படிபடி உயரும்படி
#படி..படி…உயரும்படி....
நாளுமேநீ படிப்பாயே
நன்மைதரும் நூலை - அது
நலங்கொடுக்கும் நாளை - படி
நாளுக்கொரு வேளை - நூல்
நன்மதிப்பை நமக்களித்து
நம்மில்பெருக்கும் மூளை. !
நூலகங்கள் பலவுண்டு
நூல்கள் நாடி வாசி - அதில்
நுட்பமுண்டு நேசி - வெகு
நுணுக்கமதை யோசி - மதி
நொடிக்குநொடி மிளிர்ந்திடுமே
நூறுநிலவை வீசி..!
புத்தகங்கள் காட்டுமுனக்கு
புதியதொரு பாதை - அதில்
பூத்திருக்கும் கீதை - நூல்
போக்கும்பல வாதை - பலர்
பொழுதுகளைக் களவாடிப்
போர்த்திவிடும் போதை..!
அறிவினையே புதுப்பிக்க
அன்றலுரும் நூலும் - அதை
அண்டிப்படிக்க நாளும் - நம்
அறிவுயரும் மேலும் - புகழ்
அடுக்கிவரும் படித்திடவே
அன்புடையீர் கேளும்..!
#சொ.சாந்தி