ராமசுப்புவின் சமாளிப்பு

ராம சுப்புவின் சமாளிப்பு
வழக்கம் போல ராம சுப்பு ஒன்பது மணி அலுவலகத்துக்கு பத்து நிமிடம் தாமதமாக வந்தான்.அலுவலகத்துக்குள் நுழைந்ததும் அலுவலகம் அமைதியாக இருந்தது. வள வள வென பேசும் ஆபிஸ் பாய் பாண்டி கூட அமைதியாக இருந்தான். ராம சுப்பு முன்னால் வைத்திருக்கும் வருகை பதிவேட்டை தேடினான்.பாண்டி. சார் ரிஜிஸ்டர் மேனேஜர் ரூமுக்கு போயிடுச்சு, மானேஜர் உள்ளேதான் இருக்கறாரு. அடுத்து நடக்க இருக்கும் நாடகத்தை பார்ப்பதற்கு தயாரானவன் போல் முகத்தை வைத்திருந்தான்
ராமசுப்புவுக்கு கால்கள் வெட வெடத்தன. எப்பொழுதும் 9.30க்குகுத்தான் மானேஜர் ரூமுக்கு அட்டென்ஸ் ரிஜிஸ்டர் போகும். அதற்குள் தட்டு தடுமாறி வந்து கையெழுத்து போட்டு விடுவான். இன்று வசமாகமாட்டிக்கொண்டான். வீட்டில் இருந்து கிளம்பும்போதே மனைவி பேச்சை கேட்க கூடாது என்று நினைப்பான். ஆனால் வீட்டம்மா கிளம்பும்போதே ‘ஏங்க” ஆபிஸ் போற வழியில இந்த துணிகளை லாண்டரி கடையில் கொடுத்திடுங்க என்பாள், இல்லையென்றால் மளிகை லிஸ்டை கையில் கொடுத்து கடையில் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்பாள்.
இப்படி அலுவலகம் செல்வதற்குள் ஏதேனும் ஒரு வேலை தராவிட்டால், அவளுக்கு அன்று நிம்மதி இருக்காது, இதுதான் ராம சுப்பு தினமும் லேட்டாக அலுவலகத்துக்கு வரும் காரணம். உடனே நீங்கள் கேட்கலாம் ஏன் ஒரு அரை மணி நேரம் முன்னால் கிளம்பினால் என்ன என்று? அதில்தான் ஒரு மர்மம் இருக்கிறது. ராமசுப்பு ஒரு அலங்கார பிரியன். அவனுடைய புத்திர சிகாமணிகள் வெளியே சென்ற பின்னால் அவர்கள் வைத்திருக்கும் பவுடர் மற்றும் கிரீம்கள் எல்லாவற்றையும் எடுத்து தன்னை அழகு படுத்தி கொள்வான். இதை அவன் வாரிசுகள் பார்த்தால் வீடு யுத்த களமாகிவிடும். என்ன ஒரு கொடுமை சார்? சம்பாதிக்கும் ஒரு ஆண் தன்னை அலங்கரிப்பதற்கு கூட வீட்டிலுள்ளவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி உள்ளது.
இப்படி அழகு பார்த்து கிளம்பும்போது இவன் மனைவிக்கு பொறுக்காது. ‘ஏங்க” என்று வேண்டுமென்றே ஒரு பெரிய துணி மூட்டையாக கையில் கொடுத்து லாண்டரியில் போட்டு விட்டு போக சொல்வாள். இல்லையென்றால் எண்ணெய் டின்னாவது கையில் கொடுத்து கடையில் கொடுத்து விட்டு போக சொல்வாள். ஒன்றுமில்லையென்றால் அழுகிய தக்காளி இரண்டையாவது கையில் கொடுத்து குப்பை தொட்டியில் போட சொல்லி தன் வயிற்றெரிச்சலை தீர்த்துக்கொள்வாள். ராமசுப்பு மனைவி சொன்னவுடன் செய்யக்கூடாது என நினைப்பான். ஆனால் நேரடியாக சொல்ல பயந்து கொண்டு தெருவில் நடக்கும் போது எதிரில் தெரியும் நாய், மற்றும் நாலு கால் ஜீவராசிகளை அவள் பெயரை சொல்லி திட்டி தன் கோபத்தை ஆற்றிக் கொள்வான். அதே போல் வண்டி வாகனம் எதிலாவது மோதி விட்டால் பயங்கர கோபம் வந்து விடும்.(நன்குகவனிக்கவும், யாரும் அதை ஓட்டி வரக்கூடாது) அவனை பொருத்தவரை வாயில்லா ஜீவன்கள் எதுவானாலும் அவனுக்கு கோபம் தலைக்கு மேல் வரும்.மனித ஜென்மங்கள் மீது மோதி விட்டால் மனதுக்குள் திட்டி வெளியே சிரித்து பரவாயில்லை சார் என்றூ மரியாதையாக சொல்வான்..
இதே போல் ராமசுப்புவுக்கு த்ற்போது விரோதியாக தோன்றும் மானேஜர் ஹீரோ போல் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். எப்பொழுதும் 9.30 மணிக்கு மேல் அலுவலகம் வந்து உட்காரும் அவர் இன்று வீட்டம்மாளின் சச்சரவு தாளாமல், ராமசுப்புவை போல் இல்லாமல் மனித ஜென்மங்களை கடித்து குதற வேண்டுமென்று சீக்கிரமே வந்து யாராவது மாட்டுவார்களா என வருகை பதிவேட்டை கண்களால் மேய்ந்தார். அவருடைய அதிர்ஷ்டமாகவும், ராமசுப்புவுன் துரதிர்ஷ்டமாகவும் நம் கதாநாயகன் மட்டுமே அனறு வகையாக மாட்டிக்கொள்ள “ஆஹா ஒருத்தன் மாட்டினானய்யா” என்று மனதுக்குள் சந்தோஷப்பட்டு வருபவனை காய்ச்சி எடுக்க தன்னை தயார் படுத்தி கொண்டார். அதே போல் ராமசுப்புவும் மனதுக்குள் கணக்கு போட்டான். என்ன பொய் சொல்லலாம், இன்றைய மார்க்கெட் நிலவரப்படி எந்த பொய் செல்லுபடியாகும் என்று மனதுக்குள் கேட்டு கொண்டான்.
பூனை போல் மெல்ல தலையை மானேஜர் ரூமுக்குள் எட்டி பார்த்தான். சண்டைக்கு தயாராக இருக்கும் “கட்டுச்சேவல்” போல் அமர்ந்திருக்கும் மானேஜர் “எஸ் கமின்” என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்தார். (கவனிக்க எப்பொழுதும் ஒருவரை திட்டுவதானால் ஆங்கிலத்தில் ஆரம்பிப்பது நல்லது) ஆனால் நமது ராமசுப்புவுக்கு ஆங்கிலம் தடுமாற்றமானதால் லேட்டாக வந்ததை ஆங்கிலத்தில் விளக்கலாமா? தமிழில் விளக்கலாமா? என்று யோசித்து தெரியாத சரக்கை விட தெரிந்த சரக்கே நல்லது என்று “சார் லேட்டாயிடுச்சு சார்” என்று இழுத்தான். அதற்குள் என்ன பொய் சொல்லலாம் என்று மனதுக்குள் கணக்கு போட்டான்.
“அதுதான் லேட்டாயிடுச்சே, ஏன் லேட்டுன்னு கேட்டேன்? சார் கேஸ் கனெக்ஷனுக்கு ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து கேஸ் கம்பெனியில் கொடுத்துட்டு வர்றேன், கடையில் கொஞ்சம் கூட்டம், அதான் லேட்டாயிடுச்சு சார்.(இது போன வாரம் அவன் சம்சாரம் செய்த வேலை)
பழம் நழுவி பாலில் விழுவது போல சண்டைக்கு தயாரான கட்டு சேவலான மானேஜருக்கு இப்பொழுது ஒரு இக்கட்டான நிலைமை. அவருக்கும் இந்த ஆதார்+கேஸ் கனெக்ஷன் பிரச்சினையால் ஒரு வாரமாக வீட்டில் சண்டை.இபொழுது நமக்கும் காரியம் ஆக வேண்டும் அதற்கு ராமசுப்புவின் உதவி தேவை என்ன செய்யலாம்? சட்டென தன் தோரணையை மாற்றினார். சரி..சரி..இதுதான் “பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்”. ஒன்பது மணியானா டாண்ணு கையெழுத்து போட்டுடணும், என்று இவரே முதலில் வெள்ளைகொடி ஏற்றி பிரச்சினையை முடித்து வைத்தார். பின் மெதுவாக சுப்பு எனக்கும் கேஸ் கம்பெனிக்கு ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து கொடுக்கணும் நாளைக்கு என்னோட ஆதார் அட்டையை எடுத்துட்டு வர்றேன், கொஞ்சம் முடிச்சு கொடுய்யா. சரிங்க சார் (இந்த வேலையை செய்யவே முடியாது என்று அவன் மனைவி அவனை திட்டி போன வாரம் அவளே செய்தாள்) என்னென்ன கொண்டு வரவேண்டும் என்று மானேஜருக்கு லிஸ்ட் கொடுத்தான்.
வெளியே வந்து மற்றவர்களை கம்பீரமாக பார்த்தான். அவர்களுக்கு இந்த நாடகம் சப்பென்று முடிந்ததில் வருத்தம். என்ன செய்வது? நாளையும் ராமசுப்பு லேட்டாகத்தான் வருவான்.காரணம் உங்களுக்கு புரியும்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (7-Jun-18, 11:49 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 788

மேலே