வன்முறை கலாச்சாரம்

அன்பார்ந்த மாணவர்களே,
‘‘மாணவர்களா இவர்கள் ? ரவுடிகள் ,பொறுக்கிகள்’’ என்று ஓயாமல் ஒப்பாரி வைக்கின்றனர் ஓட்டுக் கட்சிகள், மாணவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பத்திரிக்கை -தொலைக்காட்சி ஊடகங்களும் அலறுகின்றன. அரசோ, கல்லூரிகளில் போலீசை நிறுத்தி மாணவர்களை பீதியூட்டுகிறது.கல்லூரியை கலவரப் பகுதியாகக் காட்டுகிறது.
கல்லூரி மாணவர்களிடையே எப்போதாவது நடைபெறும் மோதல்களை வைத்துத்தான் மாணவர்களை ரவுடிகள்,பொறுக்கிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். இம்மோதல்களை போலீசும் – செய்தி ஊடகங்களும் ஊதிப் பெருக்கி வருகின்றன.
கல்லூரி மாணவர்களிடையே நடைபெறும் இந்த மோதல்களால், சில மாணவர்கள் பாதிக்கப்படுவதையும், இதைத் தொடர்ந்து சில மாணவர்கள் சிறையிலடைக்கப்பட்டு கல்லூரி வாழ்வை இழப்பதையும் நாம் மறுக்க முடியாது. இந்த நடவடிக்கைகள் மாணவர் ஒற்றுமையை சீர்குலைப்பவையே.இவைகள் சமூக அநீதிகளுக்கு எதிராக வீரம் செரிந்த பல போராட்டங்களை நடத்திய கடந்த கால மாணவர் வரலாற்றை கறைபடுத்துகின்ற செயல்கள். ஏழைக் குடும்பங்களில் பிறந்து பள்ளிப் படிப்பை முடிக்கவே கடன்பட்டு பல கனவுகளுடன் கல்லூரிக்குள் காலெடுத்து வைத்த நாம், 3 வருட டிகிரி முடிக்கும் முன்பே ’ ரவுடிகள் ,பொறுக்கிகள்’ என்று அவதூறு பட்டங்களை சுமப்பது கேவலமில்லையா? நண்பர்களாகப் பழக வேண்டிய நாம் ரூட்டுகள் – கல்லூரிகள் எனறு எதிரிகளைப்போல் அடித்துக் கொள்வது எந்த வகையில் நியாயம்?. எனவே இதை உடனே கைவிடுவோம்.நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்போம்.
சூழ்நிலைதான் ஒரு மனிதனின் நடவடிக்கையை தீர்மானிக்கிறது என்பது உண்மையென்றால், சீரழிந்த இந்த சமூக சூழலில் ஒரு சிறந்த சமூகப் பற்றுள்ள மாணவன் எப்படி உருவாக முடியும் ? அரசுக் கல்லூரிகளின் சூழ் நிலையும் இப்படித்தான் உள்ளது. ஏழை மாணவர்கள் என்பதற்காகவே, அரசுக் கல்லூரிகளில் குடி நீரும் இல்லை ,கழிவறை வசதியும் இல்லை , கேண்டீனும் இல்லை ,போதிய ஆசிரியர்களும் இல்லை ,ஆசிரியர் திறனை வளர்க்க அரசு முயலுவதும் இல்லை. மாணவர்களுடைய தனித்திறனை வெளிப்படுத்த விளையாட்டோ, கலாச்சார விழாவோ ,கவிதை, கட்டுரைப் போட்டிகளோ அறவே இல்லை. இந்த ஜனநாயக உரிமைகளுக்காகப் போராட மாணவர் சங்கத்திற்கும், அதற்கான தேர்தலுக்கும் தடை. மாணவனுக்கு இருந்த ஓரே ஒரு மகிழ்ச்சி பஸ் டே, அதற்கும் நீதிமன்றத் தடை . இந்த ஆரோக்கியமற்ற சூழ் நிலைக்கு மாணவர்களை தள்ளிவிட்ட இந்த அரசுக்கு அவர்களை ரவுடிகள்,பொறுக்கிகள் என்று கூறுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது ?
போதாக்குறைக்கு சினிமா கூத்தாடிகளும் சீரழிந்த ஊடங்களும் மஞ்சள் பத்திரிக்கைகளும் ’நோட்டு – புத்தகங்கள் வாங்கவே திண்டாடும் அரசுக் கல்லூரி மாணவர்களிடம் சூர்யா-வைப் போல் சிக்ஸ் பேக் காட்டவும் ,அதற்கேற்ற புதிய ,புதிய ஜீன்ஸ் ,டி –சர்ட் ,ஷூ போட்டுக் கொண்டு,அந்த நாயகனைப் போன்று பல மாணவிகளை வளைத்துப் போட பந்தா பண்ணும் ஆசையை வளர்க்கின்றன. ’தான் ஆசைப்பட்ட மாணவியிடம்’ பிறர் பேசுவது பொறுக்காமல் அடித்துக் கொள்வதும், , மங்காத்தா அஜித், வானம் சிம்பு போன்று குறுக்குவழியில் பணம் சம்பாதித்து ஜாலியாக வாழ பணம் பறிப்பதையும்(கட்டிங் போடுவது), பல பெண்களோடு சுற்றித்திரியும் ’டேட்டிங் ‘எனும் பொறுக்கிப் பண்பாட்டையும் பரப்பி வருகின்றன. நண்பனுக்கு துரோகம் செய்து அவன் காதலியை தன்வசப்படுத்திக் கொள்வது,அடுத்தவன் மனைவியை எப்படியாவது அடைய முயற்சிப்பது என்ற நச்சுப் பண்பாட்டை – இதை நியாயப்படுத்தும் ஒரு ’ கொலைவெறிப் பண்பாட்டை ’ – உருவாக்கி விட்டிருக்கும் தனுசை மானசீக ஹீரோவாக எற்றுக் கொண்டு வலம்வர கற்றுத்தருகின்றன.
மேலும் ,புதுப் புது செல்போன்களையும் பைக்குகளையும் காட்டி ஏங்க வைத்து நுகர்வு வெறியை ஊட்டிவருகின்றன. அதோடு, நடிகர் நடிகைகளின் ஆபாச வக்கிர கூத்துக்களையும் இலவச இணைப்பாக கொடுத்து மயக்குகின்றன. போதாக்குறைக்கு அரசும் டாஸ்மாக் ,கிரிக்கெட் என மலிவான விலையில் தரமான போதையை மாணவர்களுக்கு கொடுத்து சீரழிவுப் பண்பாட்டிற்கு நிரந்தர அடிமைகளாக்கி வருகிறது, போராடும் குணத்தையும் மழுங்கச்செய்கிறது.
ஓட்டுப் பொறுக்கிகளும் தங்களுக்கான அடியாட்களை உருவாக்குவதற்காக சாராயம், பிரியாணி, தலைக்கு இவ்வளவு ரூபாய் என்று போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களை விலை பேசுகிறார்கள். இந்த சீரழிவுகளில் சிக்கும் மாணவர்கள்தான் யாருடைய கல்லூரி பெரியது யாருடைய ரூட் பெரியது,மாப் காட்டுவது,வெயிட் காட்டுவது,கெத்துக் காட்டுவது என்று தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த மாநிலக்கல்லூரி மாணவர்களின் மோதல் இதற்கு ஒரு உதாரணம்
மாணவர்களோ செயல் துடிப்புள்ளவர்கள்,பயமறியாதவர்கள், அநியாயத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் என்பது உலக வரலாறு. நம் நாட்டிலும் அன்று இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடி வென்றது; ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைக்கு இந்திய அரசு துணைபோவதை கண்டித்து தமிழக அரசை முடக்கியது; தலைமைச் செயலகத்திற்காக ராணிமேரிக் கல்லூரி இடிக்கப்படவிருந்ததை தடுத்து நிறுத்தியது;இன்று மெட்ரோ ரயிலுக்காக பறிக்கப்படவிருந்த பச்சையப்பன் கல்லூரி இடத்தை மீட்டது போன்ற வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியவர்கள். இத்தகையப் போர்குணத்தை இந்த அரசும், போலீசும் ,அரசியல்வாதிகளும்,சினிமா-பத்திரிக்கை –தொலைக்காட்சி ஊடகங்களும் வளரவிடுமா ? விடாது.
நம்முடைய போர்குணத்தை மழுங்கடிக்கும் ஓட்டுப் பொறுக்கிகளையும் வகுப்புகளுக்குள் புகுந்து சுற்றிவளைத்து தாக்கும் போலீசையும் , நச்சுப் பண்பாட்டைப் பரப்பி சீரழிக்கும் மஞ்சள் பத்திரிக்கைகளையும் ,ஊடகங்களையும் நம்மை நெருங்கவிடாமல் அடித்து விரட்டுவோம்.இதற்கு மாணவர்களாகிய நாம் ஒரே வர்க்கமாக அணிதிரள்வோம். ரூட் என்று, கல்லூரி என்று ,ஏரியா என்று மோதிக் கொள்வதை நிறுத்துவோம். நமக்கு எதிரிகள் மாணவர்கள் இல்லை இந்த அரசும் – ஓட்டுப்பொறுக்கிகளும்-ஊடகங்களும் தான் என்பதைப் பிரகடனப்படுத்துவோம்.இவர்களுக்கு எதிராக ஒரு போராட்டக் களத்தை அமைப்போம்.இதில் பெற்றோர்- ஆசிரியர்களை இணைப்போம் மாணவர்களாகிய நம்மீது திணித்துவரும் ரவுடிகள் பொறுக்கிகள் என்ற அசிங்கத்தை அப்புறப்படுத்துவோம். நம்முடைய பெற்றோர்களின் வாழ்வையும், நமது கல்விகற்கும் உரிமையையும் பறித்துவரும் ’ஆட்சியாளர்களால் அலங்கரிக்கப்படும்’ மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்.
அனைத்துக் கல்லூரி மாணவர்களே!
கல்லூரி என்றும் ரூட் என்றும் நமக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்துவோம்!
மாணவர் ஒற்றுமையை கட்டியமைப்போம்!
போலீசு – ஊடகங்கங்கள்- ஓட்டுப் பொறுக்கிகள்தான் எதிரிகள் ,
மாணவர்கள் இல்லை என்பதை உணர்வோம்!
மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் ,கல்வியை வணிகமயமாக்கும் ,
நச்சுப் பண்பாட்டைப் பரப்பும் மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்!

எழுதியவர் : (28-Feb-18, 11:39 am)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : vanmurai kalacharam
பார்வை : 625

சிறந்த கட்டுரைகள்

மேலே