கல்வி அழியாத செல்வம்
‘இளமையில் கல்’ என்பதை உணர்ந்திருக்க வேண்டும். இளவயதில் படிப்பது நம் மனதில் அப்படியே பசு மரத்தாணி போல் பதிந்துவிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கல்விதான் ஒருவனை அறிவாளி ஆக்குகிறது. அறியாமை எனும் இருட்டைக் கல்வி எனும் ஒளிதான் போக்குகிறது. நல்ல புத்தகங்கள் அறிவு கண்ணைத் திறக்கும் ஒரு திறவுகோல். கல்வி ஒருவனை மட்டும் மேம்படுத்தாது. அவனைச் சார்ந்தவர்களையும், சமுதாயத்தையும், ஏன் நாட்டையுமே அது உயர்த்த உதவும்.
கல்வியின் பெருமையைப் பழம் பாடல் ஒன்று அழகாகப் பேசும். கல்வி என்பது அழியாத செல்வம். அது காலத்தால் அழியாது. கள்வராலும் கவர முடியாதது. வெள்ளத்தால் போகாது. தீயினாலும் வேகாது. கல்விச் செல்வம் தவிர ஏனைய செல்வங்களைக் கள்வர்கள் திருடிச் சென்றுவிட முடியும்; வெள்ளம் அடித்துக் கொண்டு போகும். தீ தனது செந்நிற ஜூவாலையால் பொசுக்க முடியும்.
ஒரு முறை பாரதியார் எட்டயபுர அரச சபையில் இருந்து தன் ஊருக்குத் திரும்பிச் சென்றார். அரசர் கொடுத்த பணத்தில் நல்ல நல்ல நுால்களை வாங்கி வந்தார். பாரதியின் மனைவி செல்லம்மா தன் கணவர் தமக்குப் பிடித்ததாய் வாங்கி வருவார் என்று ஆசையாக வாசலில் நின்றவாறு அவரது வரவை எதிர்நோக்கிப் பார்த்திருந்தார்.
ஆனால், தன் கணவரோ புத்தகங்களாக வாங்கி வந்ததைக் கண்டு சினம் கொள்கிறாள். சினம் கொண்ட மனைவியை பாரதியார் சமாதானப்படுத்துகிறார்.
கல்விச் செல்வம் அள்ள அள்ள குறையாது. கொடுத்தாலும் குறையாது. எடுத்தாலும் குறையாது.
‘‘தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு’’
இறைக்க இறைக்கச் சுரக்கும் நீர் போல அறிவானது கொடுக்கக் கொடுக்க வளர்ந்து கொண்டே இருக்கும். பெற்றோர்களுக்கு ஒரு வார்த்தை! உங்கள் குழந்தைக்குக் கல்வியின் அவசியத்தைப் புரிய வையுங்கள். கற்பதில் விருப்பத்தை உண்டாக்குங்கள். ‘‘ஒரு பெண் கல்வி கற்றால் அது அவளது குடும்பத்துக்கே கற்பிப்பதுபோல்’’ என்பார் பாரதிதாசன்.
கல்விதான் எது நல்லது? எது கெட்டது? எனப் பகுத்தறியக் கற்றுக் கொடுக்கும். ஒரு நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு என்பதையும் உணர வைக்கும். எந்த விஷயத்தையும் உற்று நோக்கக் கற்றுக் கொடுக்கும். சமயோகிதமாக நடந்து கொள்ளவும் கல்வியறிவே கை கொடுக்கிறது என்பதை ஒரு சிறுகதை மூலம் பார்க்கலாம்.
அரசன் ஒருவன் அதிகாலையில் எழுந்து உப்பரிகையில் நின்றான். அப்போது அந்த வழியே சென்ற ஓர் இளைஞன் அரசனின் பார்வையில் பட்டான். பிறகு அரசன் திரும்புகையில் படி இடித்து நெற்றியில் ரத்தம் வந்தது. இதனால் சினம்கொண்ட மன்னன், ‘‘பிடித்து வாருங்கள் அந்த இளைஞனை’’ என்று கட்டளையிட்டார்.
அந்த இளைஞனோ, ‘‘என் மேல் சுமத்திய குற்றம் என்ன?’’ என்று துணிந்து அரசரிடம் கேட்டான். அரசரோ, ‘‘இன்று காலையில் உன் முகத்தில் விழித்ததால் எனக்கு இந்த கதி ஏற்பட்டது. எனவே நீ உயிரோடு இருக்கக்கூடாது’’ என்றான். அந்த இளைஞனோ இதைக் கேட்டு சிரித்தான்.
‘‘ஏன் சிரிக்கிறாய்?’’ என்றான் மன்னன்.
‘‘அரசே! மன்னிக்க வேண்டும்! என் முகத்தில் தாங்கள் விழித்ததால் உங்களுக்கு ஏற்பட்டது சின்ன காயம். ஆனால் என் கதியைப் பாருங்கள். அரசரின் தரிசனம் கிடைத்ததால் என் உயிர் போகப் போகிறதே! இதை நினைத்தேன். யாருடைய முகம் அதிர்ஷ்டமானது என எண்ணியே சிரித்தேன்’’ என்றான்.
அந்த இளைஞன் தன்னுடைய சாமர்த்தியப் பேச்சால் உயிர் தப்பினான். இதனைத் தந்தது கல்வியறிவுதானே!
நம் குழந்தை படிப்பில் சிறந்து விளங்கினால் பெற்றோர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஏதேனும் பரிசுகள் கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். குறைவான மதிப்பெண் வாங்கியிருந்தால் பொறுமையாக அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். குழந்தைகள் கண்ணாடியைப் போல் ‘ஹேண்டில் வித் கேர்’ என்பது போல அவர்களை ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.
கூடுமானவரை உங்கள் குழந்தைகள் படிக்கும்போது அவர்கள் அருகில் இருங்கள். தொலைக்காட்சியை மூடிவிடுவது உத்தமம். பெரியோர்கள் இருக்கும் வீட்டில் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைத்து புரிய வைக்கலாம். இல்லையேல் புத்தகங்களை வாங்கி வந்து படிக்க சொல்லுங்கள். எல்லோருமே படிக்கும் சூழலை உருவாக்கினால் குழந்தைகளும் விருப்பத்தோடு படிக்கும். கல்விதான் வாழ்க்கையை வழி நடத்திச் செல்கிறது என்பதை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். பாதுகாப்பான வாழ்க்கையை வழங்குவதும் கல்விதான்.
படிப்பது என்பது பாடப் புத்தகத்தை மட்டும் குறிப்பது அல்ல; நல்ல நல்ல நீதிக் கதைகள், அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை நாம்தான் குழந்தைகளுக்கு பழக்க வேண்டும். வாசிக்கும் பழக்கம் ஒருவரது மனதை வளப்படுத்தும். வாசிப்பின் மூலம் பல சாதனைகள் உண்டானதை வரலாறு நமக்குச் சொல்கிறது.
உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் என்றால், அவர்களுக்கு புத்தகங்களைப் பரிசாகத் தந்து படிக்கும் பழக்த்தை வலியுறுத்துங்கள். வெறும் கல்வி மட்டும்தான் படிப்பு அல்ல. இசை, நாட்டியம், ஓவியம், விளையாட்டு என பல துறைகளில் ஆர்வம் உள்ள துறைகளில் அவர்களைச் சேர்த்து ஊக்கப்படுத்துங்கள். புத்தக வாசிப்பால் உயர்ந்தவர்கள் பலர் உண்டு.
அப்படி ஊக்கப்படுத்தியதால்தான் ஒரு சச்சின், ஒரு விஸ்வநாத் ஆனந்த் எனச் சாதனையாளர்களைப் பார்க்க முடிகிறது. அறிவுள்ளவர்களால் தான் வாழ்க்கையை அமைதியான முறையில் நடத்த முடியும். எந்தவிதச் சிக்கலையும் தீர்கக் முடியும்.
கற்றோர்க்கு எங்கு சென்றாலும் சிறப்புதான். கல்வியில் பெரியவன் கம்பன் அல்லவா! அவருக்கு பணியாளாக சோழ மன்னரே இருந்தார் என்பதை அறியும்போது கல்வியின் பெருமை புரிகிறது அல்லவா!
எளிய குடும்பத்தில் பிறந்து தனது பரந்த கல்வி அறிவால் உலகையே வியக்க வைத்து, அதன் மூலம் நமது பாரத நாட்டின் குடியரசுத் தலைவரான ‘அப்துல்கலாம்’ கல்வியின் பெருமையை நமக்கு உணர்த்தும் மாமனிதராக உயர்ந்து நிற்கிறார். எளிமையிலும் அவரை மிஞ்ச ஒருவரும் இல்லை. கலாமின் கல்வி அறிவில் தன் மனதை பறிகொடுத்த நகைச்சுவை நடிகர் விவேக் தான் நடிக்கும் படங்களில் எல்லாம் அவரைப் பற்றி புகழ்ந்து பேசுவதை வழக்கமாக கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
‘இனிப்பு இருக்கும் இடத்தை நாடிச் செல்லும் எறும்புகளைப் போல, தேனிருக்கும் இடத்தை நாடிச் செல்லும் வண்டைப் போல’ நல்ல நுால்கள் இருக்கும் இடத்தை நாடி மாணவர்கள் செல்ல வேண்டும். அயல்நாடுகளில் படிக்கும் பழக்கத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே ஊக்குவிக்கின்றனர். குழந்தை பிறந்த சில நாட்களில் அரசாங்கமே ‘கிப்ட் பேக்’ என்று சொல்லி புத்தகங்களைப் பரிசாக தருவது வழக்கம். பிறந்த குழந்தைகயின் பெயரில் நுாலக உறுப்பினர் அட்டையையும் வாங்கிக் கொள்ளலாம்.
குழந்தை வளர வளர படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் ஓர் அட்டையில் படித்த புத்தகத்தின் எண்ணிக்கையை குறித்து வைத்துப் பரிசுகளைத் தந்து உற்சாகப்படுத்துவர்.
நுாலகத்தில் ஒரு பகுதியில் ‘கதை சொல்லும் வகுப்பும்’ நடைபெறும். குழந்தைகளுடன் அவர்களது பெற்றோர்களும் அதில் கலந்து கொள்ளலாம்.
மேலை நாடுகளில் இருந்து எதை எதையோ பின்பற்றும் நாம், ஆனால் அவனிடம் அதற்குண்டான பணம் இல்லை. அவன் தந்தையோ ஏழை. அவரால் எப்படி இதற்கெல்லாம் செலவு செய்ய முடியும்.
அவனோ புத்தகம் படிக்கும் ஆசையில் வெகுதுாரம் சென்று பலரை கெஞ்சி கேட்டு புத்தகங்கள் வாங்கி வருவான்.
ஒருநாள் அவன், ‘அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன்’ பற்றிய புத்தகத்தைப் படித்து வந்தான். உறக்கம் வரவே, புத்தகத்தை ஜன்னல் ஓரத்தில் வைத்துவிட்டான். அன்று பெய்த மழையில் அப்புத்தகம் நனைந்துவிட்டது. ‘‘ஐயோ! இதன் உரிமையாளருக்கு என்ன பதில் சொல்வது?’’ என்று தவித்தான்.
பின் ‘‘ஐயோ! இந்தப் புத்தகம் எனது அஜாக்கிரதையால் நனைந்துவிட்டது. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.’’ என்று கேட்டுக் கொண்டான். ஆனால் அவரோ ‘‘அதெல்லாம் முடியாது. இப்புத்தகத்திற்கான விலையை நீ தர வேண்டும்’’ என்றார். ‘‘ஐயா! என்னிடம் பணம் இல்லை’’ என்றான். ‘‘அப்படியானால் நீ என் வயலில் மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும்’’ என்றார்.
‘‘சரி! அப்படியே செய்கிறேன். ஆனால் தாங்கள் இந்தப் புத்தகத்தை எனக்கே தர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டு வேலையைச் செய்து முடித்துவிட்டு அப்புத்தகத்தைப் பெற்றுச் சென்றான்.
இப்படிப் புத்தகத்தை வாங்கிப் படித்த அச்சிறுவன்தான் பிற்காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் திகழ்ந்தார். ஆம்! அடிமைத்தளையை அறுத்தெறிந்த ஆபிரகாம்லிங்கன்தான் அச்சிறுவன்.
அவனது நுாலறிவு அவனை எவ்வளவு உயர்ந்த பதவியில் வைத்திருந்தது பார்த்தீர்களா?
அந்நிய நாட்டில் மட்டும்தான் இப்படிப்பட்ட சிறுவர்கள் இருந்தனரா? நம் நாட்டிலும் பலர் உண்டு. நம் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு சிறுவனும் புத்தகத்தின் மேல் பிரியம் கொண்டவன். தந்தை பள்ளிக்கூடம் செல்ல பஸ்ஸுக்கு தரும் பணத்தை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வான்; பள்ளிக்கு நடந்தே செல்வான். பின் அந்த பணத்தை என்ன செய்வான்? புத்தகங்களாக வாங்கிக் கொள்வான். தான் மட்டும் படித்து இன்புறாமல் தன் நண்பர்களையும் படிக்க சொல்லி வற்புறுத்துவான்.
இளைஞனானதும் வாசக சாலையை ஏற்படுத்தி பல புத்தகங்களை படித்து வந்தவர்தான் பின்னாளில் குழந்தைகளுக்காகப் பல பாடல்கள், கதைகள் எழுதிப் புகழ்பெற்ற குழந்தைக் கவிஞர் என்று அழைக்கப்பட்ட அழ. வள்ளியப்பா. நமக்கு தெரியாத விஷயத்தை யார் சொன்னாலும் கேட்கும் பக்குவம் இருக்க வேண்டும். ராஜாவேயானாலும் தம்மை விட எளியவன் சொல்லும் கருத்தில் உண்மை இருந்தால் வெட்கப்படாது அதனை ஏற்க வேண்டும்.
பல சிறந்த பண்புகளைப் பலரது வாழ்க்கை வரலாறுகளை நீங்கள் படிக்கும் போது தெரிந்து கொள்ள முடியும். அவை உங்கள் வாழ்க்கையில் பல விதங்களில் உதவவும் செய்யும்.