சீரழியுது சிரியா சிந்தி

ஆறுகளில்லா தேசத்தில்
வெள்ளமென பெருக்கெடுக்கிறது
மனிதக் குருதி !

கார்மேகங்கள் சூழாத தேசத்தில்
கருமேகக்கூட்டங்கள் !

பால் மறவா பச்சிளம் மேல்
பாரபட்சமின்றி பொழிகிறது
ரசாயன மழை !

பறந்து தப்பிக்க வித்தையறிந்தும்
உயிரை மாய்த்துக்கொண்டன
பறவைகள் !

ஐந்து வேலை தொழுத தேசத்தில்
ஐந்து மணி கால அவகாசம் ??
உதவும் மருத்துவத்திற்கு !

பங்களாவாசிக்கும் பட்டினி பழகியது
பதுங்கு குழிதனில் !

ரத்தம் ஒழுகும் மார்பகந்தனில்
காமப்பால் பருக்கத்துடிக்கின்றது
ஐநாவின் உதவிக்குழு !

இதைப்பற்றி கவலைக் கொள்ளா ஊடகமோ !
கூத்தாடியின் மரணத்தை விவாதித்து
பொழுதை கழித்தன

அழகு நிறைந்த தேசம்
அழுகி நிறைகிறது
மனித சடலங்களால் !

உயர்ந்த கான்கிரீட் கட்டிடங்களும்
மண்ணோடு மண்ணானது
மாண்டோரின் நினைவானது !

உறக்கத்தில் விழித்தழும் குழந்தைகள்
உறங்காமல் அலறுகின்றன
வெடிகுண்டு சத்தத்தில் !

சிரியென்ற கவிதையில்
அழுகையை தூண்டுகிறான்
ஒரு கவிஞன் !

சிதைக்கும் ஆயுதத்தை
சப்ளை செய்து மார்தட்டுகிறான்
வல்லரசென்ற அரக்கன் !

ஐந்தறிவை மிஞ்சி நிற்கின்றான்
ஆறறிவு மிருகமாய் !

சிரியாவின் மரணங்கள்
மறுஒளிபரப்பு செய்தியல்ல
மரண சுழற்சிக்கான எச்சரிக்கை !

சீரழியுது சிரியா மதமெங்கே ?
சிந்தும் ரத்தத்தில் மனிதமெங்கே ?
மனிதமே சிந்தி !

மிருகத்திற்கு பாதுகாவலெனக்
குரைத்துத் திரியும் கூட்டம்
எங்கே போனது ?

இறப்பையும் ஏற்றுக்கொள்வேன்
எதையும் ஏற்றிக்கொல்லாமல்
இயற்கையாய் நிகழுமெனில்

என்னை புதைக்கும் கூட்டத்துக்கு
நீ தூண்டில் புழுவென்பதை
மறவாதே !

மதமே ! மறுஜென்மம்
உனக்கு வேண்டா !

மனிதத்தைக் கொன்று
மாமிசம் தின்னும் கூட்டமே !
எத்தனை தூரம் பயணிப்பாய் ?
கடந்து வா உன்னையும் சந்திப்பேன்
காத்திருக்கிறேன் நான் மரணம் !

கருணையே இல்லாதவனிடம்
கரங்களை இழந்த சிரியாவிற்காகக்
கையேந்தி நிற்கிறேன்
சுவாசிக்க சுவாசம் கொடு !
இல்லையேல் உயிரை விடு இறைவா !

மனிதத்தை அழிக்கும்
மனசாட்சியை தொலைக்கும்
மதங்களை
மண்ணில் புதைத்து
மனிதத்தை விதைப்போம்

சிரியாவே ! என்னை மன்னித்துவிடு
இனத்தின் அழிவைக் கண்டு
கொந்தளிக்க மட்டுமே தெரிந்த
அப்பாவி தமிழனில் நானும் ஒருவன் !

எழுதியவர் : விஜயகுமார்.துரை (4-Mar-18, 7:22 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 81

மேலே