நாஞ்சில் ஓருமைகள் 9

நாஞ்சில் ஓருமைகள்.

நா நாலாப்பு படிக்கையில புதுசா பள்ளியூடத்துல எங்க கூட சேந்தான் சுந்தரு.

நல்ல படிப்பான் யெங்கூடவே இருப்பான் . அவனுக்கு கோயமுத்தூர் தான் சொந்த ஊரு. அவ்வோ அப்பா பாட்டு வாத்தியாருன்னு சொல்லுவான். நல்ல பாடுவான்.

கோயமுத்தூர் கார பொடியன் நம்மட ஊருல என்னாத்த செய்யான்னு கேக்கேளா.

சொல்லுகேன்.

நம்மட பாடசாலை இருக்குல்லா மேலூருல, அங்கே நம்ம கண்ணனுக்க அப்பா வேதம் சொல்லி குடுப்பேருல்லா.... அதுக்கு தான் சுந்தரை அவ்வோ அம்மையும் அப்பாவும் அனுப்பிருக்கா.

அவ்வோ அண்ணன் வேறையும் பத்து பதினைஞ்சு பயக்கோ தெக்கே கிழக்கே உள்ள ஊருகளில இருந்து வந்து மேலூரு கிராமத்தில தங்கி வேதமும் படிச்சிட்டு பள்ளியூடத்துக்கும் வருவானுகோ.

சுந்தருக்கு காலைல ரெண்டாம் பீரியட்லேயே ஒறக்கம் வரும்.
வள்ளிமுத்து டீச்சர் சொல்லி சொல்லி பாப்பா , அவன் "சரி டீச்சர் " ன்னு சொல்லிற்று திரும்பியிம் ஒறங்குவான்.

அந்த நீள பெரம்பால அவன் முதுகிலேயே விழும் அடி பாத்தா எட்மாசார் நின்னு விளாசிருப்பேரு.

இன்டர்வெல் விட்டதும் நா எங்க வீட்டுக்கு சுந்தரை கூட்டிற்று வருவேன். அம்மை சூடா குட்டி தோசையும் மொளவாடியும் வெச்சு தருவா .
நெய்விட்ட மொளவாடி தோசை ஆளுக்கு மூணெண்ணம் திம்போம்.
பள்ளியூடம் நம்ம தெருவில தானே இருக்கு
ஆமா..
இன்டர்வெல்லு நேரத்தில தோசை திங்க வயித்தில உனக்கு இடம் இருக்கான்னு கேக்கேளா. காலம்பற ஆறரைமணிக்கு மாமன் காலேஜிக்கு பொறப்படுகையில நான் வெறும் எட்டு இட்டேலி தானே தின்னேன்.

அப்போதான் சுந்தரு அழுதிற்றே சொல்லுவான்

"மக்ளே நான் காத்தால மூணரை மணிக்கு எழும்பறேன்டா. நாலு நாலேகாலுக்கெல்லாம் பழையாத்து தண்ணில குளிச்சிட்டூ ஆத்து தண்ணில நின்னுற்றே வேதம் சொல்லுவேன்டா.
நான் வேதமும் படிக்கணும் பாடமும் படிக்கணும்டா. நமக்கெல்லாம் சர்க்கார் ஜோலி கெடையாதாம். அதனாலே நன்னா படிக்கிறேன்டா. ஆனாலும் காத்தால வெள்ளெனே எழும்பறதால தூக்கம் வாரதை மட்டும் நிறுத்தவே முடிலை" ன்னு வருத்தப் படுவான்.
அவன் மாதிரியே ராமசுப்புவும் வருவான்.

நான் அம்மைற்றே கேப்பேன்

"யேம்மா உண்மையிலேயே ஜோலி கிடைக்காதுன்னா ஏம்மா படிக்கணும்."

அம்மை சொல்லுவா

"ஊழ்வினை மக்களே ஆனா மின்னேரு போக மாரி தானே பின்னேரு போகும்.உங்க முப்பாட்டன் காலத்தில நாம செஞ்ச வினை அனுவிக்கோம். ஆனாலும் பாரு நம்ம பரம்பரையிலே அந்த பாவம் செய்திட்டு இல்லை. நீ கண்டிப்பா நல்ல ஜோலிக்கு போவே" ன்னு சொல்லுவா.
ஆனாலும் சுந்தர் அடிவாங்குகத பாத்தா ரெம்பவும் ஏலாமை தோணும்..

எழுதியவர் : சிவோஹம் சுப்பிரமணியன் தா (19-May-18, 8:28 pm)
பார்வை : 64

மேலே