திகிலும் ருசிக்கும் 6
திகிலும் ருசிக்கும் 6
கதவை திறந்தால் அங்கே இளம்பெண் ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள்...
ஏற்கனவே குழப்பத்தில் மூளை சூடாகி இருந்த எனக்கோ ஒன்றும் புரியாமல் பிரமை பிடித்ததை போல் நின்றுகொண்டிருந்தேன்... அவளின் கேள்வி என்னை உசுப்பியது....
"சார், உங்க வீட்ல குழந்தைங்க இருக்காங்களா"
"என்னது?" அதிர்ச்சியாகி கேட்டேன்...
"சொட்டு மருந்து போடறோம் சார், அதான் உங்க வீட்ல குழந்தைங்க இருக்காங்களான்னு கேட்டேன்"
"இப்போ தானே சொன்னேன் இல்லனு"
"இப்போவா, இல்லையே சார், நீங்க என்கிட்ட எதுவும் சொல்லலையே"
""உங்ககிட்ட இல்லமா, இதுக்கு முன்னாடி ஒரு பொண்ணு வந்துச்சில்ல, அந்த பொண்ணுகிட்ட சொன்னேனே"
"இல்லையே சார், வந்திருக்க முடியாதே, இந்த ஏரியாவுக்கு என்ன தானே அலாட் பண்ணிருக்காங்க, நானும் இப்போதானே வரேன்"
"இல்லமா, இப்போ கொஞ்சம் முன்னாடி தான் ஒரு பொண்ணு வந்து குழந்தைங்க இருக்காங்களா, சொட்டு மருந்து போடணும்னு கேட்டுச்சு, நானும் இல்லைனு சொன்னேனே"
" கண்டிப்பா வந்திருக்க முடியாது சார், அப்டியே வந்திருந்தாலும் நாங்க அனுப்பின ஆள் இல்லை, இந்த தெருவுலயும் ஒரே வீடு தான் இருக்கு, ஏதோ திருட்டு கும்பலா இருக்க போகுது, ஜாக்கிரதை சார், நான் வரேன்"
"ஒரு நிமிஷம்"
"என்ன சார்?"
"உங்களுக்கு தண்ணி வேணுமா"
அவள் ஒரு மாதிரி பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்லி புறப்பட்டாள்....
ஒரு வேளை கனவு கண்டிருப்பேனோ, இல்லை மோகினியை நினைத்துக்கொண்டிருந்ததில் கற்பனை செய்து கொண்டேனோ, இருக்கலாம், அப்படி தான் இருக்கும் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன் ...
யோசித்து யோசித்து மூளை சோர்ந்து போயிருந்தது, கொஞ்சம் காபி குடித்தால் தேவலை போல் இருந்தது...
சுட சுட காபி போட்டுகொண்டு ஹாலில் அமர்ந்து மெதுவாக உறிஞ்சி குடித்துக்கொண்டிருந்தேன்...
மனம் நிதானத்தில் இல்லாதபோதும், யோசனையில் உழன்றுகொண்டிருக்கும்போதும் சுட சுட காபியை உறிஞ்சி குடிப்பதும் ஒரு சுகம் தான்...காபியை முழுதாய் குடித்து முடித்திருக்கும்போது ஓன்று பிரச்சனைக்கான தீர்வை கண்டுபிடித்திருப்பேன், இல்லையென்றால் பிரச்னையை விட்டு அப்போதைக்கு வெளியில் வந்திருப்பேன்...
ஒன்றுக்கு இரண்டு டம்ளர் காபியை குடித்து முடித்தாயிற்று, ஆனால் குழப்பமும் தீரவில்லை, இந்த பிரச்னையை விட்டு மனமும் வெளிவரவில்லை...
அப்படியே உட்கார்ந்த வாக்கில் கண் மூடி யோசித்துக்கொண்டிருந்தேன்....
திடுக்கிட்டு எழுந்தபோது தான் நன்றாக தூங்கிவிட்டேன் என்பது தெரிந்தது...கண் அசந்த அந்த சில நிமிடங்களில் நெஞ்சை பதறவைக்கும் அளவு கனவு வந்து அலறியடித்துக்கொண்டு எழ வைத்தது....
நடுராத்திரி கதவை தட்டும் சத்தம் கேட்டு எழுந்து கதவை திறந்தால், அங்கே யாருமில்லை, தூரத்தில் ஒரு பெண் அழுதுகொண்டு இருப்பது தெரிந்தது, என்ன ஆயிற்று அவளுக்கு, யார் அவள் என்று அவளிடம் நெருங்கி சென்றால் அவள் மாயமாக மறைந்து விட்டாள், மீண்டும் சற்று தொலைவில் நின்று கொண்டு கதறி அழுகிறாள், அங்கு சென்று பார்த்தால் மீண்டும் மாயமாகிவிட்டாள்...இப்படியே நான் அவளை தேடி செல்வதும் அவள் மாயமாகி வேறு ஒரு இடத்தில நின்று கொண்டு அழுவதும் தொடர்ந்துகொண்டே இருக்க , ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய் ,இனி நீ மாயமாகிப்போனால் நான் உன்னை தேடிவரமாட்டேன் என்று கோபமாக கத்திகொண்டே அவள் அருகில் சென்றேன், அவள் மாயமாகவில்லை...அவள் முகத்தை பார்க்க அவள் தோளில் கை வைத்தேன், மெல்ல திரும்பினாள்..அவள் மோகினியே தான்...நான் அதிர்ந்து நிற்கையில் சட்டென்று அவள் முன் இருந்த கிணற்றில் என்னை தள்ளிவிட்டாள்...அவ்வளவு தான் நான் அலறியடித்துக்கொண்டு கண் விழித்துவிட்டேன்...
என்ன ஒரு பயங்கரமான கனவு, ஏன் கண் அசந்தேன் என்று இருந்தது, மனதின் படபடப்பு அடங்கவே சற்று நேரம் பிடித்தது...
என்ன செய்வது என்றே புரியவில்லை, காலையில் எழுந்ததில் இருந்து கிரகம் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது, மோகினியை பார்த்தபோது கூட வராத கலக்கம் அவள் உடன் இல்லாத போது மனதை பாடாய் படுத்திகொண்டிருக்கிறது ...
இனி வீட்டில் இருந்தால் பயந்து பயந்தே செத்துவிடுவேன் என்று தோன்ற வெளியில் எங்கயாவது போகலாம் என்று முடிவெடுத்தேன்,முகம் கை கால் அலம்பிவிட்டு செலவுக்கு கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்ட பூட்டை தேடினேன்...
இந்த பூட்டோ கிடைப்பேனா என்று அடம்பிடித்தது...சரியான சனியனா இருக்கே, எங்க போய் தொலஞ்சிச்சோ, சனியன் சனியன்....கோபத்தில் சொல்லிவிட்டாலும் கனகா வின் நினைவு வந்ததும் தலையில் அடித்துக்கொண்டேன்...
அட கோபத்துல இந்த வார்த்தையை சொல்லிட்டேனே, ஐயோ ராமா....இந்நேரம் கனகா இருந்தா கோவிச்சிக்கிட்டு பொட்டிய தூக்கிகிட்டு அவ பொறந்த வீட்டுக்கே போயிருப்பாளே, அவளுக்கு இந்த வார்த்தையை சொன்னாலே பிடிக்காது, எனக்கோ கோபம் வந்தாலே இந்த வார்த்தையும் வந்துவிடும், கல்யாணம் ஆன புதுசில் பக்கத்து வீட்டு பொடுசுங்க கிரிக்கெட் ஆடறேன் பேர்வழின்னு கண்ணாடி ஜன்னலை உடைக்க நான் கோபத்தில் இந்த வார்த்தை சொல்லி திட்ட, உடனே கனகா என்னோட சண்டை பிடிக்க இனி இந்த வார்த்தையை ஆயுசுக்கும் சொல்ல மாட்டேன் என்று அன்னைக்கு சத்யம் பண்ணியது தான்,நேற்று வரை சொல்லாமல் தான் இருந்தேன், ஆனால் இன்னைக்கு எப்படி சொல்லி தொலைஞ்சேனோ...மீண்டும் தலையில் ரெண்டு குட்டு வைத்துக்கொண்டு பூட்டை தேடிக்கொண்டிருந்தேன்....
"இதையா இவ்வளவு நேரமாக தேடிட்டு இருக்கீங்க" என்று பின்னால் இருந்து ஒரு குரல் கேட்க என் முன்னால் அந்தரத்தில் பூட்டு தொங்கி கொண்டிருந்தது....