கண்ட நாள் முதலாய்-பகுதி-44

....கண்ட நாள் முதலாய்....

பகுதி : 44

"ஊரில ஆயிரத்தெட்டு ப்ரண்ட்ஸ் வைச்சிருக்கிறவன் எல்லாம் சந்தோசமா இருக்கான்...நான் ஒரே ஒருத்தியை ப்ரண்டா வைச்சிக்கிட்டு பட்ற அவஸ்த்தை இருக்கே..."என்றவாறே தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் மனதிற்குள்ளேயே புலம்ப ஆரம்பித்து விட்டாள் பவி...

மணமேடைக்கு ஸ்வியை அழைத்துச் சென்றவள்...அங்கே அவனைக் காணுவாளென்று எங்கே எதிர்பார்த்தாள்...??ஆனாலும் அவள்தான் அவனைக் கண்டாளே தவிர...அவன் எங்கேயோதான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்...அவள் அறிந்த வரையில் அவன் அவளையும் துளசியையும் பார்க்கவில்லை...

இனி என்னதான் அவனே துளசியைக் கண்டு வந்து பேசினாலும் துளசியின் உள்ளத்தில் அரவிந்தனைத் தவிர வேறு யாருக்குமே இடமில்லையென்பதை பவி நன்றாகவே அறிவாள்...துளசியின் பேச்சுக்களிலிருந்தே அவள் அரவிந்தனை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவளால் துளசியை நினைத்துப் பவிக்கு சிறிதும் பயம் ஏற்படவில்லை...

ஆனால் எங்கே அவன் துளசியிடம் வந்து எக்குத்தப்பாக ஏதும் பேசி அதனால் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் அரவிந்தன் துளசியுடைய வாழ்க்கையில் குளறுபடிகள் ஏதாச்சும் ஏற்பட்டுவிடுமோ..??என்பதுதான் அவளுள் தற்போது பயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது..

இதே குழப்பத்தோடே அவனை எப்படிச் சமாளிக்கலாமென்று மணமேடையில் நின்று கொண்டிருந்தவனையே சிந்தனை தேங்கிய விழிகளோடு நோக்கிக் கொண்டிருந்தவள்,எதேட்சையாக துளசியைத் திரும்பிப் பார்த்த போதுதான் அவளது கோபப் பார்வையையும் கண்டு கொண்டாள்...

"இவ எதுக்கு இப்போ நம்மள வில்லி ரேஞ்சுக்கு பார்த்து வைக்கிறா...இவ இப்போ எதுவும் நம்மகிட்ட கேட்ட மாதிரியும் தெரியலையே...என்னவாயிருக்கும்...??.."என்று அதைப்பற்றி அப்போதைக்கு அதிகம் அலட்டிக் கொள்ளாமல்,கோபத்தின் காரணம் என்னவென்று அவளிடமே நேரடியாகக் கேட்டுக் கொண்டாள் பவி..

"என்னடி..??...எதுக்கு இப்போ என்னை இப்படி முறைச்சு முறைச்சு பார்த்திட்டிருக்க...??..."

"நீ பண்ணிட்டிருக்கிற வேலைக்கு உன்னை முறைக்காமா...வேற என்னடி பண்ணுவாங்க...??.."

"இது என்னடா வம்பா போச்சு...நான் இப்போ அப்படி என்னதான்டி பண்ணிட்டேன்..??புதிர் போடாம என்னென்னு விசயத்தை சொல்லு முதல்ல...??..."

"நீ எதுக்கு இப்போ அவரையே பார்த்திட்டிருக்க...??..."

"அடக்கடவுளே....இவனை நான் பார்த்தா இவளுக்கென்னவாம்...??...அவராமே அவர்...அன்னைக்கு அவனை இவ பார்க்கலைன்னுதானே சொன்னா...இப்போ எதுக்கு இப்படிக் கொதிக்குறாள்...??..."

ஏற்கனவே அவனால் ஏதும் பிரச்சினை வந்துவிடக்கூடாதென்ற பதற்றத்தில் இருந்தவள்,இப்போது துளசியும் அவனிற்காய் அவளின் மேல் எரிந்து விழுந்ததில் மனதிற்குள் அதுவரை நேரமும் அடக்கி வைத்திருந்த மொத்தக் கோபத்தையும் துளசியின் மேலேயே காட்டினாள் பவி...

"நான் அவனைப் பார்த்தா உனக்கென்னடி...நான் என்ன உன்னோட புருசனையா பார்த்தேன்...??..."

"ஏன்டி கேட்கமாட்ட...நீ வேற யாரையும் பார்த்துத் தொலைச்சிருந்தா எனக்கென்ன வந்திச்சு...நீ என்னோட அரவிந்தனையில்ல ஒரு மார்க்கமா பார்த்திட்டு இருந்த...இதில வேற உன்னோட புருசனையா பார்த்தேன்னு கேள்வி வேற...??..."

பவிக்கு அவள் சொன்னதை உள் வாங்கிக் கொள்ளவே சிறிது நேரம் பிடித்தது...

"இவள் என்ன சொல்கிறாள்...என்னோட அரவிந்தன் என்றால்...??..அதற்கு மேலும் அவள் எதையும் யோசிக்க வேண்டிய தேவையிருக்கவில்லை...அவளுக்கு எல்லாமே புரிந்து போனது...ஆனால் இது எப்படிச் சாத்தியமானது என்பதைத்தான் அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை...

அவள் அறிந்த வரைக்கும்...துளசி அன்று பீச்சில் வைத்து அரவிந்தனைக் கண்டிருக்கவில்லை...அப்படிக் கண்டிருந்தால் அவன்தான் தன் எதிர்காலக் கணவன் என்ற விடயம் தெரிந்த போது அவள் அவளுடனேயே போராடியிருக்க மாட்டாள்...அன்று அவனைக் கண்டது தான் ஒருத்தியாக மட்டுமேதான் இருக்க முடியும்...ஆனால் அவளுமே துளசியின் கணவன் என்ற வகையில் அரவிந்தனிடம் இந்த நிமிடம் வரையிலும் அறிமுகமாகிக் கொள்ளவில்லை...

ஆரம்பத்திலேயே தான் அவனது போட்டோவைப் பார்த்திருந்தால் துளசியுடைய வாழ்க்கையின் ஆரம்பமே சிறப்பாக அமைந்திருக்கும்...ஆனால் நாட்கள் சென்றாலும் அவளுடைய வாழ்க்கையில் அவள் சந்தோசமாக இருக்கிறாள் என்ற திருப்தியே பவிக்கு போதுமானதாக இருந்தது...இப்போது அரவிந்தன்தான் உன்னை அன்று காதலில் விழச் செய்தவன் என்று சொன்னால் இன்னும் சந்தோசப்பட்டுக் கொள்வாளே தவிர அவள் அரவிந்தனின் மேல் வைத்துள்ள காதலில் எந்த மாற்றமுமே வந்துவிடப் போவதில்லை...

ஆனாலும் இது அனைத்தையும் தாண்டி பவியின் ஆழ் மனதை ஒரு விடயம் குடைந்து கொண்டுதான் இருந்தது..துளசி அன்று அரவிந்தனைப் பார்க்கவில்லையென்றாலும்...அரவிந்தன் துளசியைப் பார்த்தும் கூட ஏன் இதுநாள் வரையிலும் அவளிடம் இதைப்பற்றிச் சொல்லவில்லை என்பதே அவளது மனதை உறுத்திக் கொண்டிருந்த விடயம்...

அதை அப்போதைக்கு தள்ளி வைத்தவள்,துளசியை அப்படியே அணைத்துக் கொண்டாள்...அவள் மனம் சந்தோசத்தில் தாண்டவமாடிக் கொண்டிருந்தது...இனி எந்தப் பிரச்சினையுமே இல்லை என்பதில் பவியின் மனம் அமைதி கொண்டது...ஆனால் பாவம் துளசிக்குத்தான் பவியின் நடவடிக்கைகள் அனைத்தும் வித்தியாசமாகவே இருந்தது....

அவளோ அவளிடம் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறாள்...இவள் அது எதற்கும் பதில் சொல்லாமல் அவளைக் கட்டிப்பிடித்துத் துள்ளிக் கொண்டிருந்தால்,துளசியும்தான் எதை என்று நினைத்துக் கொள்வது...??..அவளைத் தள்ளி நிறுத்தி ஒரு மார்க்கமாகப் பார்த்தவள்,அவளை அங்கிருந்து நகர்த்தி மண்டபத்திற்கு வெளியே அழைத்து வந்தாள்...

"இப்போ சொல்லு.."

"என்னத்தடி சொல்லுற...??..."

"ம்ம்...காலையிலிருந்து நீ ஆளே சரியில்லை...அப்படி என்னதான்டி ஆச்சு உனக்கு...??...இப்பக் கூட உன் கூட நான் சண்டை போட்டிட்டு இருக்கேன் நீ என்னடான்னா நான் என்னமோ உன்னை கொஞ்சிட்டு இருந்த மாதிரி என்னைப் பிடிச்சுத் துள்ளிட்டு இருக்க...??இதுக்கு மேலையும் என்னால பொறுமை காக்கா முடியாதுமா...ஒழுங்கா உனக்குள்ள என்ன ஓடிட்டு இருக்கின்னு சொல்லிடு..."

துளசியோ பவியின் விசித்திரமான நடத்தைகளிற்கு முடிவு கட்டிவிடும் நோக்கில் பேசிக் கொண்டிருக்க...பவியோ அவள் பேசி முடித்ததும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கிவிட்டாள்...அது துளசிக்குள் இருந்த கோபத்தை இன்னும் மிகைப்படுத்த...

"இப்போ எதுக்குடி சிரிக்குற...??..."

"கோவிச்சுக்காதடி...இன்னைக்கு காலையில இருந்து மனசுக்குள்ளே மட்டும்தான் பேசிட்டு இருக்கேன்...இப்போதான் மனசுவிட்டே சிரிக்க முடியுது...என்னைக் குடைஞ்சிட்டிருந்த எல்லா விசயத்துக்குமே இப்போதான் பதில் கிடைச்சிச்சு..."

"என்ன புரியலையா...??...இரு எல்லாத்தையும் உனக்குத் தெளிவாவே சொல்லுறன்...முதல்ல உன் விசயத்தை சொல்லிடுறன்...அப்புறமா என்னோடது..."என்று புன்னகையோடு ஆரம்பித்தாள் பவி...

"அன்னைக்கு பீச்சில ஒருத்தர் கூட மோதினியே,அவரு யாருன்னு உனக்குத் தெரியுமா..??.."

அவள் கேட்டதுமே அன்றைய நாளின் நினைவில் மனமுடைந்து போனவள்,உடனேயே தன்னைச் சமாளித்துக் கொண்டு நிமிர்ந்தாள்...

"அது யாரா வேணும்னாலும் இருந்திட்டுப் போகட்டும்...நான் யாரைப்பற்றியும் தெரிஞ்சுக்க விரும்பல...அது என் வாழ்க்கையில எப்பயோ முடிஞ்சு போன அத்தியாயம்...அதைப்பத்தி நினைச்சுப் பார்க்க கூட நான் விரும்பல...இப்போ என் னோட வாழ்க்கையில அரவிந்தன் மட்டும்தான்...என்னைக்குமே அரவிந்தன் மட்டுமேதான்..."என்று பேசி முடித்தவள்...அதற்கு மேலும் அங்கே நிற்காமல் அங்கிருந்து கிளம்பினாள்...ஆனால் பவி அடுத்ததாய் சொன்ன செய்தி அவளைத் தடுத்து நிறுத்தியது...

"ஒருவேளை அந்த அவரு உன்னோட அரவிந்தனா இருந்தா,என்ன பண்ணுவ...??.."என்று குறும்புச் சிரிப்போடு கேட்டாள் பவி..அவளது கேள்வியில் அதிர்ந்து திரும்பியவள்...

"என்ன...என்ன சொல்லுற...நீ உண்மையாத்தான் சொல்லுறியா...??.."அவள் மனதில் பல்வேறுபட்ட உணர்வலைகள் ஒரே நேரத்தில் தோன்றி அவளை இம்சிக்கத் தொடங்கியது...

"யெஸ் துளசி...அன்னைக்கு உன்னை காதல்ல தவிக்கவிட்டிட்டுப் போனதும் அரவிந்தன்தான்...இன்னைக்கு உன்னை காதல்லயே முழ்கடிச்சிட்டிருக்கிறதும் அதே அரவிந்தன்தான்.."

"அதனாலதான் அவரை மணமேடையில பார்த்ததும் அவரையே அதிர்ந்து போய் பார்த்திட்டு இருந்தேன்......நீ உன்னோட அரவிந்தன்னு சொன்னதும்தான் எனக்கு எல்லாமே தெளிவாச்சு...."

"பவி.."என்றவளுக்கு வார்த்தைகள் வெளிவர மறுத்தது...அவள் விழிகள் முதற் தடவையாக ஆனந்தத்தில் கண்ணீர்த்துளிகளைப் பரிசளித்தது...

அன்று அவளை மோதலிலேயே காதலால் கட்டிப் போட்டவன் அவளது அரவிந்தனா..??மீண்டும் மீண்டும் அதே கேள்வியையே அவளது மனம் கேட்டுக் கொண்டது...இப்படியொரு திருப்பத்தை அவள் எதிர்பார்க்கவேயில்லை...ஆனால் பவிக்குள்ளும் வந்த சந்தேகம் துளசிக்குள்ளும் வந்ததில் அவள் மீண்டும் குழம்பத் தொடங்கினாள்...

துளசியின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எதுவும் பேசாமல் மௌனமாகவே நின்றவள்,அவளின் முகம் திடீரென மாறுவதைக் கண்டு என்னவென்று கேட்டாள்...

"என்னடி ஆச்சு...??..."

"இல்லை...நான்தான் அன்னைக்கு அரவிந்தனைப் பார்க்கல...ஆனால் அரவிந்தன் என்னைப் பார்த்தார்தானே...அப்புறமும் ஏன் என்கிட்ட இதுவரைக்கும் அவர் எதுவுமே சொன்னதில்லை...??.."

இதற்கு என்ன பதிலைச் சொல்லி அவளைச் சமாளிப்பதென்று பவிக்குமே புரியவில்லைதான்...ஆனாலும் அவளை அப்படியே விட்டுவிடவும் அவளிற்கு மனமில்லை...அதனால்...

"ஒருவேளை நீயாவே கேட்கட்டும்னு விட்டிருப்பாரோ என்னவோ..??.."

"அதெப்படி நானாவே தெரிஞ்சுக்க முடியும்..??..அவரை நான் அன்னைக்கு பார்க்கலைன்னு அரவிந்தனுக்குத் தெரியும்தானே..??.."

"ஆஆ...அது...ஆ அதான் நான் அரவிந்தனைப் பார்த்தேனே...நான் உன்கிட்ட சொல்லியிருப்பேன்னு நினைச்சிருக்கலாம்தானே...அவருக்கு நான் அவரோட போட்டோ கூட இதுவரைக்கும் பார்த்ததில்லைன்னு எங்கே தெரியப்போகுது...??.."

"தெரியுமே....உன்னைப்பத்தி அரவிந்தன்கிட்ட சொல்லும் போதே நீ இன்னும் அவரைப் பார்க்கலைன்னு சொல்லியிருக்கேன்...அப்போ கூட அவர் ஒன்னும் சொல்லலையே பவி...??..."

அவளது ஆதங்கத்தை பவியால் புரிந்து கொள்ள முடிந்தது...ஆனாலும் அவளின் அடுத்தடுத்தான கேள்விகளுக்கு என்ன பதிலைச் சொல்லி சமாளிப்பதென்றுதான் அவளிற்கு தெரியவேயில்லை...

"இங்க பாரு துளசி...அரவிந்தன் உன்கிட்ட இதை சொல்லாம இருந்திருக்கிறார்னா..அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கும்...நீ இதைப் போட்டுக் குழப்பிக்காம,ஸ்வியோட கல்யாணம் முடிஞ்சதும் எல்லாத்தையும் அரவிந்தன்கிட்ட கேட்டுத் தெளிவு பண்ணிடு...அப்புறம் இனியும் பொறுமையா இருக்காம உன் மனசில இருக்கிறதையும் சொல்லிடு..."

"ம்ம்..."என்று அவள் சொன்னதே அப்போதைக்கு பவிக்கு போதுமானதாக இருக்க...அவளை ஒருவாறு அமைதிப்படுத்தி மணமேடைக்கு அழைத்துச் சென்றாள்...

மணமேடையில் ஒருபுறமாய் அரவிந்தனும்,மறுபுறமாய் அர்ஜீனும் நின்றிருக்க...அரவிந்தன் அருகே துளசியும் அர்ஜீனிற்கு அருகே பவியுமாய் போய் நின்று கொண்டார்கள்...

அவர்கள் இருவருமே அவர்களுக்கானவர்களுடன் இணைந்து நின்ற அந்த நேரத்தில்...அனைவரின் ஆசிர்வாதங்களுடனும் கெட்டி மேளம் ஒலிக்க பரத் ஸ்வேதாவின் திருமணம் அழகாய் நடந்தேறியது....ஸ்வேதாவின் கழுத்தில் மங்கலநாணினை அணிவித்து அவளைத் தன்னுடையவளாக்கிக் கொண்டான் பரத்...

அதே போலொரு மேடையில் தன்னையும் பவியையும் இணைத்துப் பார்த்துக் கொண்ட அர்ஜீன்,தனக்கருகே நின்றவளின் கரத்தினை மென்மையாகப் பற்றிக் கொண்டான்...அவன் கரம் பற்றிய மறுநொடியே அவனைத் திரும்பிப் பார்த்தவள்,அவன் விழிள் சொன்ன செய்தியில் மனம் நிறைந்து நின்றாள்...

இதுநாள் வரையிலும் உள்ளே அழுது கொண்டிருந்தவள்,இன்று தன் காதல் நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில் வெளிப்படையாகவே ஆனந்தத்தில் கலங்கி நின்றாள்...அவளது உணர்வுகளைப் புரிந்து கொண்டவனாய் அவனும் அவளது கரத்தினை இன்னும் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான்...

அவன் கொடுத்த அழுத்தம் அவள் முகத்தில் கண்ணீரோடு புன்னகையையும் சேர்க்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தத்தோடு புன்னகைத்துக் கொண்டார்கள்...இருமனங்கள் ஏற்கனவே ஒருமனதான மேடையில் இவர்களும் ஒருமனதாகி இணைந்து கொள்ள...அங்கே இன்னும் இரண்டு மனங்கள் சேரவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தன...

அப்போது துளசியும் அவர்களின் திருமணநாளைத்தான் எண்ணிக் கொண்டிருந்தாள்...அன்று அவனை முதன் முறையாகப் பார்த்த போது எழுதிக் கொண்ட கவிதையின் இறுதிவரிகளும் கூட அப்போது அவளின் நினைவிற்கு வந்தது...

"என் கண்கள்
கண்டு கொள்ளாத உன்னை
என் கரங்கள்
பற்றிக் கொள்ளுமா...??.என்ற அவளின் கேள்விக்கு அவள் அறியாமலேயே தன்னவன் விடை தந்துவிட்டான் என்பதில் காதல் கொண்ட அவளின் மனம் தன்னவனை நினைத்துக் கர்வம் கொண்டது....என்றும் போலவே அவனது அந்தக் காதலில் அவன் பக்கமாய் இழுக்கப்பட்டவள்...இன்று முழு மனதோடு...நெஞ்சம் முழுதும் காதல் பொங்கி வழிய அவனது கரத்தினை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்...

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே புரியாமல் நின்று கொண்டிருந்தவன்,அவளின் காதல் தீண்டலில் உயிர்த்தெழுந்து கொண்டான்...விழித்து நிகழ்காலத்திற்கு வந்தவனுக்கு நிஜங்கள் மனதை வதைக்க அவளது கரத்தினை விலக்கி விட்டவன்,அவளைத் திரும்பிப் பார்க்காமலேயே சென்றுவிட்டான்...

அவனது அந்த செய்கை அவள் மனதை சில்லு சில்லாய் உடைக்க,கண்ணீர் வழிய அவனின் விலகலுக்கான காரணம் புரியாது கலங்கி நின்றாள்...



தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (9-Feb-18, 12:14 pm)
பார்வை : 520

மேலே