புத்தளம் விதவையின் கொலை மர்மம்

இலங்கையின் தலை நகரமாம் கொழும்பில் இருந்து வடக்கே ,மேற்கு கரையோரமாக A3 பெரும் பாதையில் நீர்கொழும்பு, சிலாபம் ஆகிய நகரங்களைத் தாண்டி 82 மைல்கள் பயணித்தால் வரும் நகரம் புத்தளம். ஒரு காலத்தில் கண்டி மன்னனின் ஆட்சியின் போது துறைமுகமாக இருந்த ஊர். உப்பு விளையும் இடம் புத்தளம் . தென்னம் தோடங்களும் காடுகளும் நிறைந்த பகுதி. வடக்கில் வில்பத்து வன பூங்காவுண்டு ஒரு காலத்தில் தமிழர்கள் அனேகர் வாழந்த இடம். ஊர்பெயர்கள் அதற்கு சான்று காலப் போக்கில் தென் இந்தியாவின், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் இருந்து முஸ்லீம்களும் , செட்டி நாட்டில் இருந்து கொழும்பு செட்டி இன மக்களும். கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து காப்பிரிகளும் வந்து குடியேறினார்கள்
***
கொழும்பு செட்டி இனத்தைச் சேர்ந்த பீட்டர் வில்மட் ரோசைரோ காசி செட்டி என்பவர் புத்தளத்தில் பிறந்து வளர்ந்தவர் . ஆவரது பூர்வீகமும் புத்தளத்தை சேர்ந்தது . ஒரு விதத்தில் பிரபல சைமன் காசி செட்டிக்கு தூரத்துச் சொந்தம். வைஷவ சாதியைச் சேர்ந்தவர் .பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் புத்தளம் கச்சேரியில் சிராப்பராக( Schroff) வேலை செய்து பின்னர் அக்கரைபத்து கிராமத்துக்கு உடையார் என்ற கிராம விதானையார் பதவி பெற்றார் . பிறப்பு, இறப்பு , திருமண பதிவாளராகவும் வேலை செய்தார் . சொத்துக்கள் பல சேர்த்து புத்தளத்தில் பலர் மதிக்கும் பிரபல மனிதரானார். புத்தளத்தில் ரோசைரோ குடும்பத்தைத் தெரியாதவர்கள் அப்போது இல்லை . ரோசைரோவின் மனைவி தெரேசா சிக்கனக்காரி. பிடிவாதக்காரி
ரோசைரோ தம்பதிகளுக்கு அனிதா என்ற ஓரு அழகிய பெண் குழந்தை இருந்தது. பீட்டர் வில்மட் ரோசைரோ 1918 இல் இறந்த பொது அனிதாவுக்கு எழுவயது. ரோசைரோவின் சொத்துக்களில் பல ஏக்கர் தென்னம் தோட்டம், காட்டுக் காணி. புத்தளம் நகரத்துக்குள் வெறும் காணிகள் அதோடு பணம் 12,000 ரூபாய்கள் விட்டு சென்றார். அவரின் குடும்ப வக்கீல் முத்துக்குமாரு என்பவர்.

விதவை தெரேசா வாழ்ந்த வீட்டில் பக்மிவேவா என்ற புத்த சமயத்தை சேர்ந்தவன் வாடகைக்கு தங்கயிருந்து புத்தளம் கச்சேரியில் வேலை செய்தான். அவன் சமயப் பற்றுள்ளவன். புத்தளத்தில் உள்ள பெளத்த வாலிபர் சங்கத்தின் செயலாளர் அவன் .
அனிதா பரிசுத்த அந்தோனி பெண்கள் கத்தோலிக்க பாடசாலையில் படிப்பை தொடராமல் வீட்டில் இருந்து பக்மிவேவவின் உதவியோடு படித்தாள். அழகான கதோலிக் பெண்ணான அனிதாமேல் பௌத்தனான பக்மிவேவாவுக்கு காதல் பிறந்தது. அவளும் அவனை விரும்பினாள். தாய் தெரேசா முதலில் அவர்களின் காதலை ஏற்கவில்லை காரணம் இருவரும் வேறு பட்ட மதத்தை சேர்ந்தவர்கள் . அனால் பக்மிவேவ அரசில் நல்ல சம்பளத்தில் வேலை செய்வதால் அவர்களின் திருமணத்துக்கு அனிதாவின் தாய் ஒப்புக் கொண்டாள். பக்மிவேவாவும், அனித்தாவும் அரசினால் கொடுக்கப் பட்ட வீட்டுக்கு குடிபகுந்தனர் . அவர்களோடு போய் வாழ தெரேசா மறுத்து விட்டாள். அவள் இருக்கும் வீட்டு மாத வாடகை 20 ரூபாயை பக்மிவேவா கொடுத்து வந்தான் அதோடு உணவுக்கும் செலவுக்கும் பணம் அவன் கொடுத்தான். அனிதாவும் கணவனின் விருப்பப்படி பௌத்தத்துக்கு மதம் மாறினாள் அவர்களுக்கு குழந்தை பிறந்தது . அனிதா போய் வந்த கத்தோலிக்க தேவாலயத்தின் பிரதம பாதிரியார் அனதாவின் மதமாற்றத்தை ஏற்கவில்லை.
ரோசைரோவின் சொத்து நீரூபிப்பு ( Testamentary Case) வழக்கை வக்கீல் முத்துக்குமாரு பொறுப்பில் இருந்தது . பீட்டர் வில்மட் ரோசைரோவின் சொத்துக்கள் அவரின் தாயின் பொறுப்பில் இருந்தது அதனால் தெரேசாவும் மருமகன் பக்மிவேவவும் வக்கீல் வீட்டில் சந்தித்து சொத்திணை அனிதாவின் பேருக்கு மாற்றுவதை பற்றி பேசியபோது வாக்குவதம் ஏற்பட்டு தெரேசா மருமகனை தகாத வார்த்தைகளால் நிந்திந்தாள் . தெரேசாவுக்கு சொத்தினை மகளுக்கு கொடுக்க விடுப்பமில்லை. மருமகன் பக்மிவேவ அன்று பொறுமை காத்தார். அவர் மனதுக்குள் என்ன திட்டம் இருந்தது என்பது ஒருவருக்கும் தெரியாது. தெரேசாவின் காணியில் அவளின் அனுமதியின்றி வீடு கட்ட தன் கணவன் பக்மிவேவ திட்டம் போட்டதாக அனிதா வழக்கில் சாட்சி சொல்லும் போது சொன்னாள் . திருமதி தெரேசா ரோசைரோ தனிமையில் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்தாள். தெரேசா வசித்த வீடு மர்தேலிஸ் சில்வாவுக்குச் சொந்தமான வீடு.
சில்வா மனைவியோடும் மகன் அல்ஜினோடும் தெரேசா வாழும் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தார் . சில்வாவின் மகன் அல்ஜின் தெரேசா இருக்கும் வீட்டுக்கு சென்று வளவில் உள்ள வளர்ந்த புல்லை வெட்டுவான். அப்போது தெரேசாவை ஆச்சி என்று அழைத்து அவன் அவளோடு பேசுவதுண்டு. வீட்டு வாடகை பணம் 20 ரூபாயை மருமகன் பக்மிவேவ கொடுத்து வந்தார். தெரேசாவுக்கு வருமானம் இல்லாததால் தன் வீட்டில் உள்ள அலுமாரி . கடிகாரம், . போன்ற தளபாடப் பொருட்களை விற்று செலவுக்கு பணம் சேர்த்தாள். மருமகன் சில சமயம் மாமியாருக்கு பணம் கொடுத்து உதவி செய்வார். அனிதா தன் வீட்டில் இருந்து உணவு சமைத்து தாயுக்கு கொண்டு போய் கொடுப்பாள். அப்படி மகள் எவ்வளவோ செய்தும் தெரேசாவுக்கு மனத் திருப்தி இல்லை. மகளைப் பற்றி பிறருக்கு எப்போதும் குறை சொல்லுவாள்.
தெரேசாவின் கிட்டத்து சொந்தக்காரி திருமதி பஸ்தியாம் பிள்ளை . வசதி உள்ளவள். சில சமயங்களில் தெரேசாவுக்கு பணம் கொடுத்து உதவுவாள்

தெரேசா, ஸ்டேசன் மாஸ்டர் செல்வநாயகத்தின் தாயின் உடன் பிறவா சகோதரி. செல்வநாயகம் புத்தளம் ரயில்வே ஸ்டேசனில் வேலை செய்த போது தன் தாயின் சகோதரியை போய்ய் பார்த்தபோது அவரின் நிலை கண்டு மனம் வருந்தினார் . உடனே அவர் தெரேசாவின் நிலை பற்றி தன் தாயுக்கு சொன்ன போது அவளும் உடனே புத்தளம் வந்து தனது சகோதரியின் நிலை பார்த்து பரிதாபப் பட்டாரள். தன்னோடு கொழும்புக்கு அழைத்து செல்ல கேட்ட போது தெரேசா மறுத்து விட்டாள்.
1928 ஆம் ஆண்டு பெப்புருவரி மாதம் 15 திகதி புதன் கிழமை இரவு தெரேசா ரோசெயிரோ படுகொடூரமாக வீட்டில் கொலை செய்யப்ட்டாள்

தெரேசா கொலை செய்யபட்ட முதல் நாள் செல்வநாயகமும் அவரின் தாயும் தெரசாவிடம் இருந்து விடை பெற்று கொழும்பு சென்று விட்டனர். போகமுன் தெரேசாவுக்கும் அவளின் மருமகனுக்கும் உள்ள முரண்பாட்டை பேசி தீர்த்து வைக்க செல்வநாயகமும் அவரின் தாயும் முயன்றும் முடியவில்லை. அனிதாவையும் அவளின் கணவனையும் தனிமையில் வாழும் தெரேசாவை கவனித்துக் கோள்ளும்படி சொல்லிவிட்டு சென்றனர். திருமதி பஸ்தியாம்பிள்ளை. பதினெட்டு மைல் தூரத்தில் உள்ள தன் தொட்டத்துக்கு வேலையாக சென்று விட்டார்.

***
13 ஆம் திகதி மாலை தெரேசாவின் வீட்டுக்கு புல் வெட்ட சில்வாவின் மகன் அலகின் சென்ற போது தெரேசா முன் விறாந்தையில் இருந்து தன்னோடு பேசியதாக அவன் சொன்னான். 16 ஆம் திகதி தான் புல் வெட்ட சென்ற போது தெரேசா ஆச்சியை விறாந்தையில் காணவில்லை . தான் “ ஆச்சி நான் அலகின் வந்திருக்கிறேன் என்று சொன்ன போது “ வீட்டில் இருந்து பதில் வரவில்லை . 15 ஆம் திகதி பின்னேரம் சலவை செய்யும் அல்விஸ் என்பவனின் மனைவி மல்ஹாமி தேங்காய் விற்க தெரேசாவின் வீட்டை சென்ற போது ஒருவன் முகத்தை மூடிக்கொண்டு பின் கதவால் வீட்டுக்குள் போவதைத் தான் கண்டதாக போலீஸ் விசாரணையின் போது சொன்னாள். 18 ஆம் திகதி அலகின் புல் வேட்ட சென்ற போது தெரேசாவின் வீட்டில் இருந்து துர் நாற்றம் வருவதை அறிந்து தந்தைக்கு சொன்னான். அவர்கள் இருவரும் தெரேசாவின் மகள் அனிதாவுக்கு போய் சொன்னார்கள். அப்போது அவளின் கணவன் வீட்டில் இருக்கவில்லை. 15 ஆம் திகதி தன கணவன் லீவு என்ற படியால் வேலைக்கு போகவில்லை என்று சொன்னாள். அனிதாவும் சில்வாவும் மகனும் சொன்னதை அனிதா பெரிதாக எடுக்கவில்லை. ஒரு வேளை மிருகம் எதாவது ஓன்று செத்திருக்கும் என்று சொன்னாள். பின் பக்மிவேவாவை சந்தித்து சில்வா விசயத்தை சொன்னதும் அவர்கள் இருவரும் போய் போலீசுக்கு அறிவித்தனர்.
உடனே போலீசில் இருந்து சார்ஜன்ட் உட்பட மூன்று போலீஸ் காரர்கள் தெரேசாவின் வீட்டுக்குப் போய் கதவைத் திறந்து பார்த்தபோது தெரேசாவின் உடல் அழுகிய நிலையில். கழுத்தில் வெட்டுக் காயத்தோடு, வாயில் துணி திணித்தபடி நிலத்தில் கிடப்பதைக் கண்டனர் . உடல் கிடந்த அறைக்குள் நான்கு தகரத்திலான பெட்டிகள் மட்டும் இருந்தன. அதில் ஒரு பெட்டி மட்டும் திறந்து அதில் இருந்த துணிகள், சேலைகள். பத்திரங்கள் வெளியே எடுத்து வீசப்பட்டிருந்தன . பொருட்கள் திருடியதுக்கான அறிகுறிகள் இருக்கவில்லை. தெரேசாவை திருடும் நோக்கத்தோடு வீட்டுக்குள் வந்தவர்கள் கொலை செய்யவில்லை. கொலை செய்தவர்களுக்கு அவரிடம் பணம் இல்லை என்பது தெரியும் என போலீஸ் கருதியது. இது பழிதீர்க்கும் நோகத்தோடு அல்லது அவளின் மரணத்தால் பயன் பெறக்கூடியவர்கள் செய்த கொலையாக இருக்கும் என போலீஸ் சந்தேகித்தது. அவர்களின் சந்தேகம் முதலில் தெரசாவின் மருமகன் பக்மிவேவாவின் மேல் விழுந்தது தெரேசாவின் மரணத்தால் பயன் பெறக் கூடியவர் அவரின் ஒரே மகள் அனித்தா என்பது பொலீசுக்கு தெரிய வந்தது. அதைக் காலம் சென்ற தெரேசாவின் வக்கீல் முத்துக்குமாரு பொலீசுகு உர்ஜிதப் படுத்தினார் . அறையில் இருந்த பெட்டிகளில் ஓன்று திருமதி பஸ்தியாம்பிள்ளையினது . அது அவருக்கு திருப்பிக் கொடுக்கப் பட்டது. புத்தளம் நீதவான் வீட்டுக்கு வந்து உடலைப் பார்த்த பின், பிரேத பரிசோதனைக்கு பின் தெரேசாவின் உடலை கத்தோலிக்க முறைப்படி புதைக்கும் படி சொன்னார் . கொலையின் புலன் விசாரணை கொழும்புக்கு மாற்றப்பட்டது.

விசாரனயின் பொது பக்மிவேவா களுத்துறையில் இருந்து புத்தளத்துக்கு வந்து போதனை செய்த புத்த பிக்குவுக்கு உதவியாக வந்த பாபுசிங்கோ என்பவனின் பேச்சால் கவரப்பட்டு அவனுக்கு தான் வேலை எடுத்துத் தருவதாகச் சொல்லி தன்னோடு தன் வீட்டில் தங்க வைத்தார். அவனுக்கு நோனிஸ் பாஸின் கீழ் கூலி வேலைக்கு அமர்த்தினார். இரவில் பாபுசிங்கோ பக்மிவேவாவின் வீட்டு விறாந்தையில் படுப்பது வழக்கம்,

15 ஆம் திகதி தான் விறாந்தையில் இரவு தூங்கும் போது இரவு ஒரு மணியளவில் வன சிங்கோ என்பவன் கையில் டோர்ச் லயிட்டோடும் சைமன் சில்வா என்பவன் துவக்கோடு பக்மிவேவாவை சந்திக்க வந்ததை தான கண்டதாகவும், பின்னர் இருவரும் பக்மிவேவாவின் வீட்டுக்குள் சென்று அவரோடு பேசியதை தான் காது கொடுத்து கேட்டதாக விபரித்தான் .என்ன அவர்கள் பேசினார்கள் என்று போலீஸ் கேட்ட போது.
“ மாத்தையா நீங்கள் சொன்னபடி வேலை முடித்துவிட்டோம்” என்றான் வனசிங்கோ
“ எப்படி சொல்லு” என்று பக்மிவேவா மாத்தையா கேட்டபோது
“முதலில் மாலை ஆறுமணி அளவில் தெரேசாவுக்கு உதவி செய்யும் சாட்டில் அந்தொணி வீட்டுக்குள் புகுந்து ஒளித்து இருந்தான் நாங்கள் இருவரும் இரவு பதினோரு மணி அளவில் உங்கள் மாமியார் வீட்டுக்கு சென்று வீட்டின் பின் கதவை நான் தட்டிய பொது அந்தணி கதவை திறந்து எங்கள் இருவரையும் வீட்டுக்குள் விட்டான. அப்போது உங்கள் மாமி கட்டிலில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். எங்கள் கண்டவுடன் விழித்து எழுந்து பயத்தில் சத்தம் போட்டாள். நான் அவளின் வாயை போத்தினேன் சைமன் ஒரு பெட்டிக்குள் இருந்து கால் உறை ஒன்றை எடுத்து அவவின் வாயுக்குள் அடைத்து சத்தம் போடாமல் செய்தான். அந்தோணி அவளின் கைகளை பிடிக்க சைமன் சில்வா அவளின் கால்களை பிடிக்க நான் உங்கள் மாமியின் கழுத்தை நான் வைத்திருந்த கத்தியால் வெட்டினேன் . அவள் பேச்சு மூச்சு இல்லாமல் போனாள். உயிர் பிரிந்தது. கீழே நிலத்தில் அவளக் கிடத்தி அவளின் உடல் மேல் பெட்டிக்குள் ஒருந்து ஒரு சேலையை எடுத்து போர்த்தி விட்டு விரைவாக நாங்கள் மூவரும் வீட்டில் இருந்து வெளியே வந்தோம் . ஒருவரும் எங்ளை கவனிக்கவில்லை. அந்தணியை அவன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நாங்கள் இருவரும் உங்களிடம் நடந்ததை சொல்ல வந்தோம் அவவின் ஊயிர் நிட்சயம் பிரிந்திருக்கும். இனி எல்லாம் உங்கள் விருப்பப்படி நடக்கும்” என்றான் வன சிங்கோ. அவனின் குரல் எனக்கு நோனிஸ் பாஸிடம் வேலை செய்த போது தெரிந்த குரல்”
என்றான் பாபு சிங்கோ .

இவ்வளவுக்கும் பக்மிவேவா மாத்தையா எதுவும் சொன்னாரா என்று போலீஸ் அவனைக கேட்ட போது அவர் ரகசியமாக இதை ஒருவரிடம் மூச்சு விட வேண்டாம். இதை வைத்து கொள்ளுங்கள் என்று அவரின் தாழ்ந்த குரலில் சொன்னது மட்டும் கேட்டது” என்றான் பாபு சிங்கோ.

வக்கீல் முத்துக்குமாரு தெரேசாவின் மரணத்துக்கு சில நாட்களுக்கு முன் மருமகனோடு தன் வீட்டில் நடந்த வாக்குவாதம் பற்றி போலீசுக்கு சொன்னார். அந்த வாக்குவாதில் தெரேசா மருமகனை தகாத வார்த்தைகளால் பேசியும், பக்மிவேவா அமைதியாக இருந்ததாக சொன்னார்.

மேலும் பலர் விசாரிக்கப் பட்டு முதலாம் குற்றவாளி வனசிங்கோ, இண்டாம் குற்றவாளி சைமன் சில்வா , கொலைக்கு திட்டம் போட்டவரென தெரேசாவின் மருமகன் பக்மிவேவா மீது மூன்றாம் குற்றவாளி என வழக்கு தொடரப்பட்டது . அந்தணி மீது குற்றம் சுமத்த போதிய ஆதாரம் அரசுக்கு இருக்கவில்லை. மூன்றாம் குற்றவாளியான பக்மிவேவாவுக்கு கிங்க்ஸ் வழக்கறிஞர் சந்திரசெகராவும், முதலாம் , இரண்டாம் குற்றவாளிகளான வணசிங்கோ, சைமன் ஆகியோருக்கு வழக்கறிஞர்கள் ஸ்ரீ நிசங்கா, குணசெகர. கனகசுந்தரம்ஆகியோர் ஆஜரானார்கள். கிங்க்ஸ் வழக்கறிஞர் சந்திரசெகராவின் வாதம் பாராடுக்குரியது. பிரதம சாட்சியான பாபு சிங்கோ போலிசுக்கு சொன்னதை நம்மைப் முடியத காரணத்தை நீதிபதிக்கும் ஜூரி மார்க்ளுக்கும் விளக்கினார். களுத்துரையை சேர்ந்த பாபு சிங்கோ ஒரு புத்த பிக்குவோடு 1925 ஆம்ஆண்டு புத்தளம் வந்த பொது மூன்றம் குற்றவாளிக்கு அறிமுகமாகி அவரின் உதவியோடு கூலி வேலை கிடைத்து புத்தளத்தில் வாழ்ந்தார்.அவர் மனநிலை பாதிகப்பட்டவர் என்பதுக்கு பல அதாரங்கள் உண்டு 1917இல் இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என களுத்துறை நீதிபதியால் தீர்ப்பு அளிக்கப்பட்டு அங்கோட வைத்தியசாலைக்கு சென்று திரும்பியவன். இவன் கவர்னருக்கு தனக்கு டிரைவரோடு கார் வேண்டும், 70.000 ரூபாய் பணம் தேவை. தேயிலை தொட்டத்தில் சுப்பீரிண்டேன்டன் வேலை தேவை என்று என்று விண்ணப்பங்கள் செய்தவன். ஆகவே அவன் சொன்ன கதை அவரின் சொந்தக் கற்பனையில் உதயமானவை. கொலை நடந்தது என்று தெரிந்ததும் தன மேல் பழி வந்துவிடுமோ என்று பயந்து அவன் களுத்துறைக்கு போய் விட்டான். பிறகு போலீஸ் அவரனிடம் களுத்துறையில் சந்தித்து கேள்விகள் கேட்ட போது நீண்ட கதை ஒன்றை சொல்லியிருக்கிறான். அதோடு கச்சேரி முகாந்திரம் மூன்றாம் குற்றவாளி 15 திகதிக்கு முன் சிந்தித்த படி வேலையில் கவனம் செலுத்தாமல் இருந்தார் என்ற குற்றச்சாட்டு இந்த வழக்குக்கு பொருந்தாது. அதோடு மூன்றாம் குற்றவாளி இறந்தவரோடு பகமையாக இருந்தார் என்பது தவறு. மூன்றாம் குற்றவாளி இறந்தவரின் வீட்டுக்கு மாத வாடகையும் பல சமயங்களில் பண உதவியும் செய்தார் என்பதுக்கு ஆதாரம் உண்டு. தன் வீட்டில் மாமியாரை வந்து தங்கும் படி கேட்டதும் உண்டு. இது குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர்களின் வாதம்

இவையெல்லாம் ஒரு நீண்ட கால திட்டத்தோடு சொத்தினை குறி வைத்து மூன்றாம் குற்றவாளி செயலாற்றி இருக்கலாம் என்பதும். முதலாம் இரண்டாம் குற்றவாளிகள். மூன்றாம் குற்றவாளிக்கு ஏற்கனவே நோனிஸ் பாஸ் மூலம் நன்கு தெரிந்த கூலிகள் என்பதும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்கள் என்பதால் பணத்துக்கு எதையும் செய்வார்கள் என்பது அரசு வாதம்.. இவ்வாறு பல வாதங்கள் வைக்கப் பட்டது . ஆங்கிலம் பேசும் நீதிபதி மூன்று மணித்தியாலங்கள் ஆங்கிலம் பேசும் ஜூரிகளுக்கு வழக்கு பற்றி விளக்கி இனி முடிவு உங்களுடையது என்று அவர்களுக்கு சொன்னார். தங்கள் அறைக்குள் சென்று ஒரு மணித்தியாலம் பேசியபின் திரும்பி வந்து மூன்று குற்றவாளிகளும் நிரபராதிகள் என ஜூரிகள் ஏகமனதாக தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பை கேட்ட நீதி மன்றத்தில் குழுமி இருந்த மக்கள் கூட்டம் தீர்ப்பு சரியில்லை என கொதித்து எழுந்தது. மரணித்த திருமதி தெரேசா ரோசைரோவின் ஆன்மா சாந்தி பெறாது என சத்தம் போட்டனர் . போலீஸ் வந்து கூட்டதைக் கலைத்தது . தீர்ப்பு வழக்கறிஞர் சந்திரசெகராவின் வாதத்தால் வென்றது என்பது சட்டத் துறையில் பலர் கருத்து .இந்த வழக்கு “புத்தளம் விதவையின் கொலை மர்மம்” எனப் பெயர் பெற்றது . மாமிக்கும் மருமகனுக்கும் இடையே சொத்து விஷயத்தால் வந்த பிரச்சனையே முக்கிய காரணம். அத்தோடு தன் ஒரே மகளை மதம் மாற்றம் திருமதி தெரேசா ரோசைரோவை பாதித்துள்ளது . இந்த கொலை நிட்சயம் பணம் கொடுத்து கூலிகளை வைத்து நடந்த கொலை என்பது உறுதி . வேறு விரோதிகள் இறந்தவருக்கு இருக்கவில்லை . இதனால் பாதிக்கப்பட்டது ஒரு அப்பாவி முதுமைப் பெண்.

****

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (22-Jun-18, 4:44 pm)
பார்வை : 327

மேலே