருந்து பறந்தது.
மூன்று கேன் முழுக்க சாராயத்துடன் உட்கார்ந்திருந்த சங்கிலிக்கு அரை மணி நேரத்திலெல்லாம் வாயில் எச்சில் ஊற ஆரம்பித்து விட்டது. அந்த நேரத்தில் இரண்டு பேர் இவனிடம் வந்து காசை கொடுக்க, வாங்கி பத்திரப்படுத்தியவன் அவர்களுக்கு ஊற்றி கொடுத்து விட்டு தனக்கும் ஊற்றி கையில் எடுத்து கொண்டான். வந்தவர்கள் ஊறுகாய் கொண்டு வந்திருக்க இவனும் கொஞ்சம் வாங்கி கொண்டான்.
மணியான் அரை மணி என்பது ஒரு மணி நேரமாகித்தான் அங்கு வந்தான். அவன் அங்கு வந்த பொழுது ஐந்தாறு பேர் பேர் மயங்கி கிடந்தார்கள் இரண்டு மூன்று பேர் “ஓவ்” ஓவ்” வாந்தி எடுத்தபடியும், சில பேர் “கண் எரியுதே” என்று கதறிக்கொண்டு இருப்பதை பார்த்தவுடன் ஏதோ “விபரீதமாய்” நடந்து விட்டது என்பதை புரிந்து கொண்டவன், மீதம் இருந்த எல்லா கேன் சாராயத்தையும் மண்ணில் ஊற்றி விட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான்.
காலை பத்து மணி அளவில் அந்த ஊரே அல்லோகல்லப்பட்டிருந்தது. கள்ள சாராயம் குடித்து ஆறு பேர் இறப்பு, மூன்று பேரின் கண் பார்வை பறிப்பு, இன்னும் நான்கு பேரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
அந்த ஊரில் காவல்துறையும், அரசாங்க அதிகாரிகளும் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இறந்து போனவர்கள் யார் யார் என்று அரசாங்க ஊழியர்கள் வீடு வீடாக விசாரித்து கொண்டிருந்தார்கள்.
காளியம்மாளின் அழுகைதான் ஊரையே ஆச்சர்யப்படுத்தியது. அவளின் பின்னால் நின்ற அவளின் வாரிசுகளும் அம்மாவின் அழுகையை கண்டு சற்று திகைத்து தாங்களும் ஆழ ஆரம்பித்தனர்.
அன்று சங்கிலி அந்த வீட்டின் முக்கியமான ஆளாக தூணாக இருந்தவன் என்றும், அவனில்லாமல் இனிமேல் இந்த குடும்பம் என்ன செய்யப்போகிறது? அழுதபடியே சொல்லிக்கொண்டிருந்தாள்,காளியம்மாள் எதிரில் நின்று கொண்டிருக்கும் அரசியல்வாதிகளிடமும், அரசாங்க அதிகாரிகளிடமும்.
சங்கிலியின் எண்ணம் மட்டும் எப்படியோ நிறைவேறி விட்டது. திண்ணையில் உயிரோடு காலம் தள்ளியவன் இப்பொழுது நடுக்கூடத்தில் மாலையுடன் கூடிய புகைப்படமாக சிரித்தபடியே தொங்கி கொண்டிருந்தான். அவனுக்கு அரசு வழங்கிய இழப்பீட்டில் இந்த போட்டோவுக்கான செலவுகள் செய்யப்பட்டிருந்தது,அந்த குடும்பத்தாரால்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-Oct-25, 1:06 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 10

மேலே