வினை முற்றிய தலைமகன் பாகற்குச் சொல்லியது - கார் நாற்பது 19

இன்னிசை வெண்பா

நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச்
செங்கான் மராஅந் தகைந்தன - பைங்கோற்
றொடிபொலி முன்கையாள் தோடுணையா வேண்டி
நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு! 19

- கார் நாற்பது

பொருளுரை:

கலப்பைப்படை வென்றியை யுடையவனது வெண்ணிறம் போல பூங்கொம்பினையும், செவ்விய தாளினையுமுடைய வெண்கடம்புகள் மலர்ந்தன; ஆதலால் என்மனம் பசுமையாகிய திரண்ட வளைகள் விளங்குகின்ற முன்னங் கையை யுடையாளின் தோள்கள் எனக்குத் துணையாக வேண்டி நெடிய காட்டு வழியைக் கடந்து சென்றது!

நாஞ்சில் வலவன் பலராமன்; அவன் வெண்ணிறமுடையன் என்பதனையும், கலப்பைப் படையால் வெற்றி யுடையன் என்பதனையும் ‘கடல்வளர் புரிவளை புரையுமேனி, அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்' என்னும் புறப்பாட்டானும் அறிக.

மராஅம் - வெண்கடம்பு; தகைதல் - மலர்தல்;

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (16-Sep-25, 9:26 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே