இன்னும் வருடம் ஆகவேண்டும் எட்டு

அன்புள்ள சொந்தங்களே
நான் இன்னும்குழந்தை தானே?
சந்தேகம், என்தேகம் எரியும் போது!

யார் இவர்கள்?
என் மாமன் ஒருவன் ,
என் தாத்தா ஒருவன்
என் அண்ணன் ஒருவன்
என் பக்கத்து வீட்டுக்காரன் ஒருவன்.

அன்புள்ள சொந்தங்களே,
சீதைக்காக போர் செய்த தேசம்
என்னை சிதைக்கும் பொது
ஏன் மௌனம் காத்தது!

உங்கள் வழிப்பாட்டு இடத்தின்
ஒரு ஓரத்தில்தான் என் உயிர் பிரிந்தது!
உங்கள் தெய்வமோ தேரில் வீதி உலா சென்றது.!

என்ன தான் தெரியும் எனக்கு,
பால்குடி மறவாத என்னிடம் பாலுறவா?

பாவம் நான் வலி என்ற வார்த்தையின்
அர்த்தங்கள் புரிந்த நாள் அது.

கைகள் உடைக்கப்பட்டது,
கால்கள் முடக்கப்பட்டது,
கழுத்து நெறிக்கப்பட்டது,
என் கன்னி தன்மையோ ?
அழுகையில் வரவில்லை வார்த்தைகள்.

பூக்கள் எல்லாம் பூஜைக்கு போக
பூ போன்ற நான் மட்டும் உங்கள்
தெய்வத்தின் முன் யாகத்தீயில் எறிந்தேன்!

சிரித்தேன் ஊர்ச்சுற்றி மகிழ்ந்தேன்,
உறவென நினைத்தேன்
பின் உருத்தெரியாமல் சிதைந்தேன் !

என்னை தோட்ட போதும் உணரவில்லை
துரத்திய போதும் புரியவில்லை,
உயிர் பிரிந்த போதுதான் நிலைமை தெரிந்தேன்!

உறவுகளே
உரிமை என யாரையும் ஒட்ட விடாதீர்கள்
உரசிப்பார்ப்பார் பின் உயிரை பிரிப்பார்!

நான் இன்னும் பூப்படைய கூட இல்லை,
என் உடலோ பூக்கள் சுற்றிய பாடையில் ஏறியது!

என் வயது எட்டு,
அவர்கள் என்ன செய்தார்கள் என்னை தொட்டு,
அது என்னவென்று தெரிய
இன்னும் வருடம் ஆகவேண்டும் எட்டு!
இப்படிக்கு
உங்கள் வீட்டு பிள்ளை,உலகை வெறுத்த
ஆஷிபா

எழுதியவர் : சந்தானபாரதி.ப (30-Apr-18, 5:39 pm)
சேர்த்தது : சந்தானபாரதிப
பார்வை : 588

மேலே