என்னின் இன்றியமையாமை
துணைவி கோடை விடுமுறையில் மகனுடன் தமிழ் நாட்டுக்கு சென்றுள்ளார். நான் எனது எழுத்து மற்றும் அலுவல் காரணமாக அவர்களுடன் செல்ல இயலவில்லை. தினமும் பலமுறை பேசினாலும் நினைப்பும் நினைவும் ஏதோ சொல்கிறது. இருபத்தி இரண்டு வருட இணைந்த வாழ்வு. என்னை அறியாமல் வந்த சில வரிகள் இது. மிகவும் தன்னிச்சையாக (personal) இருந்தால் மன்னித்தருளவும்.
என்னின் இன்றியமையாமை
கோபப்படுவது முதல்
கொள்கை பேசுவது வரை
நீ இல்லாமல் இல்லை.
நீ இல்லாததால் இல்லை.
கவிதை வந்தாலும்
தீட்டிக்கொடுக்க
திட்டு வாங்கி கொண்டு
தீட்டிக்கொடுக்க
நீ இல்லையால்
இயலவில்லை.
சமைக்குமிடம்
காரசாரமாக மணக்கவில்லை.
வரவேற்பறை
வெறுப்பேற்றுகிறது.
தொலைக்காட்சிக்கும்
உன்னிடமிருந்து
பறித்துப்பார்க்கும்
தொலைக்காட்சிக்கும்
இப்போது தொல்லையில்லை.
பார்த்தால் தானே!
பேசிபேசி
உன்னிடம் பேசிப்பேசி
சலிக்கவைக்கும்
சண்டாளனுக்கு
பேசவே முடியவில்லை.
அவனுடனேயே பேசமுடியவில்லை.
செயல் பலவகை இருந்தாலும்
சிந்தனை, உடல் உன்னுடனே.
இதுதான் நீ என்
இன்றியமையாமையோ!