நாட்டுப்புற பாடல் முயற்சி - தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

தேனூறும் வாயினில
தெரியுதடி சின்னப்பல்லு
பல்லு அது பல்லு இல்ல
பளபளக்கும் முத்து கல்லு …!

தும்பைப்பூவு விழிபார்த்து
தூரத்தில மதிபூக்கும்
தூரத்தில மதிபார்த்து
தூங்குமல்லி பூபூக்கும்...!

பூமியில குழிவிழுந்தா
பொன்நகைங்க தான் கெடைக்கும்
பூவே ஒங்கண்ணக்குழி
புன்னைகைப்பு தையல்தரும் …!

செவ்வந்தி பூமயங்கும்
செவத்த உதட்டழகில்
மல்லிப்பூ தான்மயங்கும்
மணக்கும்வாய் பால்மணத்தில்…!

வெண்மதியும் செங்கதிரும்
வானத்தில சுத்துதடி
கண்மணி மேல்விழுந்த
கண்ணடியுந் தான்கரைய...!

கத்தரிக்காய் கூட்டும் ஒவ்வா
கடல்சுறா புட்டும் ஒவ்வா
ஆனாலும் திம்பேனே
அமுதூற எந்தேனே…!

பாலருந்தி எங்கண்ணே
பஞ்சணையில் கண்ணுறங்கு
பஞ்சுமெத்தை நோவுச்சுன்னா
நெஞ்சுமேல நீயுறங்கு…!

அறுவடையும் ஒஞ்சாச்சு
அவிச்சநெல்லும் வித்தாச்சு
அப்பன்காரன் வருவான்டி
அஞ்சுவண்டி சொப்போட….!

பட்டுசட்டை மாட்டிகிட்டு
பட்டணந்தான் போன மாமேன்
கட்டுக்கட்டா பொம்மைகள
மூட்டைகட்டி வருவான்டி …!

களமொழச்ச காளைக்கெல்லாம்
கஞ்சித்தண்ணி காட்டிடனும்
கண்மணியே கண்ணுறங்கு
காலையில முழிச்சிடனும்…!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (19-Feb-18, 6:18 am)
பார்வை : 98

மேலே