இளைஞர்களின் இன்றைய வாழ்க்கை

ஒரு சமூகத்தின், நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் இருக்கிறது. அப்படிப்பட்ட இளைஞர்கள் இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள், இன்றைக்கு அவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னை என்ன, எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், எவ்வளவு செலவழிக்கிறார்கள் என்பதை எல்லாம் அறிய ‘ஸ்பெஷல் யூத் சர்வே’ ஒன்றை நடத்தினோம்.

ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் நடந்த இந்த சர்வேவுக்காக விகடன் குழும மாணவப் பத்திரிகையாளர்கள் தமிழகமெங்கும் பல நூறு இளைஞர்களை நேரில் பேட்டி கண்டனர். இதில் ஆண்கள் 68%, பெண்கள் 32%. இந்த சர்வே மூலம் நமக்குத் தெரியவந்த உண்மைகளை இங்கே சுருக்கமாகத் தருகிறோம்.

கல்லூரிப் படிப்பைத் தேர்வு செய்யும்போதே இன்றைய இளைஞர்களுக்குப் பிரச்னை ஆரம்ப மாகிவிடுகிறது. தாங்கள் விரும்பும் படிப்பை சரிபாதிக்கும் மேற்பட்டவர்களால் படிக்க முடிகிற அதேவேளையில், ஏறக்குறைய 46 சதவிகித இளைஞர்களால், கல்லூரிகளில் தாங்கள் விரும்பிய படிப்பைப் படிக்க முடியவில்லை. பெற்றோர்கள் தாங்கள் விரும்பும் படிப்புகளை படிக்கவே இளைஞர்களை வற்புறுத்துகிறார்கள். அதில் அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்றெல்லாம் பார்ப்பதில்லை.

அடுத்த பெரிய பிரச்னை, படித்த படிப்புக் கேற்ற வேலை கிடைக்காதது. கிட்டத்தட்ட 59% பேர் தாங்கள் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று சொல்லி இருப்பது அதிர்ச்சித் தகவல். படிப்பது ஒன்று, வேலை செய்வது வேறாக இருப்பதால், கல்லூரியில் படித்த மூன்று ஆண்டு காலமும் வீணாகப் போகிறது என்பதை நம் அரசாங்கம் உணர்ந்து, அதற்கான தீர்வுகளைக் காண வேண்டும்.

வேலை கிடைப்பதில் மொழியும், அனுபவம் இன்மையும் பெரும் பிரச்னையாக இருப்பதாக இந்த சர்வே மூலம் தெரிய வந்திருக்கிறது. ஆங்கிலத்தையும் அகில இந்திய அளவில் ஏதாவது ஒரு மொழியை படிக்காமல் போவதி னால் இன்றைய இளைஞர்கள் கஷ்டப்படவே செய்கிறார்கள். கல்லூரிப் படிப்பு வெறும் ஏட்டுப் படிப்பாக இருப்பதால், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் அனுபவம் இன்றைய இளைஞர்களுக்கு இல்லாமலே போகிறது. இதனால் அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைப்பதில்லை.

நாம் சர்வே கண்ட இளைஞர்களில் 57% பேர் சேமிப்பதாக சொல்லி இருப்பது ஆறுதலான விஷயம். ஆனால், சேமிக்காதவர் களின் விகிதம் இன்னும் குறைய வேண்டும் .

சேமிக்கும் இளைஞர்களும் தங்கள் கையிருப்பை வங்கியி லேயே பெருமளவில் வைத்துள்ளனர். போதிய நிதி விழிப்பு உணர்வு அவர்களுக்கு இல்லை என்பதே தெளிவாகிறது. தங்கத்தில் முதலீடு செய்கிற அளவுக்குக்கூட அவர்கள் பங்குச் சந்தையிலும் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யவில்லை. தவிர, அவர்கள் செலவில் சுமார் 70% உணவுக்கும் வாடகைக்கும் போய்விடுவதால், எதிர்காலத்துக்கான சேமிப்பும் முதலீடும் குறைவது ஆரோக்கியமான விஷயமல்ல.மேலும், பர்சனல் லோனை அதிக அளவிலானவர்கள் வைப்பதிருப்பதும் நல்ல விஷயமல்ல. இதனால் வட்டியாக நிறைய பணம் போய், சேமிக்கும் தொகை குறையும்.

இறுதியாக, தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணை வேலைக்குச் செல்பவராக இருக்க வேண்டும் என 53% பேர் சொன்னதன் மூலம் பெண்கள் இனி வேலைக்குச் சென்று பொருளாதாரத்தில் சார்பில்லாமல் இருக்க முடியும். ஆனால், வீட்டை கவனித்துக்கொள்ள வேண்டும் என 46% பேர் சொன்னதன் மூலம் இந்த விஷயத்தில் ஆண்களின் மனோபாவம் இன்னும் மாற வேண்டியிருக்கிறது.

ஆக மொத்தம், இளைஞர்களின் மனநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது இந்த சர்வே.

எழுதியவர் : (23-Mar-18, 12:05 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 718

சிறந்த கட்டுரைகள்

மேலே