கோடைகாலம்

கோடைகாலம் (Summer) என்பது நான்கு பருவகாலங்களில் வசந்த காலத்திற்கும் இலையுதிர் காலத்திற்கும் இடையே வரும் வெப்பம் மிகுந்த காலமாகும். நீண்ட பகல் மற்றும் குறைந்த இரவின் மூலம் இக்காலத்தை அறியலாம். புவியில் அமைந்துள்ள இடத்தின் அடிப்படையில் பருவகாலங்கள் வெவ்வேறு நாட்கள் மற்றும் வெவ்வேறு காலங்களில் தொடங்குகின்றன. பொதுவாக தென் அரைக்கோளத்தில் கோடைகாலம் நிலவும் போது, வட அரைக்கோளத்தில் குளிர்காலம் நிலவும். வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் கோடைகாலத்தின் போது ஈரமான பருவம் நிலவுகிறது. கோடைகாலத்தில் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல கடல் பகுதிகளில் வெப்பமண்டலப் புயல்கள் உருவாகி நீடித்திருக்கும். கண்டங்களின் உட்பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் இடி, மின்னல்கள் தோன்றி ஆலங்கட்டி மழையைத் தோற்றுவிக்கிறது.

வானியலாரின் பார்வையில் சம இரவு நாட்களும் சூரிய கணநிலை நேரமும் பருவகாலங்களின் மத்தியப் புள்ளியில் அமையும். அதனைக் கொண்டு அவர்கள் பருவத்தின் துவக்கத்தைக் கணக்கிடுகிறார்கள். சராசரி வெப்பநிலையைக் கொண்டு அளவிடக் கூடிய பருவத்தின் துவக்கமானது காலநிலையின் வித்தியாசத்தால் இதில் இருந்து மாறுபடும். வானிலை ஆராய்ச்சியாளர்களின் முடிவின் அடிப்படையில் வட அரைக்கோளத்தில் கோடைகாலம் சூன், சூலை, மற்றும் ஆகத்து மாதம் முழுவதும் நீடித்திருக்கும். அதே போல் தென் அரைக்கோளத்தில் டிசம்பர், சனவரி, மற்றும் பிப்ரவரி மாதம் முழுவதும் நீடித்திருக்கும். பொதுவாக கோடைகாலம் என்ற இந்தப் பருவம் சூரிய ஒளியை முதன்மையாகக் கொண்டு நீண்ட (வெப்பம் அதிகமான) பகல் பொழுதுகளைக் கொண்டிருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் விளக்கமளிக்கிறது.

வானியலாரின் அணுகுமுறையில் சமஇரவு நாளில் தொடங்கி சூரியகணநிலை வரை பகல் பொழுது நீண்டு கொண்டு செல்லும். அதன்பின் படிப்படியாக பகல் பொழுதுகளின் நீளம் குறைகிறது. கோடைகாலம் வசந்த காலத்தை விட அதிக பகல் நேரத்தைக் கொண்டுள்ளது.

பிரித்தனில் கோடைகாலம் மே மாத மத்தியில் தொடங்கி ஆகத்து மாத மத்தியில் நிறைவடையும். சம இரவுக் காலம் மற்றும் சூரியகணநிலை அடிப்படையிலான பயன்பாட்டையே அமெரிக்க ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. சில பிராந்தியங்கள் கண்டத்தின் காலநிலையை ஆறு வார கால தாமத வெப்பத்தின் அடிப்படையில் அளவீடு செய்கின்றன.

சூரியகணநிலை மற்றும் சம இரவு நாட்கள் ஆகியவற்றை பருவகாலத்தின் ஆரம்பமாகக் கொள்ளாமல் மையப் புள்ளியாக கருத வேண்டும். சீன வானிலையில், மே 5 அல்லது அதையொட்டி ஆரம்பமாகும் கோடைகாலம் ஜிகி (சூரிய குடும்பம்) அல்லது லிசியா என்று அழைக்கப்படுகிறது. மேலும் அது கோடைகால ஆரம்பம் என்றும் அழைக்கப்படும். சீனாவின் கோடைகாலம் ஆகத்து 6 அல்லது அதையொட்டி முடிவடைகிறது. மேற்கத்திய பயன்பாட்டின் உதாரணமாக வில்லியம் சேக்சுபியர் இயற்றிய எ மிட் சம்மர் நைட்ஸ் டிரீம் என்ற நாடகம் கோடைகாலம் உச்சம் பெற்ற வருடத்தின் மிகக் குறைந்த இரவு நேரத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

அயர்லாந்தின் தேசிய வானிலை மைய ஆய்வு அடிப்படையில் சூன், சூலை, மற்றும் ஆகத்து மாதங்கள் கோடைகாலம் ஆகும். எனினும் அந்நாட்டு நாட்காட்டியின் படி கோடைகாலமானது மே 1 ஆம் தேதி தொடங்கி ஆகத்து 1 ஆம் தேதி முடிவடைகிறது. அயர்லாந்தின் பள்ளிப் பாட புத்தகங்கள் கோடைகாலத்தை வானிலை மையம் கூறும் சூன் 1 ஆம் தேதியிலிருந்து பின்பற்றாமல் பாரம்பரியமாக வரும் மே 1 ஆம் தேதியிலிருந்து பின்பற்றுகின்றன.

தென் மற்றும் தென்மேற்கு ஆசியாவில் எங்கெல்லாம் மழைப்பொழிவு ஏற்படுகிறதோ அங்கு கோடைகாலம் என்பது பொதுவாக மார்ச் முதல் மே/சூன் மாத ஆரம்பம் வரை இருக்கும். அது அவர்களுக்கு அந்த வருடத்தின் வெப்பமான காலம் என்பதுடன், அதுவே பருவமழையின் இறுதிக் காலமாக வரையறுக்கப்படுகிறது.[சான்று தேவை]

அமெரிக்காவில் கோடைக்காலமானது பொதுவாக கோடை சூரியகணநிலை (சூன் 20 அல்லது 21) நாள் தொடங்கி இலையுதிர்கால சம இரவு நாள் (செப்டம்பர் 22 அல்லது 23) வரையான காலமாகும். அதிகாரப்பூர்வமற்றதாக அமெரிக்காவின் ஒரு சில பகுதிகளில் கோடைகாலமானது நினைவு நாள் வார இறுதியில் (மே மாதத்தின் கடைசி திங்கட் கிழமை) தொடங்கி தொழிலாளர் தின வார இறுதியில் (செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட் கிழமை) முடிவடைகிறது. அதே போல கோடைகாலத்தில் நிலவும் மற்றொரு நடைமுறை வழக்கம் என்னெவெனில், அந்த சமயத்தில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் "கோடை விடுமுறையால்" மூடப்பட்டிருக்கும். சூன் மாத மத்தியில் தொடங்கி ஆகத்து மாத இறுதி, மற்றும் செப்டம்பர் மாத தொடக்கம் வரை கோடைகாலம் நீடிக்கிறது. இதன் அடிப்படையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

கோடைகாலத்தில் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் ஈரமான காலநிலை காணப்படுகிறது. ஈரமான பருவத்தின் போது அடிக்கடி வீசும் காற்றினால் பருவ மாற்றம் ஏற்படுகிறது. இதுவே மழைக்காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஈரமான பருவகாலம் வெப்பமண்டல புல்வெளிகளில் காணப்படும் தாவரங்கள் வளர்வதற்கு ஏற்ற மிக முக்கிய காலமாக கருதப்படுகிறது. எனினும் பயிர்களை அறுவடை செய்வதற்கு முன்பாக ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு இந்த ஈரமான பருவகாலமே மிக முக்கிய காரணமாக விளங்குகிறது. இத்தகைய பருவகால மாற்றங்கள் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மக்களின் வாழ்வில் குறிப்பிடும்படியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிக வெப்பம் மற்றும் அதிகப்படியான மழைப்பொழிவு ஆகிய சமயங்களில் மலேரியா நோய் மிக வேகமாகப் பரவுகிறது.

ஈரமான பருவகாலத்தின் தொடக்கத்தில் பசுக்கள் கன்றுகளை ஈனுகின்றன. மெக்சிகோவிலிருந்து மொனார்ச் பட்டாம்பூச்சியின் வருகையைத் தொடர்ந்து மழைக்காலம் தொடங்குவதை தெரிந்துகொள்ளலாம். வெப்ப காலத்தில் காணப்படும் பட்டாம்பூச்சி வகையானது தனது சிறகுகளில் பெரிய புள்ளிகளைக் கொண்டிருக்கும், இதன் மூலம் மற்ற விலங்குகளிடமிருந்து அது தன்னை தற்காத்துக் கொள்கிறது. மேலும் அவை வறண்ட காலங்களை விட ஈரமான பருவகாலங்களில் சுறுசுறுப்பாகக் காணப்படுகிறது. வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்ப மண்டலத்தில், கடற்கரை ஓரங்களில் பெய்யும் மழையின் காரணமாக, முதலைகள் அதிக அளவில் வாழ்கின்றன என்பதுடன், கடலின் உப்புத் தன்மையும் குறைந்து காணப்படுகிறது.
1992 ஆம் ஆண்டு ஆகத்து மாத இறுதியில் தோன்றிய புயலின் படம்.

வட அட்லாண்டிக் பெருங்கடலில் வெப்பப் புயலானது சூன் 1 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 30 ஆம் தேதி வரை ஏற்படுகிறது. அதனுடைய உச்ச அளவானது ஆகத்து இறுதியில் தொடங்கி செப்டம்பர் முழுவதும் காணப்படும். புள்ளிவிவரத்தின் படி அட்லாண்டிக் புயல் காலம் செப்டம்பர் 10 ஆம் தேதி உச்ச நிலையை அடைகிறது. இந்த வெப்பப் புயலானது வட கிழக்கு பசிபிக் பெருங்கடலில் அதிக அளவில் காணப்படுகிறது. அதே சமயம் அட்லாண்டிக் பெருங்கடலில் குறைந்த அளவே காணப்படுகிறது. வடமேற்கு பசிபிக் பகுதியில் வெப்பப் புயலானது பிப்ரவரி மற்றும் மார்ச்சில் குறைந்தும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் அதிகமாகவும் இருக்கும். தென் அரைக்கோளப் பகுதியில் வெப்பப் புயல்கள் ஆண்டுதோறும் சூலை 1 ஆம் தேதி தொடங்கி வருடம் முழுவதும் காணப்படுகிறது. இதில் நவம்பர் 1 முதல் ஏப்ரல் இறுதி வரை வீசும் வெப்ப புயலும் அடங்கும். மேலும் அங்கு வெப்பப் புயலானது பிப்ரவரி மத்தியில் தொடங்கி மார்ச் மாத தொடக்கம் வரை உச்சம் பெற்று இருக்கும்.

வட அமெரிக்காவின் உட்பகுதியில் இடிகளை உருவாக்கும் மேகங்கள் ஆலங்கட்டி மழைப்பொழிவை மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் மதியம் மற்றும் மாலை வேளைகளில் உண்டாக்குகிறது. மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இதனை அதிக அளவில் காண இயலும். வட அமெரிக்காவின் சியேன்னே, யோமிங் ஆகிய இரு நகரங்கள் அதிக அளவில் ஆலங்கட்டி மழையைப் பெறுகின்றன. சராசரியாக ஒரு பருவ காலத்திற்கு ஒன்பது முதல் பத்து ஆலங்கட்டி புயல்கள் இங்கு ஏற்படுகின்றன.

கட்டுமானம்

குளிர் காலங்களின் போது காணப்படும் பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டிகள் ஆகியவற்றின் காரணமாக நிலநடுக்கோட்டிற்கு மேற்பகுதிகளில் உள்ள சாலைகளில் ஏற்படும் குழிகளை சீரமைக்க கோடைகாலம் தான் மிகவும் ஏற்றது. கட்டுமான வேலைகளில் திண்காறை இடுவதைப் போன்ற வேலைகளுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை தேவைப்படுகிறது. ஏனெனில் திண்காறை உள்ளிட்டவை குளிர்ந்த பகுதிகளில் காய்வதற்கு மிக நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது. புதிய பொருட்களின் மீது பனிப் பரவல் ஏற்படும் போது அதன் வலிமை மற்றும் நீடிப்புத்திறன் குறைகிறது.

பள்ளி விடுமுறை

விடுமுறை தேதிகளில் மாற்றம் இருப்பினும், பெரும்பாலான நாடுகளில் பள்ளிக் குழந்தைகளுக்கு கோடை காலங்களில் விடுமுறை விடப்படுகிறது. வட அரைக்கோளத்தில் கோடைகாலம் மே மாதத்தின் மத்தியில் தொடங்குகிறது. இருந்தபோதும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள பள்ளிகள் சூலை மாதத்தின் மத்தியில் அல்லது இறுதியில் முடிவடையும். தென் அரைக்கோளபகுதியில் பள்ளி விடுமுறையானது கிறிஸ்துமஸ் மற்றும் புது வருடப் பிறப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் கோடை விடுமுறைகள் கிறிஸ்துமஸ் விழாவிற்கு சில வாரங்கள் முன்பு தொடங்கி ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி மத்தியில் முடிவடையும்.

செயல்பாடுகள்

மக்கள் கோடைகாலங்களில் வெளியிடங்களுக்கு அதிக அளவில் செல்வதன் மூலம் இதமான வெப்பத்தை அனுபவிக்கிறார்கள். கடற்கரை மற்றும் சுற்றுலா செல்வது போன்ற செயல்பாடுகள் இந்த கோடைகாலத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. மட்டைப்பந்து, கைப்பந்து, தரைப்பந்து, டென்னிஸ் மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. நீர்ச் சறுக்கு விளையாட்டு ஒரு பிரபலமான கோடைகால விளையாட்டாகக் கருதப்படுகிறது.

எழுதியவர் : (10-Feb-18, 10:09 am)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : kodaikaalam
பார்வை : 1382

சிறந்த கட்டுரைகள்

மேலே