வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிகன் - - சிறுபஞ்ச மூலம் 33

நேரிசை வெண்பா

வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிகன்
உய்ப்பானே யாசா னுயர்கதிக்(கு) - உய்ப்பான்
உடம்பினார் வேலி யொருப்படுத்தூ னாரத்
தொடங்கானேற் சேறற் றுணிவு! 33

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

பொருளை ஈட்டி வைப்பவனே வள்ளலென்று சொல்லப்படுவான், அப்பொருளைப் பிறர்க்குக் கொடுப்பவனே வாணிகனென்று சொல்லப்படுவான், (ஒருவனுக்கு நல்லறிவூட்டி அவனை) மேலான பதவிக்கு செலுத்தக் கூடியவனே சிறந்த ஆசிரியனாவான், உயர்கதியிற் செலுத்த வல்லோன் உடம்பில் பொருந்தியுள்ள உயிராகிய வேலியை நீக்கி அவற்றின் தசையை உண்ண ஆரம்பியானாயின் (அவன்) உயர்கதியிற் செல்லுதல் உண்மையாம்.

கருத்துரை:

பிறர்க்குப் பயன்படும்படி பொருளை யீட்டி வைப்பவன் வள்ளல், அவற்றைப் பயன் கருதி எவனேனும் வழங்குவானாயின் அவன் வாணிகனை யொப்பான், மாணாக்கனை உயர்கதிக்குச் செலுத்துபவனே ஆசிரியனாவான், மாணாக்கன் உயிர் கோறலும் ஊன் புசித்தலும் இல்லானானால் உயர்கதிக்குச் செல்லல் துணிவேயாம்.

உயிர் நீங்கின் உடல் நாறிக் கெடுதலின், அஃது, உடற்கு வேலியாகக் கூறப்பட்டது; ஒருப்படுத்தல் - நீக்குதல்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Sep-25, 3:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே