பூவைப் ‘பு’ வென எண்ணாதீர்

ஒவ்வொரு பூவும் ஒருவிதமாம் –அதை
உணர்ந்தால் வருவது பெருமிதமாம்
ஒவ்வும் பூவும் அதிலுண்டு –மனம்
ஒவ்வா திருத்தலும் அங்குண்டு !

கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள் –மனம்
களித்திட வைக்கும் எண்ணங்கள்
எண்ண எண்ண இனிமையாய் –அது
என்றும் பூக்கும் புதுமையாய் !

தேனைச் சிந்தும் மலருண்டு –அதைத்
தேடி அலையும் வண்டுண்டு !
கானகம் மணம்தரும் மலருண்டு –அதில்
கனிந்திடும் பலப்பல கனவுண்டு !

பூவில் பலவகை இனமுண்டு –அதில்
பூச்சியைத் தின்றிடும் பூஉண்டு !
நாவால் மானுடர் உண்பதுபோல் –இதழ்
நாவால் சுருட்டி உண்டுவிடும் !

மலருக்கு மலரொரு மணமுண்டு –அதன்
மணத்தால் தனியொரு மதிப்புண்டு
பலருக் கதிலே மகிழ்வுண்டு -அது
பக்கத்தில் வந்தால் நெகிழ்வுண்டு.

நித்தம் நித்தம் புதுமலராய் –அது
நெஞ்சுக்குத் தந்திடும் தனிச்சுகமாய்
சித்தம் தன்னை தெளிவாக்கும் –தனைச்
சேர்ந்தோர் தமையும் பொலிவாக்கும்.

பூவைப் ‘பு’ வென எண்ணாமல் –அது
புதுமை என்றே எண்ணிடனும்
பாவையர் பூவை அணிவதனால் –அதன்
பெருமைகள் என்றும் விண்ணளவாம் !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (30-Apr-18, 6:04 pm)
பார்வை : 56

மேலே