திசை மாறிய பறவைகள் -2

நாட்கள் நெருங்க
இருப்புக்கொள்ளவில்லை எனக்கு...
படபடப்பு...!

கவனமாய் வைத்துக்கொண்டேன்
அம்மாவுக்கென வாங்கிய தங்கசங்கிலி...
தம்பிக்கு வாங்கிய வாட்ச்...
என எல்லாருக்கும்
வாங்கிய பொருட்களோடு...
இரண்டு வருட சேமிப்பான
என் தனிமைகளையும்...
ஆசைகளையும்...!

முதல் இரண்டு நாட்கள்
நலம் விசாரிக்க வந்த உறவுகள்...
பின்
ஊர் திருவிழா என ...
ஒரு வாரமும்
நடுநடுவே...
நண்பர்களோடான சந்திப்புகள்...
இறுதியாக குடும்ப சுற்றுலா என
ஊட்டி சென்று வர
கரைந்தது...
கையிருப்பு காசும்...
என் விடுமுறை நாட்களும்...!

வெளிநாடு செல்ல
ஒண்றிரண்டு நாட்கள் எஞ்சியிருக்க
கலவரமானாள் அம்மா...!

பருப்பு பொடி, ஊறுகாய்...
மிளகாய் தூள் ...
எனக்கு பிடித்த ' புட்டிங் கேக் '
இன்ன பிறவற்றோடு...
அவள் மனதையும்...

எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு
கிளம்பினேன்...
உச்சிமுகர்ந்து முத்தமிட்டாள் அம்மா...
யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
நானும் அம்மாவும் உள்ளூர அழுவது...!

நண்பர்களுக்கு குறுஞ்செய்தி
அனுப்பிவிட்டு ...
எல்லை தாண்டி பறக்கிறேன்...!

இனி அடுத்த விடுமுறை வரை...
' வீடியோ கால் ' களில் மட்டுமே
பார்த்துக்கொள்ள முடியும்...
அம்மாவை...
ஆசையாய் கட்டும் வீட்டை...
நண்பன் திருமணத்தை...
தீபாவளி...பொங்கல் ...என
இன்னும் பலவற்றை...!

கண்மூடி அமர்ந்திருக்கிறேன்...
இப்படியாக பதில் வந்திருக்கிறது

" பறவையே...
விரைந்து வந்துவிடு
உன் கூட்டிற்கு "

என தோழியிடமிருந்து...!

( விடுமுறைக்கு வந்து செல்லும் ஒரு வேடந்தாங்கல் பறவையின் கதை )

- கீதா பரமன்

எழுதியவர் : கீதா பரமன் (29-May-18, 11:42 am)
பார்வை : 560

மேலே