171 அயலான் மனைவி அன்னை உடன்பிறப்பு ஆவாள் – பரத்தமை 15
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
தன்னைப்போற் பிறரை யெண்ணல்
..தகுதியாந் தான்ம ணந்த
மின்னைப்போ லிடையி னாளை
..விழியினால் நோக்கு வோரைத்
தின்னல்போன் முனிவு கொள்வோர்
..அயலவன் தேவி தன்னை
அன்னைசோ தரிபோ லெண்ணா(து)
..அணைந்திட விரும்ப லென்னே. 15
– பரத்தமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”ஒருவன் தன்னைப்போல் பிறரையும் நினைப்பது நடுநிலையாகும். தான் திருமணம் செய்த மின்னலைப் போன்ற இடையினையுடைய மனைவியை வேறு ஒருவன் கண்களால் பார்த்தாலும் அவனைக் கொன்று விடுவது போல சினம் கொள்பவன், அயலவன் மனைவியைத் தன் தாயைப் போலவும் உடன் பிறந்த சகோதரி போலவும் கருதாமல் அணைத்து மகிழ ஆசைப் படுவது எவ்வாறு?” என்கிறார் இப்பாடலாசிரியர்.
தகுதி - நடுநிலைமை. சோதரி - சகோதரி.
தின்னல் – (இங்கே) கொல்லல். முனிவு - சினம்.