மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 23

மூர்ச்சையற்ற பொழுதுகள் - பகுதி ௨௩

முகவரி தெரியாவிடினும் முகம் அறிந்தவர்கள் நிறைய பேர் அந்த பேருந்தை ஆக்கிரமித்து இருந்தனர்.அவர்கள் இருவரையும் சேர்த்து..
அவளுடன் அருகில் சிரித்து ரசித்து பயணம் செய்த தருணம் மெல்லமாய் தன் முகத்தின் நிறத்தை மாற்ற துவங்கியது..
சரவணன் கார்த்திகை பார்த்து பின்னால் வா ஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறேன் என கூறியவாறு பேருந்தின் கடைசி இருக்கைக்கு சென்றான்..
கார்த்திக்கும் பின் தொடர்ந்து சென்ற முடிவில் பேரிடியாய் தாக்கியது அவனின் வார்த்தைகள்..

எனக்கு நம்பத்தகுந்த நண்பன் ஒருத்தன் சொன்னான்..அவன் மாலதி வீட்டுக்கு பக்கத்துலதான் ..மாலதிக்கு தூரத்து சொந்தம் ...
மாலதிக்கும் அவங்க அத்தை பையன் சிவாவுக்கும் சின்ன வயசுலயே பேசி வைச்சு இருக்காங்களாம்,12th முடிஞ்சதும் கல்யாணம் இருக்குமாம் ...அது மட்டும் இல்ல மாலதி 10th படிக்கும் போது ஒரு பையனை லவ் பண்ணுச்சாம் ஆனால் என்ன காரணம்னு தெரியல எதோ ஒரு பிரச்சனை வந்து அந்த பையன் நான் லவ் பண்ணலன்னு சொல்லிட்டானாம் ..
இப்போ கூட அவ உன்னை லவ் பண்ணுவாளான்னு தெரியல,அப்படி பண்ணுன உனக்குத்தான் அதோட பாதிப்பு அதிகமா இருக்கும்..நான் சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம் என்றான் சரவணன்...

அவள் தன்னை விரும்புகிறாள் என்றென்னியே எண்ணிலடங்கா அன்புகளை அவள் மீது தினமும் கொட்டினான்..அவள் இல்லாத வாழ்க்கையை எப்படி கடந்து செல்வது என்று நினைக்கவே அவ்வளவோ கொடூரமாய் இருந்தது..அவள் இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம் ஆனால் அவளின் நினைவுகள் அதற்குள் அவனை கொன்றிருக்குமே...
அவளின் மறுப்பு அறிக்கையும்,வெறுப்பு சமிக்கையும் இதுவரை அவனின் காதல் வானிலையை தாக்கியதில்லை,
அவளின் மௌனம் தனக்காக மௌன அஞ்சலி செலுத்தும் வரை அவள் தனக்காக படைக்கப்பட்டவள் என்ற நிலையிலிருந்து சிறிதும் மாறுபட நினைத்திராத கார்த்திக்கின் மனசுக்குள் பேய் காற்றின் கோரத்தால் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட மரம் போல வீழ்ந்து கிடந்தது அவனின் காதல் ...
அதற்குள் சரவணனின் வார்த்தைகள் விஷம் தோய்த்த அன்புகளை போல சில நொடிகளில் கார்த்திக்கின் இதயத்தை எட்டி பிடித்து ரத்த நாளங்களில் சென்று கலந்து விட்டது..இதயத்தின் வால்வுகள் ஒவ்வொன்றாய் தன் இதழ்களை மூடி கொண்டது ...இதயம் கனத்து அவள் விலகி செல்வது போல பிரமை பிடித்து உலுக்க, கண்ணில் h2o ஆக்கிரமித்தது.
யானையின் பாதத்தில் கிடந்த பூக்கள் போல இதயம் அழுத்தப்பட்டு இருந்தது ..

கார்த்திக்குள் இருந்த காதலின் அடர்த்தி கண்ணீரை அதிகமாய் வெளியேற்றி கொண்டிருந்தது..சரவணன் அவனை பிடித்து உலுக்கினான் ...ஏன்டா இப்படி குழந்தை மாதிரி அழுவுற..ஒரு விஷயத்தை சொன்னால் அதை எப்படி சரி பண்ணலாம்னு பாரு இல்லனா அதை நேரடியா கேட்டு தெளிவு படுத்திக்கோ அதை விட்டுட்டு அழுறது எந்த விதத்துல உனக்கு தீர்வை கொடுக்கும் ...
இப்போ மாலதி கிட்ட எதுவும் கேட்க வேணாம் நீ வா முதல்ல பஸ்சை விட்டு இறங்கு ..நாம அதை பற்றி பிறகு பேசிக்கலாம் ..நீ அழுவுறாத அவங்களாம் பார்த்த என்ன நினைப்பாங்க என்றவாறு கார்த்திகை கை பிடித்து அழுத்தினான்..
பேருந்து நிறுத்துமிடம் சமீபத்தில் இருந்ததை வரும் வழிகள் எல்லாம் வரைபடம் போட்டு காண்பித்தது.

இத்தனைக்கும் நடுவில் அவள் என்ன செய்கிறாள் என்பதை பார்க்க கார்த்திக்கின் கண்கள் அவளை தேடியது..அவளின் ஒற்றை உருவத்தை சுற்றிலும் அடுக்கடுக்கான உருவங்கள் மறைத்திருந்தது.ஆனாலும் செவிகளை மறைத்திருக்க வாய்பில்லாததால் அவளும் இதை கேட்டு கொண்டுதான் நின்றிருப்பாள் என நினைத்து கொண்டான்..
வலிகளின் துயர் அவனை விரட்டியது.பாக்கெட்டில் இருந்த பேனாவின் முகப்பு கழுத்தை திருகினான்..இடது கையில் மாலதி என்ற பெயரின் முதல் எழுத்தை அவளின் இரண்டாவது பெயரின் முதல் எழுத்தையும் வலது கையால் கீறினான்...
சிகப்பு ரத்தமும் ஊதா மையும் ஒன்றை ஒன்று போட்டி போட்டு வெளியேறியது..
அதன் சுவடுகள் அந்த பஸ்ஸில் ஒன்றன் மேல் ஒன்றை படிந்து கொண்டிருந்தது..
அதே நேரம் அவனின் கண்ணீரின் சுவடுகள் கண்ணம் முழுவதும் அப்பி இருந்தது.
அவள் இல்லாமல் போய் விடுவாளோ என்ற வலியை விட இந்த வலி அவனுக்கு பெரியதாக தெரியவில்லை..

அருகில் நின்றிருந்த சிலர் ரத்தத்தை பார்த்ததும் பதறினார்..
வாசலை விட்டு வெளியேறி படிகட்டின் எதிரிலேயே நின்றான்.
கார்த்திக் இறங்கிய படிகளின் வழியாக இறங்க எத்தனித்த போது அப்படியே அவனை பார்த்து திகைத்து நின்றிருந்தாள்..
ரத்தத்தின் ஒவ்வொரு துளியும் வெளியேறி உறைந்து போய் இருந்ததில் அவளின் பெயர் கொண்ட எழுத்துக்கள் தெளிவாக தெரிந்தது...
பஸ்ஸில் இருந்து வேகமாக குதித்து பதற்றத்தோடு அருகில் வந்தால் மாலதி ...
பர்சில் வைத்திருந்த பூ போட்ட கர்ச்சீப்பை எடுத்து கை நடுங்கியவாறு துடைத்து விட்டு நிமிர்ந்தாள்...அவளின் விழிகளில் இருந்து ஒரு துளி அவள் துடைப்பதற்குள் முந்தி கொண்டு கார்த்திக்கின் காயங்களில் விழுந்து எரிந்தது ...
அதற்குள் அருகில் எல்லோரும் வர கண்களை துடைத்து கொண்டு ஜெனிபாருடன் நகர்ந்தாள் மாலதி..
கார்த்திக்கின் காயங்களை சுற்றி அவள் கைக்குட்டை பொதிந்து தூங்கி கொண்டிருந்தது..

அந்த பார்வையில் அந்த கண்ணீரில் துல்லியமாய் கார்த்திகை சிதைத்து இருந்தாள்...
அப்படியொரு பார்வையை இதற்க்கு முன்பு பார்த்திராத பரவசத்தில்,
கார்த்திக்கின் ஐம்புலன்களும் அஸ்தமித்து போயிருந்தது..
வலிகள் சட்டென்று வானிலை மாறி வாழ்க்கையில் கிடைக்கும் மொத்த மகிழ்ச்சியையும் ஒற்றை வினாடியில் இதயத்துக்குள் நிரப்பியது போல இருந்தது.
இதயத்தின் இருடறையில் காதல் மின்மினி பூச்சிகளின் வெளிச்சம் மெல்லிதாய் படர துவங்கி இருந்தது..
சிலுவையிலிருந்து விடுவிக்க பட்ட பறவை ஒன்று சந்தோஷ கூச்சலிட்டவாறே வானத்தின் முகப்பை உடைத்தெறிந்து விட்டு சொர்க்கத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்தது..
இடையில் நரகத்தின் நெருப்பு தன்னை பொசுக்கப் போகிறது என்று தெரியாமல்..

அந்த நாளும் ஒளியை விட வேகமாய் வந்து கொண்டிருந்தது...

தொடரும் ... .... ....

எழுதியவர் : சையது சேக் (10-Mar-18, 12:35 pm)
பார்வை : 250

மேலே