ஒளியேற்று 🪔🪔🪔🪔🪔🪔⚜️⚜️⚜️⚜️
அன்று ஒரு நாள் பனிக்காலத்தின் கார்த்திகை மாதத்து திங்கள் கிழமை. எப்பொழுதும் போலவே துரு துரு வென்று இருக்கும் சுயா, அன்று மட்டும் படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமின்றி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். கடந்தகால நினைவுகள் அவள் மனதைக் குடையத் தொடங்கியிருந்தது. எதையும் மறந்துவிடும் சூழலில் மனது இருக்கவில்லை. மின்னல் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் மணித்துளிகளை இழுத்துப் பிடித்து நிறுத்தி ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க முடியாதவாறு, அதன் பின்னிற்கும் முன்னுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த நகர வாழ்க்கையிலும் நனைந்து கொண்டிருக்கிறது நினைவுகள்.
கார்த்திகை மாதமென்றாலே ஊரிலெல்லாம் மாவீரர் நாள் கொண்டாட்டத்திற்கான நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்புக்கள் எல்லாப் பாடசாலைகளிலும் தொடங்கியிருக்கும். அதுவும் 1995 ஆம் ஆண்டு மாங்குளத்தில் நடந்த மாவீரர்தின நிகழ்வு மறக்கவே முடியாத அளவிற்கு அவள் மனதில் பதிந்ததற்கு ஏதோ காரணம் இருக்கத்தான் வேண்டுமென்று அவள் அடிக்கடி நினைப்பதுண்டு. 15 வயதே நிரம்பிய சுயா பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலமது. அந்தப் பயங்கரமான சூழலிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒன்றுகூடி திறந்த வெளியில் மேடையமைத்து வெகு சிறப்பாகவும் அதே நேரம் பலத்த பாதுகாப்புடனும் நடைபெற்ற மாவீரர் நிகழ்வு அது. மக்கள் திரள் திரளாக ஊர்திகளில் வந்திறங்கிய காட்சி இன்னும் மனக்கண்முன் திரையிட்டு காண்பிக்கின்றது. அதன்பின்பு அப்படியொரு மாவீரர் நிகழ்வை அவள் பார்த்ததில்லை.
என்ன செல்லம் இன்னும் நீங்கள் எழும்பவில்லையோ என்ற கணவனின் அதட்டல் கேட்டு சுய நினைவுக்கு திரும்பிய சுயா, ஏன் எப்பவும்போல ஓடிக் கொண்டிருக்கச் சொல்கிறீர்களா? கொஞ்சம் அமைதியா இருந்து சிந்திக்க விடமாட்டீங்கள் போல! என்று கூறிக்கொண்டே எழுந்து குறியலறை நோக்கி விரைந்தாள். நிமிடங்கள் அத்தனையையும் காசாக்க வேண்டும் என்ற ஐரோப்பிய பொருளாதார கொள்கைக்கு வாழ்க்கைப் பட்டவர்களுக்கு, கொஞ்சம் சுய சிந்தனைக்கும் மதிப்பளிக்க வேண்டுமென்ற எண்ணம் வரவே வராது, என்று மனதிற்குள் நினைத்தபடி காலைக் கடன்களை முடிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். ஆனாலும் அவள் மனம் மீண்டும் தாயகம் நோக்கியே பறந்து கொண்டிருந்தது..
ஈழத்தை விட்டு புறப்படும்போது சுயாவிற்கு 19 வயது. அது ஒரு மிக நெருக்கடியான சூழல். ஜெயசிக்குறு ராணுவ நடவடிக்கையால் வன்னி மக்கள் இடம்பெயர்ந்து மல்லாவி என்ற இடதில் கரையொதிங்கியிருந்தார்கள். அங்குதான் சுயாவின் குடும்பமும் எல்லாவற்றையும் இழந்த நிலையில் தஞ்சம் புகுந்திருந்தார்கள். ஊரில் இருக்கும்போது போராளிகள் சுயாவின் வீட்டிற்கு வருவதும் அவர்கள் தந்தையாரோடு உரையாடுவதையும் எப்போதாவது பார்த்திருக்கிறாள் சுயா. போராளிகள் மரியாதையோடு நடந்து கொள்வதையும் அவதானித்திருக்கிறாள். ஆனாலும் அப்பா எதையுமே வீட்டில் கதைப்பதில்லை. போராட்டம் பற்றிய உணர்வையும் ஊட்டி வளர்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் ஊர்காவற்துறை பயிற்சி எடுத்துக்கொண்டதால் பலமுறை உயிர்பிழைக்க உதவியாக இருந்ததென்று சொல்லுவார். பயிற்சி எடுத்துக்கொண்ட காலத்தில் அதிகாலையில் சற்றுக் கனமான தடியொன்றை கையில் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு நாளும் வீட்டைச் சுற்றி ஓடுவார். ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் பலப்படுத்திய அரசு ஒன்று இருந்தது அன்று.
இவற்றையெல்லாம் ஏன் இவள் இன்று மென்றுகொண்டிருக்கிறாள்? புலம் பெயர் தேசத்தில் இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்பு குடிபுகுந்தவள் சுயா. புதிய மொழி, பரீட்சயமில்லாத பண்பாடு, உடலை விறைக்கச் செய்யும் காலநிலை, புதிய சமூகம் என இவையெல்லாவற்றிற்கும் ஈடுகொடுத்து இசைவாக்கமடைவதற்குள் காலம் வெகு விரைவாக ஓடிவிட்டது. ஆனாலும் அவளோடு ஒட்டிக்கொண்ட தாய்மொழிப் பற்றும் தாய் மண் நேசமும் அவளைத் தினம் தினம் வாட்டியது. புலம் பெயர் நாடுகளில் ஒவ்வொரு தேசத்தவரும் தம் தாய்மொழி மீதும் தம் சமுகத்தின்மீதும் கொண்டுள்ள கரிசனையைப் பார்க்கின்றபோது நம் தாய் நாட்டுப் பற்று இன்னுமின்னும் மேலோங்கத்தான் செய்கிறது, என்பது சுயாவின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. மார்கழி மாதமென்றாலே எல்லா வீடுகளிலும் வண்ண வண்ண மின்குமிழ்கள் மிளிரத் தொடங்கிவிடும்.. அதுபோல கார்த்திகை மாதமென்றால் உலகெங்கும் பரந்து வாழும் நம் தமிழர் வீடுகளையும் வண்ண விளக்குகளால் ஏன் நாம் அலங்கரிக்கக் கூடாது? ஏன் அதுவே ஒரு பண்பாடாக வளர்ச்சி பெறக் கூடாது? இவள் தன்னைத் தானே கேள்வி கேட்கிறாள்.
இருட்டடிக்கப்பட்ட நம் தாயகக் கனவிற்கு ஒளி கொடுக்க இங்குதான் தொடங்க வேண்டும்!
ஒளியைக் கண்டு யாரும் ஒதுங்குவதில்லை. எல்லா வீடுகளும் ஒளிரட்டும். உலகமே திரும்பிப் பார்க்கட்டும். உலகமே இணைந்துதான் மாவீரச் செல்வங்களின் கனவுகளைத் தகர்த்தார்கள் என்று முணு முணுத்தபடியே கார்த்திகை மாதத்து முதல் நாள் அன்று வெளிச்சம் மறைந்து இருள் சூழத் தொடங்கிய மாலை நேரம், இரண்டு மெழுகு வர்த்தியை ஏற்றி வீட்டின் கதவைத் திறந்து வெளியில் வராந்தாவில் வைத்தாள். சிறிய கண்ணாடிக் கதவுகளுக்குள் அடைபட்ட ஒளி பிரகாசித்துக்கொண்டிருந்தது.அதைப்பார்த்த அயல் வீட்டு வெள்ளைக்காரர்களும் ஒவ்வொரு நாளும் மெழுகுவர்த்தி ஏற்றி அவ்வாறு வராந்தாவில் வைப்பதை அவதானித்தாள் சுயா. அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
சுய நலம் நிறைந்த மனிதர்கள் வாழும் பூமியில் தன்னையே தியாகம் செய்த மாபெரும் சக்தி வாய்ந்த மனிதர்கள் காலங் காலமாக வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள்தான். ஆனாலும் நம் மாவீரச் செல்வங்களின் அர்ப்பணிப்பை முன்பு ஒருபோதும் வரலாறு கண்டதற்கான தடயங்களில்லையல்லவா? இதைத் தடம்பதிக்க தரணியெங்கும் ஒளியேற்றச் செய்வோமா? என்ற அறைகூவலுடனே நகர்கிறது அவளுக்கு கார்த்திகை மாதம்.......
முற்றும்