ஆணியம் பேசு
அதை பார்த்த அடுத்த கணமே ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி அந்த நான்கு மாதரசிகள் அவனை நோக்கி வந்தார்கள். அவனுக்கோ அவர்களை பார்த்த அதிர்ச்சியில், சுவாசகுழாயில் பேரடைப்பு மூச்சு தடைப்பட்டது ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்ற போதும் முடியவில்லை. ஒரு நிமிடம் அவன் ஆவி நாதியற்று பறக்க எத்தனித்தது. பதற்றத்தின் உச்ச நிலையின் போது அவனை சூழ்ந்து கொண்டார்கள் அந்த மாதரசிகள். நிறுத்தி நிதானமாகவே ஆரம்பித்தார் தென்மேற்கில் நின்ற பெண்மணி.
"என்ன ம்ம்.... என்ன !
உன் முழியே சரியில்லயே ஆன்ன்..."
"ஏய் இவன் கிட்ட என்னடி பேச்சு
டேய் என்னடா !
எங்கள பார்க்குற போன பார்க்குற
அப்புறம் சிரிக்கிற போட்டோ எடுக்குற அத பார்த்து சிரிக்கிற
ம்ம என்ன விசயம்..
செருப்பால அடி வாங்கனும்னு ஆசையா இருக்கா?" என்றாள் வடகிழக்கில் நின்றபடியே.
"அடியேய்,
இவனலாம் போலிஸ்ட்ட புடிச்சு கொடுத்து முட்டிக் முட்டி தட்டனும்டீ
பொம்பள பொறுக்கி நாய்..." என்றபோது அவள் பின்னே சூரியன் மெள்ள மறைய தொடங்கியது . கதிரவனுக்கும் பயமோ என்னவோ யாருக்கு தெரியும்.
"அட! இருங்கடீ
பெரிய வீரி சூரி மாறி பேசுவாளுக...
இந்தா! பாருங்க தம்பி!
என்ன பண்ணீங்க" என்று அவள் பதமாக கேட்ட போது தான் மறைந்த சூரியன் எழுச்சியுற்றது போல அவன் முகம் கொஞ்சம் சிவந்து அடங்கியது.
வியர்த்து கொட்டியது, அதை துடைத்தபடியே சொன்னான்
"தப்பா ஒன்னும் பண்ணலீங்க!"
"பின்ன வேற என்ன பண்ணீங்களாக்கும்"
"இந்தாங்க இத தான் போட்டோ எடுத்து எல்லாருக்கும் சேர் பன்னேன் அவ்ளோ தாங்க வேற எதுவும் பண்ணல
நீங்களே பாருங்க"
அது எப்படி அவன் கூறுவதை எல்லாம் நம்பமுடியும். ஆண்மகன் உன்மையும் கூறுவான் என எந்த வேத ஆச்சாரியார்களும் கூறாத போது அவனை எப்படி அந்த மாதரசிகள் பேச்சில் நம்பிவிடுவார்கள். "எங்க கொடு" என்று அவள் வாங்கி பார்த்த போது தான் அனைத்தையும் புரிந்து கொண்டார்கள்.
"அட ஆமான்டி நல்லவன் தான் போல!
இந்தா! இனிமேனாச்சும் ஒழுங்கா இரு!"
என்று போனை கையில் வாங்கிய போது அவன் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். ஒரு நிமிடம் அவன் அந்த பேருந்து நிறுத்த இருக்கையில் ஆசை தீர கண்களை கசக்கினான். இன்னும் அவன் கண்களில் நீர் கொந்தளிப்பு காணப்பட்டது அத்துடன் சில ஓசைகளும் செவியறையின் சுவர்களில் எதிரொலித்தது.
"உன்னைய பிள்ளயா பெத்ததுக்கு அம்மிகல்ல பெத்துருந்தாலும் உதவியிருக்கும்... உதவாக்கரை ஒரு பத்தாயிரம் ரூவா கடன் வாங்க கூட உனக்கு திறமையில்ல"
"சீ நீலாம் ஒரு அண்ணண்ணா !
இதுவரைக்கும் எனக்கு நீ என்னா செஞ்சுருக்க...
இத கூட பண்ண முடியாதுனா அப்புறம் நீ என்ன ஆம்பள"
"இப்பவே என் மேல உனக்கு அக்கறை இல்ல... நாளைக்கு நீ என்ன கல்யாணம் பண்ணி என்ன பண்ண போற
காதலி ஆசப்பட்டத செய்ய முடியாத உனக்குலாம் எதுக்கு லவ்வர்
இதுல மீசை வேற தூ..."
"இதுக்கு தான் சொன்னேன் இவனுகளலாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கனும்...
கொஞ்சம் இடம் கொடுத்தா போதும் ஏறி மேஞ்சுருவானுக"
"ஏய் அவன் வரான் டீ!
டிரஸ்ஸ சரி பண்ணி வச்சுக்க"
"அவன் சரியான ப்ராடு சைகோ எதாவது பண்ணிறகின்னிற போரான் டீ"
"ஆம்பள தான நீ ! இத செய்ய முடியாத உன்னால"
"இவனுகளுக்கலாம் இரக்கமே பார்க்க கூடாது"
"அதலாம் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவானுக"
"அவன் கிடக்கான் குடிகாரன்"
"எவனும் நல்லவன் இல்ல எவனையும் நம்பாத!"
"செருப்பால அடி வாங்கனும்னு ஆசையா இருக்கா?"
"இவனலாம் போலிஸ்ட்ட புடிச்சு கொடுத்து முட்டிக் முட்டி தட்டனும்டீ
பொம்பள பொறுக்கி நாய்..."
இப்படி ஏகப்பட்ட ஓசைகள் ம் இல்லை இல்லை வசைகள் அவன் காதில் அன்று கேட்டகப்பட்டது மட்டுமல்ல அதுநாள் வரை கேட்கப்பட்டது.
அவையனைத்தும் அவன் கேட்டது மட்டுமல்ல ஆண் எனும் ஈன பிறப்பெடுத்த அனைத்து ஆண்மகன்களும் சுப்ரபாதமாக கேட்டுக் கொண்டும் கேட்க போகும் திருப்பாவை அது.
ஆணாதிக்க சமூகம் என்று கூறி ஆண்களை இராவணனை போலவும் பெண்கள் அனைவரும் சீதையை போலவும் கட்டமைக்கபடுவது புதிதல்ல என்றபோதும் ஆண்களில் பல இராமன்களும் பெண்களில் பல சூர்ப்பனைகள் சுற்றி திரிவதை மறக்கிறோம்.
உன்மையில் இது ஆணாதிக்க சமூகமா என்ன? ஒரு காலத்தில் கொத்து கொத்தாக ஆண்களும் அடிமைகளாக கைகட்டி கிடந்த நாட்டினிலே ஆணாதிக்கம் அதிகம் என்பது நகைப்புகுரியது. முன்னொரு காலம் தொட்டு இன்று வரை இது பணாதிக்க நாடாக இருந்து வரும்போது ஆணாதிக்க சமூகம் என்று எப்படி சொல்ல முடியும். பணம் படைத்தவன் ஆணோ பெண்ணோ அவன் எளியோனிடம் என்றும் ஆதிக்கம் செலுத்துவான் அதுவே உலக நியதி. அப்படி பணத்திற்க்காக சுற்றி திரிந்து பணாதிக்க சமூகமாக மாற நினைக்கும் அந்த நடைபாதை கூட்டத்தில் அவனும் ஒருவன். அங்கே கண்னை கசக்கி கொண்டு அமர்ந்திருக்கும் சேதுராமனின் குடியிருப்பு பங்காளன், அவன் பெயர் பாபுஜியாம்.
"என்னடா நாது...
சாரி சேது இங்க உட்காந்துருக்க"
"ஒன்னுல்ல"
"ச்சி சொல்றா"
"ஒரு நாலு பொண்ணுக நான் எதோ தப்பா பண்ணிடேனு அசிங்கப்படுத்திட்டாங்க"
"அட இவ்ளோ தானா"
"ரொம்ப எம்பாரஸிங்கா! ஆகிருச்சு டா"
"டேய்! அவளுகலாம் ஹேன்டுல் பன்ற விதத்துல ஹேன்டுல் பண்ணி கரக்ட் பன்ற விதத்துல கரக்ட் பண்ணனும்"
"உனக்கு தான் பொண்ணுக கிட்ட பேசவே தெரிலயே அப்புறம் இப்படிதான் நடக்கும்
பொண்ணுகளாம் பசங்கள என்ன பண்ண என்ன ஆவான்
என்ன சொன்ன என்ன ஆவானு செய்முறை விளக்கமே வச்சுருப்பாளுக
அந்த மாறி பசங்க, நம்மளும் தெரிஞ்சு வச்சு மடக்கனும் தெரிதா
ஆனா அதுக்கலாம் நீ சரிப்பட்டு வரமாட்ட"
"எனக்கு எதுவும் தெரிய வேணாம் நான் நானா இருந்துகுரேன்
அவுங்க மேல தப்பில்ல சில பசங்க அப்படி பண்றதுனால எல்லாரையும் தப்பா நினைக்கிறாங்க
இப்பலாம் லவ்னு சொல்லி பசங்க பேச வந்தாலே பொன்னுங்க பயப்புடுறாங்க எங்க வேணானு சொன்ன எதாவது பண்ணிடுவாங்கனு...
அவுங்க நிலமய நினைச்சு பாக்கனும் அவுங்க உணர்வுகள மதிக்கனும்"
"போடாங்கு...
மதிக்கனும் மிதிக்கனும்னு ஒருத்தன் வந்து லவ்வ சொன்ன ஒன்னு பிடிச்சிருக்குனு சொல்லனும் இல்ல பிடிக்கலனு சொல்லனும் அத விட்டு அவன அலைய விடுறது
ஏன் தெரிமா ! ஒருத்தி பிடிக்கலனா சொல்லிட்டா அப்புறம் அவ நிழல கூட தொடமாட்டான் டா ஆம்பளை
பெருசா பேச வந்துட்டான்...
சரிவா ரூம்க்கு போவோம்"
அந்த உரையாடல் சில மனிதர்களின் சில பிம்பங்களை அப்பட்டமாக பிரதிபலித்து கொண்டிருந்தது பாபுஜி அதை உரக்க சொல்லிக் கொண்டே வந்தான் சேது அதை பொறுக்க முடியாமல் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவர்கள் வருகையை அந்த குடியிருப்பு மாதரசிகளால் கொஞ்சம் சகிக்க முடிவதில்லை. இவர்கள் பெற்றெடுத்தோர் கூட அப்படி அவர்களுக்கு தினம்தோறும் அர்ச்சனை செய்ததில்லை.
"ஏன்டி! இந்த ஓனருக்கு விவஸ்தையே இல்லயா
எத்தன தடவ சொல்றது இந்த மாறி காலி பசங்களுக்கு வீடு கொடுக்காதிங்கனு
இவனுக பார்வையே சரியில்லை"
"அப்படி என்னடி உன்ன பண்ணானுங்க"
"பேமிலி இருக்குற இடத்துல பேச்சுலர்ஸ் எதுக்கு"
"சரி அத விடு...
இந்த தங்க நகைக்கு பாலிஷ் போட வர சொன்னியாம்ல எப்ப வர்றாங்க எனக்கும் போடனும்"
"இப்ப வந்துடுவாங்க கொஞ்சம் பொறு"
மணி சரியாக ஆறை நெருங்கி கொண்டிருந்தது. குடியிருப்பு வீடுகள் இருட்டில் மறைய எத்தனிக்கும் போது மின் விளக்குகளால் மின்னியது.
பாபுஜி வீட்டை பற்றி அவனை வசைபாடியவளிடமே கேட்டுக் கொண்டிருந்தான் ஒரு ஆசாமி. அவன் முழியில் ஒரு கள்ளத்தனம் தெரிய அவனுக்கும் கொஞ்சம் அர்ச்சனை வழங்கப்பட்டது அவன் அர்ச்சனைகளை பாதியிலே தடுத்து அவன் அவ்விடம் நகர்த்தி வந்தான் சேது.
"டேய் தம்பி ! யார்டா இந்த பொம்பள புரபஷ்னல் பஜாரி மாறி பேசுது. என் பொண்டாட்டியலாம் தூக்கி சாப்டுறும் போல"
"அவுங்க இப்படி தான்.
நீ என்ன ணா இந்த நேரத்துல"
"வாய்விட்டு அழனும் தோனுச்சு ரூம் போட்டு அழுகுறதுக்கு காசில்ல அதான் இங்க வந்தேன்"
"அப்புடியா இந்தா! இந்த ஓரமா ஒக்காந்து அழுவுங்க" என பாபுஜி கேட்டவுடன் அந்த ஆசாமிக்கு கண்ணீர் பீறிட்டது.
'சந்தன கருப்பா எனய ஏன் ஆம்பளயா பெத்துவிட்ட' என்றபடியே அழுது புலம்பினான் ஒரு ஓரமாக.
திடிரென்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது ஒரு நீண்ட நெடிய நிசப்தத்தில் காரிருள் சூழ்ந்தது. அவ்வப்போது சில முனகல்கள் பல கிசுப்கிசுப்புகள். சேதுவுக்கும் பாபுவுக்கும் ஒன்றும் புரியவில்லை. வெகு நேரமாக அழுது கொண்டிருந்த ஆசாமி சட்டென்று எழுந்து "டேய் தம்பிகளா! இந்த பொம்பள குரல எங்கயோ கேட்டுருக்கேன் இவளுக.....
ம்ம் நியாபகம் வந்துருச்சு
நகைய பாலிஷ் போடுறேனு சொல்லி ஆட்டய போடுற கும்பல்னு நினைக்கிறேன்"
"அப்படியா எதுத வீட்லருந்து தான் சத்தம் வருது" என்று கிசுகிசுத்தான் சேது.
"இப்ப என்ன பன்றது " என்றான் பாபுஜி
"மெய்ன் ஆஃப் பண்ருப்பாய்ங்க அதுனால நீங்க யாராவது மெயின் ஆன் பண்ண போங்க நா கேட்டு கதவைத் பூட்றேன் நீ வாசக்கதவ கிட்ட போய் அவய்ங்கள புடி"
"எப்புடி ணே இவ்ளோ கரக்டா சொல்ற" பதட்டத்துடன் கேட்டான் சேது.
"போன வாரம் தான் பா என் வீட்ல ஆட்டய போட்டாய்ங்க"
"அட கொடுமயே !
ஆண்டவன் உன்னய இங்க கரக்டா தான் அனுப்பி வச்சுருக்கான்
சரி சத்தமில்லாம"
அந்த ஆசாமி வேகமாக ஓடி முன் கேட்டை அடைக்க, பாபுஜி மெதுவாக நகர்ந்து துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை இணைக்க சென்றான். சேது கொஞ்சம் கலக்கத்துடன் தன் அலைப்பேசி வெளிச்சத்தில் அடி மேல் அடி வைத்து சென்றான். பட்டென மின் இணைப்பு வர சேதுவிற்க்கு பேரதிர்ச்சி.
அந்த அதிர்ச்சியில் அவன் கையில் இருந்து நழுவி கிழே விழுந்தது.
கிழே விழுந்த அலைபேசியில் அவன் காலையில் எடுத்த செல்லூலாய்டின் செல்கள் பளிச்சிட்டன அதில் பசி மயக்கத்தில் கிடந்த யாசக பாட்டிக்கு தன் மதிய உணவை கொடுத்து பல்ளித்து கொண்டிருந்தான் ஓர் இளைஞன். அந்த இளைஞன் முன்னே இப்போது நிற்பது போல பேரதிர்ச்சியில் அந்த நான்கு பெண்கள்.
களவானிகளிடம் வசை வாங்கிய கோபத்தில் கொஞ்சம் குரலோங்க
"அடி பாவிகளா! நீங்களா!" என்றான் சேது.
- பிரசன்ன ரணதீரன் புகழேந்தி