என் கிராமம்
காலை வேளையில்
கொஞ்ச வார்த்தைகளை தயார்படுத்திக் கொண்டு
அம்மா எழுப்புவார்
கையில் ஒரு டம்ளர் காபியுடன்,
உணவு உண்டபின்
நண்பர்களிடம் இருந்து ஒரு அழைப்பு வரும்
பைக்கில் ஊர் சுற்றுவதற்காக,
பெட்ரோல் தீரும் வரை
அலைந்து திரிவோம்,
அருகிலுள்ள சிறு நகரம்
குளம்
ஆளில்லா வறண்ட மலை
என பல்வேறு இடங்களில்
பதியும் பைக்கின் சக்கர ரேகை,
மதிய வேளையில்
நண்பர்களுடன் உரையாடியபடி
கிணற்றில் ஒரு குளியல்,
கிணற்றின் உரிமையாளர் வந்துவிட்டால்
ஈர உடைகளுடன் ஆற்றங்கரை நோக்கி பயணிப்போம்,
கோடை மழை திடீரென வரும்
வெயிலும் மழையும் சேர்ந்து பொழியும்
அதை ரசித்தபடி ஆற்றில் குளியல் தொடரும்,
கடுமையான பசி ஏற்படும்
ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள
மாந்தோப்பும் வாழைத்தோப்பும் தென்னை மரங்களும்
எங்களின் பசி தீர்க்கும்,
இரவு வேளையில்
நண்பர்கள் கூட்டம் அதிகமாகும்
கேளி கிண்டலுடன்
பழைய நினைவுகளும் பேசப்படும்,
வீடு திரும்புகையில்
அவரவர் வீட்டில் காத்திருப்பர்
அவரவர் பெற்றோர்கள்
திட்ட வார்த்தைகளை தயார்படுத்திக் கொண்டு...

