ஆடு வளர்ப்பு சிறந்த வாழ்வாதாரம்

வளர்ந்த ஒரு ஆட்டுக்குட்டிக்கு பதினைந்து சதுர அடி இடம் தேவைப்படும். நாம் வளர்க்க விரும்பும் ஆடுகளுக்கேற்ற அளவில் பட்டி அமைத்துக் கொள்ளலாம். செம்மறி ஆடாக இருந்தால், நைலான் வலையிலேயே பட்டி அமைக்கலாம். வெள்ளாடுகளுக்கு கம்பி வலை அல்லது சுவர் மூலமாகத்தான் வேலி அமைக்க முடியும்.

பட்டிக்குள் கிடாக்கள், குட்டிகள், சின்ன ஆடுகள், வளரும் ஆடுகள் என தனித்தனியாகப் பிரித்து அடைத்து வைப்பதற்காக தனித்தனிக் கொட்டகைகள் அமைக்க வேண்டும்.

காலை ஒன்பது மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி விட்டு, கொட்டகைகளை சுத்தம் செய்து விட வேண்டும். பதினோரு மணி அளவில் ஆடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்க வேண்டும். பின் கடலைப் பிண்ணாக்கு ஊற வைத்த தண்ணீர் கொடுக்க வேண்டும்.

தோட்டங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரைக் குடிக்க விட்டால், நோய்கள் தொற்ற வாய்ப்பு இருக்கிறது. அதனால் தண்ணீர் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வெயில் அதிகமாக அடிக்கும் மதிய நேரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடும் போது சோர்ந்து விடும். அந்த நேரங்களில் பட்டியில் அடைத்து விட்டு, வேலி மசால், முயல் மசால், கோ – 4 ஆகிய பசுந்தீவனங்களை நறுக்கி போட வேண்டும்.

தினமும் வேறு வேறு தீவனங்களை மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது. பகல் மூன்று மணிக்குப் பிறகு ஐந்தரை மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் போட வேண்டிய தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டு வர வேண்டும்.

எட்டு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் பெட்டை ஆடுகள் பருவத்திற்கு வந்து விடும். அந்த சமயத்தில் நல்ல தரமான கிடாக்களோடு சேர்த்து விட வேண்டும். ஆட்டுக்கு சினைப் பருவம் ஐந்து மாதங்கள், குட்டி போட்ட இரண்டு மூன்று மாதங்களில் மீண்டும் அடுத்த பருவத்திற்குத் தயாராகி விடும்.

எட்டு மாதத்திற்கு ஒரு முறை குட்டி ஈனுவதால், சராசரியாக இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டி ஈனும். ஒரு ஈற்றுக்கு இரண்டு குட்டிகள் ஈனும். நாற்பது நாட்கள் வரை குட்டிகளை தாய் ஆட்டிடம் பால் குடிக்க விட்டு, பிறகு பிரித்து விட வேண்டும். அப்போதுதான் தாய் ஆடு சீக்கிரம் பருவத்திற்கு வரும்.

ஆடுகளுக்கான தீவனமாக தீவன சோளம், மக்காச் சோளம், வேலி மசால் மற்றும் சீமைப் புல் போன்றவற்றை தரலாம்.

எழுதியவர் : (23-Mar-18, 4:11 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 307

மேலே