காந்தி- -------------------எஸ்ராமகிருஷ்ணன்--------------------காந்தியோடு பேசுவேன்------------சிறுகதை

காந்தி ஒரு தூய்மையான காற்று, அது எப்போது உக்கிரம் கொள்ளும், எப்போது தணிவு கொள்ளும் என்று தெரியாது, ஆனால் அதன் வேகத்தில் தூசிகள், குப்பைகள் அடித்து கொண்டு போகப்படும் என்பது உண்மை தானே,//
------------------
காலையில் தான் வார்தாவிற்கு வந்து இறங்கியிருந்தேன், நான் வார்தாவில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு வருவது இதுவே முதன்முறை, ஆனால் அதைப்பற்றி நிறைய வாசித்திருக்கிறேன், புகைப்படங்களிலும் பார்த்திருக்கிறேன், ஆனால் நேரில் காணும்போது அதன் பெருமைகள் எதுவும் கண்ணில்படவில்லை, சுமாரான பராமரிப்பில் நடைபெறும் ஒரு முதியோர் விடுதி ஒன்றைப்போலவே இருந்தது

ராகேல், காந்தியின் குடிலை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள், இந்த அறையில் தான் காந்தி தங்கியிருந்திருக்கிறார், கூரை வேய்ந்த எளிமையான அறை, காந்தியின் கைத்தடி மற்றும் காலணிகள், எழுதும்பொருள்கள், பாதுகாப்பாக வைக்கபட்டிருந்தன, ஒரு அரிக்கேன் விளக்கு படுக்கையின் அருகில் இருந்த்து,

காந்தி இந்த ஆசிரமத்தில் மின்சாரத்தை பயன்படுத்தினாரா என்று ராகேல் என்னிடம் கேட்டாள்

இல்லை என்றே நினைக்கிறேன், ஆனால் மின்சாரத்தின் வருகை இந்திய கிராமங்களின் இயல்பை மாற்றிய முக்கியமான அம்சம் என்பதை காந்தி நிச்சயம் உணர்ந்திருப்பார் என்றேன்

காந்தியின் அறையில், மூங்கிலால் செய்யப்பட்ட ஒரு அலமாரி, பித்தளை செம்புகள், முக்காலி, இருந்தன, அருகில் ஒரு பழைய மரக்கட்டில், மிகச்சிறிய ஜன்னல்,

தனது தேவைகளை ஒரு மனிதன் எப்படி முடிவு செய்து கொள்கிறான் என்பதில் தான் அவனது வாழ்க்கை துவங்குகிறது, காந்தி தனது தேவைகள் குறித்து மிகவும் கவனம் கொண்ட மனிதராகவே தோன்றுகிறார்,

தேவைகளை உருவாக்கி கொள்வது எளிது, விட்டுவிடுவது கடினம் என்பதை நான் இப்போது தான் உணர்ந்து வருகிறேன், ஒருவகையில் காந்தியின் மீதான எனது ஈர்ப்பிற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணம் என்றே சொல்வேன்

காந்தி வாழ்ந்த காலத்தில் அந்த அறைக்குள் வந்து நிற்பது பலருக்கும் நெகிழ்வான சம்பவமாக இருந்திருக்கும், ஒரு நிமிசம் மனக்கண்ணில் அந்த காட்சி தோன்றி மறைந்த்து, காந்தி இந்த இடத்தில் தான் உட்கார்ந்து கொண்டிருப்பார், காந்தி வெறுமனாக உட்கார்ந்திருப்பார் என்று நினைக்கவே முடியாது, ஏதாவது ஒரு வேலையை பரபரப்பாக செய்து கொண்டேயிருந்திருப்பார், ஏன் அவருக்குள் இத்தனை பரபரப்பு, வேகம், ஒய்வு என்பதை ஏன் அந்த மனிதன் பலவீனமாக கருதுகிறார் என்றெல்லாம் எனக்கு தோன்றியது

காந்தி நிமிசங்களை எண்ணி வாழ்ந்திருக்கிறார், நான் அப்படியில்லை, சோம்பலும் எதிலும் திருப்தியின்மையும், தேவையற்ற பயமும் கவலையுமே என்னை உருவாக்கின, நான் கல்வியின் வழியே என் வாழ்வினை உருவாக்கி கொண்டவன், காந்தி படிப்பை கைவிட்டு தனது வாழ்க்கையை முன்னெடுத்து சென்றவர், வாழ்வின் முடிவில் ஒரு எளிய இந்திய விவசாயியை போல தான் அவர் இருந்தார், அதிகமான நம்பிக்கை, அதிகமான ஏமாற்றம் இரண்டும் அவருக்கு பரிசாக கிடைத்தன,

காந்தியை அறிந்து கொள்ள வாசிப்பு உதவி செய்யாது என்றே நான் நம்புகிறேன், வாசிப்பின் வழியே காந்தி கருத்துருவமாக மட்டுமே பதிவாகிறார், அவரது செயல்பாடுகளின் பின்னுள்ள வலியை, எளிமையை, நேரடித்தன்மையை வாழ்ந்து பார்க்க வேண்டும், அப்போது தான் காந்தி , மணல்கடிகாரத்தில் ஒவ்வொரு துளி மணலாக விழுந்து நிரம்புவதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் விழுந்து நிறைவார்,

எனக்கு காந்தியை அறிமுகப்படுத்தியது என்னுடைய அம்மா, என் பனிரெண்டு வயதில் காந்தியை பென்சிலில் படம் வரைந்து முதல் பரிசு வாங்கி வந்ததை கண்டு சந்தோஷப்பட்டபடியே தத்ரூபமா வரைஞ்சிருக்கே, நான் காந்தியை நேர்ல பாத்து இருக்கேன் என்று அம்மா சொன்னார்

என்னால் அதை நம்ப முடியவில்லை, அம்மா எப்படி காந்தியை நேரடியாக பார்த்திருப்பாள், ஒரு வேளை காந்தி அவளது பாட்டைகுளம் கிராமத்திற்கு வந்திருந்தாரா எனக்கேட்டேன்,

என் ஊருக்கு காந்தி வரவில்லை, ஆனா நான் காந்தியை அவரது வார்தா ஆசிரமத்திற்கே தேடிப்போய் பார்த்திருக்கேன் என்றாள்

நிஜமா எனக்கேட்டபோது, அது ஒரு பெரிய கதை, அப்போ நீ எல்லாம் பொறக்கவேயில்லை, என்றபடியே தனது இடதுகையை நீட்டி காட்டினாள், அம்மாவின் இடதுகை சற்று வளைந்து துருத்திக் கொண்டது போலதானிருந்தது,

இந்த கை காந்திக்காக உடைப்பட்டது, யார் உடைச்சா தெரியும்லே உங்கப்பா, காந்தியை பாக்கப் போனதுக்கு கிடைத்த தண்டனை, உங்கப்பாவுக்கு காந்தியை சுத்தமா பிடிக்காது, உங்கப்பா என்ன பெரும்பான்மை ஆம்பளைகளுக்கு காந்தியை பிடிக்காது, அதிகாரம் பண்ண ஆசைப்படுற ஆம்பளை காந்தியை வெறுக்கதானே செய்வாங்க, ஆனா பெண்களாலே காந்தியை ஆழமாக புரிந்துகொள்ள முடியும்,

வார்தாவுக்கு போயி காந்தி முன்னாடி நின்னுகிட்டு இருந்தப்போ அவரை ஒரு ஆணாக வேறுபடுத்தி பாக்க என்னாலே முடியலை, பேச்சு வராமல் நாக்கு தடிச்சி போனது மாதிரி ஆகிருச்சி, என்னை மீறி அழுதுட்டேன், பாபுஜி கருணையான கண்களோட சிரிச்சிகிட்டே என் கிட்டே வந்து ஏதோ சொன்னார், எனக்கு அப்போ ஒரு வார்த்தை இங்கிலீஷ் தெரியாது, ஹிந்தியும் தெரியாது, ஆனா பாபுஜி எனக்கு ஆறுதல் சொல்றாருனு மட்டும் புரிஞ்சது,

அங்கேயே பாபுஜியோட ஆசிரமத்திலே வாழ்நாள் பூரா இருந்திர மாட்டமானு ஏக்கமா இருந்துச்சி, அதுக்கு கொடுத்து வைக்கலே, திடீர்னு ஒரு நாள் உங்கப்பா வந்து இழுத்துட்டு வந்துட்டார், ஆசிரமத்தை விட்டு போகமாட்டேனு பிடிவாதம் பண்ணினேன், பாபுஜி என் தலையை தடவி ஊருக்கு போயிட்டு வரச்சொல்லி அனுப்பி வச்சார், அவர் சொல்லுக்கு கட்டுபட்டு தான் உங்கப்பாவோட இத்தனை வருஷம் வாழ்ந்திருக்கேன் , என்றார்

நீ எதுக்காக அம்மா காந்தியை தேடிப்போனே என்று கேட்டேன்,

அம்மா பதில் சொல்லவில்லை, மௌனமாக இருந்தாள், பிறகு லேசாக தலையை ஆட்டியபடியே அதை பத்தி உனக்கு சொன்னா புரியாது, சொல்றதுல எனக்கும் விருப்பம் இல்லே என்று பேச்சை துண்டித்துவிட்டாள்

அதன்பிறகு ஒன்றிரண்டு முறை காந்தியை பற்றி பேச்சு வரும்போது அம்மா வார்தாவிற்கு ஒடிப்போன கதையின் ஒரு சில நிகழ்வுகளை கேட்டிருக்கறேன், அப்பா ஒரு முறை கோபத்தில் உங்கம்மா ஒரு ஒடுகாலி முண்ட, வேற ஆம்பளையா இருந்தா இந்தநேரம் அவளை வெட்டி கொன்னு புதைச்சிருப்பான் என்று கத்தினார்,

அதை தான் எப்பவோ செய்துட்டீங்களே என்று அம்மா அமைதியாக சொன்னாள், அப்பா அம்மாவை முறைத்தபடியே வெளியேறிப் போய்விட்டார்

பொம்பளைங்க அரசியல் பேசினா உங்கப்பாவுக்கு பிடிக்காது, அதுவும் படிக்கிற பொம்பளைன்னா அவருக்கு எட்டிக்காய், இதுல காந்திகட்சியில வேற சேந்துகிட்டா, அதான் உங்கப்பாவுக்கு அம்மாவுக்குமான பிரச்சனை என்று ஒரு முறை வெங்கடரத்னம் மாமா என்னிடம் சொன்னார்

அந்த வயதில் இதை வெறும் கணவன் மனைவி சண்டை என்று மட்டும் தான் நினைத்திருந்தேன், ஆனால் இது குடும்ப சண்டையில்லை, வெறுப்பிற்கும் அன்பிற்குமான ஊசலாட்டம் என்பதை பின்னாளில் தான் புரிந்து கொண்டேன், அம்மாவை குடும்ப வாழ்க்கை இருட்டிற்குள் பிடித்துத் தள்ளிய போது அதிலிருந்து காந்தி தான் அவளை மீட்டிருக்கிறார், தனது உண்மையான செயல்களின் வழியே மற்றவர்களின் ஏளனத்தை கடந்து செல்ல முடியும் என்பதை நிருபணம் செய்திருக்கிறார், தனது மனசாட்சியின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை கற்றுதந்திருக்கிறார், எல்லாவற்றையும் விட அடுத்தவர் பொருட்டு வாழ்வது எப்போதும் வலிமிக்கதே, ஆனால் அதில் கிடைக்கும் மனசாந்தி பெரியது என்பதை காந்தியே உணர்த்தியிருக்கிறார்

இதைப்பற்றி பேசுகையில் ராகேல் சொன்னாள்

லட்ஸ், உண்மையில் கடவுள் கைவிட்டு போன உலகை காந்தி நிரப்பியிருக்கிறார், அது தான் உன் அம்மா விஷயத்தில் நடந்திருக்கிறது, இரண்டு முறை கர்ப்பசிதைவு, அடுத்தடுத்து குழந்தைகள், வறுமை, கூட்டு குடும்பத்தின் அவமானம் இத்தனையும் உனது அம்மாவை மூச்சு திணற அமுக்கும் போது காந்தி மட்டும் தான் அவளுக்கான நம்பிக்கை வெளிச்சமாக இருந்திருக்கிறார், காந்தி என்ற சமூகபோராட்டக்காரனை விட காந்தி என்ற இந்த எளிய நம்பிக்கை அதிகம் வலிமையுடையது, அதை உணர்ந்தவர்கள் காந்தியை எப்போதும் நேசித்து கொண்டுதானிருக்கிறார்கள்

ராகேல் சொல்வது உண்மை, இந்திய பெண்கள் காந்தியை சமூகசேவகர் என்ற தளத்தில் புரிந்து கொள்ளவில்லை, பெரும்பான்மை மக்கள் சகலவிதமான அடிப்படை அறங்களையும் கைவிட்டு தீமையும் பொய்மையும் தனதாக்கி கொண்ட சூழலில் அறத்தின் பொருட்டு தன்னை ஒப்படைத்துக் கொண்டு சுயபரிசோதனை கொண்ட வாழ்வை மேற்கொண்ட எளிய மனிதர் என்றே புரிந்து கொண்டிருக்கிறார்கள்

ராகேலுக்கு வன்முறையின் கொடூரம் தெரியும், அவள் யூதப்பெண், எனது மாணவியாக அறிமுகமாகி என்னை திருமணம் செய்து கொண்டவள், அவளுக்கு என்னை விடவும் என் குடும்பத்தை சேர்ந்த பெண்களிடம் அதிகம் ஒட்டுதல், அந்த பெண்கள் நித்யமான வதைமுகாமில் வாழ்பவர்கள் என்று ஒருமுறை ராகேல் என்னிடம் சொன்னது நிஜமான உண்மை

நான் லண்டனுக்கு பொருளாதாரம் படிக்க போய் அங்கேயே வேலை பார்க்க துவங்கிய போது அம்மா ஒரு முறை போனில் கேட்டாள்

ஒரேயொரு தரம் லண்டனுக்கு வரணும்னு ஆசையா இருக்கு லட்சுமா,

அம்மா ஒருத்தி தான் லட்சுமணன் என்ற என் பெயரை லட்சுமா என்று அழைப்பவள், லண்டன்வாசிகள் என்னை லட்ஸ் என்கிறார்கள், அப்பாவிற்கும் மற்ற நண்பர்களுக்கும் மணா, ஆனால் அம்மா என்னை லட்சுமா என்று அழைக்கையில் அது பெண் பெயர் போலவே இருக்கிறது, அம்மா அப்படி அழைக்கையில் அதில் ஒரு தனியான பிரியம் கலந்திருக்கும்,

அடுத்த முறை ஊருக்கு வரும்போது உன்னையும் லண்டனுக்கு அழைச்சிட்டு வர்றேன்மா என்றேன்

இல்லைடா, நானா. தனியா லண்டனுக்கு வரணும்னு ஆசை, அதுவும் கப்பல் போகணும்னு ஆசை என்றாள் அம்மா

எனக்கு புரிந்துவிட்டது, இந்த ஆசையின் அடிநாதமாக இருப்பதும் காந்தியின் மீதான பற்றுதல், பத்தொன்பது வயதில் மொழி தெரியாமல் லண்டனுக்கு படிக்க போன காந்தியின் மனதை தானும் அனுபவித்து பார்க்க விரும்புகிறாள், அப்படி என்ன காந்தியின் மீது கிறுக்குதனம்,

நான் சிரித்தபடியே இப்போ கப்பல் பயணம் கிடையாதும்மா, நீ பிளைட்ல தனியா வரலாம் என்றேன்

அப்படித்தான் அம்மா தனி ஆளாக லண்டனுக்கு பயணம் செய்து வந்திறங்கினாள், முற்றிய முதுமை அவளுக்கு தனியான சோபையை தந்திருந்த்து, ஆரஞ்சு நிற சால்வை ஒன்றினை போர்த்தியபடி வெளிர்சிவப்பு வண்ண சேலையை அழகாக உடுத்தியபடியே கொக்கின் வெண்மை போன்ற தலைமுடியுடன், சோகை படிந்த முகத்துடன் அம்மா இறங்கி மெதுவாக கண்ணாடி கதவுகளை தாண்டி நடந்துவந்தாள்,

அவளது கண்களில் ஒரு துளி பயமில்லை, கடந்து செல்லும் பயணிகள் யாரையும் அவள் ஏறிட்டு கூட பார்க்கவில்லை, நிதானமாக, மெதுவாக அவள் வெளியேறும் வாசலை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த காட்சி என் மனதில் அப்படியே பதிவாகியிருக்கிறது

இமிகிரேஷனில் ஏதாவது கேட்டார்களா என்று இறுக்கமான குரலில் கேட்டேன்

எதற்காக இந்த பயணம் என்று கேட்டார்கள், நான் சும்மா என்று சொன்னேன், இமிகிரேஷன் அதிகாரி சிரித்தபடியே சும்மா லண்டனுக்கு வருகின்றவர்கள் இதை விட்டு ஒரு போதும் திரும்பி போக மாட்டார்கள், நீங்களும் அப்படி ஆகப்போகிறீர்கள் பாருங்கள் என்றார்

எனது நினைவுகள் என்னை வெளியூரில் தங்கவிடாது என்று சொன்னேன், அவர் வியப்புடன் கையை உயர்த்தி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்றார், அவ்வளவு தான் நடந்தது என்றபடியே காரின் கண்ணாடி வழியாக தெரியும் பரபரப்பான லண்டன் வீதிகளை பார்த்தபடியே வந்தார்,

அப்பா இறந்து போன கடந்த பத்து வருஷங்களாக அம்மா நாள் முழுவதும் படித்துக் கொண்டேயிருக்கிறாள், தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் மாறிமாறி படிக்கிறாள், சில இரவுகளில் அவள் படிப்பதை காணும் போது ஏதோ பரிட்சைக்கு படிப்பது போல இருக்கும், சில சமயம் நாற்காலியில் சாய்ந்து கொண்டு மடியில் புத்தகத்தை வைத்து கொண்டு தனக்கு தானே பேசிக் கொண்டிருப்பாள், அம்மாவிற்கென தனியான உலகம் ஒன்றிருக்கிறது, அவள் தன்னை சுற்றி தானே ஒரு அரூபவலையை பின்னிக் கொண்டுவிட்டாள்

லண்டனில் அம்மா என்னுடன் இரண்டரை மாதம் தங்கியிருந்தாள், தனியாக அவளாக டியூப் ரயிலில் பயணம் செய்து காந்தி படித்த யூனிவர்சிட்டி காலேஜ், காந்தி நடந்த வீதிகள், காந்தி உறுப்பினராக இருந்த வெஜிடேரியன் சங்கம் என்று ஒவ்வொன்றாக தேடி பார்த்துக் கொண்டிருந்தாள், அதைப்பற்றி என்னிடம் அதிகம் பேசிக் கொண்டது கிடையாது, சிலவேளைகளில் எனது மனைவி ராகேலிடம் காந்தியை பற்றி பேசியிருக்க்கூடும்,

ராகேலும் அம்மாவும் பேசிக் கொள்வது வேடிக்கையாக இருக்கும், அம்மா ராகேலை ஒரு பள்ளிசிறுமியை நடத்துவது போலவே நடத்தினாள்,

ஒரு நாள் ராகேல் என்னிடம் கேட்டாள்

பொதுவாக இந்தியப்பெண்கள் அதிகம் தலையை ஆட்டுவார்கள், உன் அம்மா பேசும்போது அப்படியில்லையே அது ஏன்

நான் அப்போது தான் அப்படி ஒரு விஷயமிருப்பதை கவனித்தேன், என்ன சொல்வது எனப் புரியாமல் சிரித்தபடியே பெண்கள் எந்த ஒன்றையும் உன்னிப்பாக கவனிக்கிறீர்கள், உன் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்றேன்

ராகேல் சொன்னாள்

உன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது பலநேரங்களில் பயமாக இருக்கிறது, அவரது கண்களில் சொல்லப்படாத விஷயங்கள் புதையுண்டுகிடக்கின்றன, அவர் ஒரு விசித்திரமான பறவை.

அம்மா ஒரு விசித்திரமான பறவை என்று ராகேல் சொன்னது எனக்கு பிடித்திருந்தது, நானும் அப்படி உணர்ந்திருக்கிறேன், வெறும் பறவை இல்லை, காந்தியைத் தேடும் பறவை,

அம்மா காந்தி வழியாக என்ன தேடுகிறாள் என்று தெரிந்து கொள்வதற்காக ஒரு நாள் அவளுடன் நானும் வருவதாக சொன்னேன், அம்மா மறுக்கவில்லை, இருவரும் ஒன்றாக ரயில் பிடித்துப் போய் டோவர் வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் காபி அருந்திவிட்டு அம்மா வழக்கமாக செல்லும் பழைய நூலகம் ஒன்றிற்கு சென்றோம்,

அம்மா பாதியில் விட்டுவந்த ஒரு புத்தகத்தை எடுத்துவந்து மௌனமாக வாசிக்க துவங்கினாள், அம்மா உட்கார்ந்திருந்த ஜன்னலில் இருந்து லண்டன் நகரம் ஒளிர்வது தெரிந்த்து, படிப்பதற்காக அந்த இடத்தை அம்மா தேர்வு செய்திருக்கவில்லை, அவள் லண்டன் நகரின் இயக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக அவதானிக்கிறாள்,

இந்த நகருக்கு என்றே ஒளிரும் மஞ்சள் வெளிச்சத்தை, ஈரம் படிந்த காற்றை அவள் தனக்குள் நிரப்பிக் கொள்கிறாள், அம்மா நீண்ட நேரம் மௌனமாக இருந்துவிட்டு சொன்னாள்

“காந்தி லண்டனுக்கு வந்த போது தனது தாயை விட்டு விலகி வந்திருப்பதை அதிகம் உணர்ந்திருப்பார், இந்த நகரம் பிரிவை அதிகமாக உணரவைக்கிறது “

நிஜம் நானும் அப்படி உணர்ந்திருக்கிறேன், பல்கலைகழகத்தில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு பனிக்கட்டி உடைவது போல மனதிற்குள் ஏதோவொரு கடந்தகால சம்பவம் உடைபட்டு பிரிந்து போன உறவுகளை பற்றிய நினைவுகள் பீறிடத்துவங்கிவிடும், அந்த மனநிலை ஒன்றிரண்டு நாட்களுக்கு தீவிரமாக இருந்து பின்பு வடிந்து போய்விடும்,

அதைப்பற்றி ராகேல் சொல்வாள்

இந்தியர்கள் அதிகம் கடந்த காலத்தை பற்றி நினைக்கிறார்கள், வருத்தபடுகிறார்கள், அது தான் அவர்களின் பலமும் பலவீனமும்,

அவள் சொல்வது உண்மை, ஆனால் அது வெறும் வருத்தமில்லை, ஆழமான தன்னுணர்வு, ஒரு தோழமை, சொல்லால் பகிர்ந்து கொள்ளமுடியாத ஒரு நிலை, அது போன்ற நாட்களில் ராகேலுடன் நான் ஒரு வார்த்தை கூட பேசமாட்டேன்,

அவள் அதை புரிந்து கொண்டிருப்பாள், அவளைப்போன்ற யூதப்பெண்களுக்கு ஆண்களின் பேச்சை விட மௌனம் அதிகமாக பிடிக்கிறது, எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது

அம்மா நூலகத்தில் வைத்து என்னிடம் சொன்னாள்

காந்தி தனது தந்தையை பற்றி அதிகம் நினைவுகள் இல்லாதவர், தந்தையின் நிழலில் இருந்து முற்றிலும் விடுபட்டவராக தன்னை உணர்ந்தவர், அவரும் ஒரு நல்ல தந்தையில்லை. ஆனால் தாயோடு நெருக்கமாக இருந்திருக்கிறார், தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்த மனிதராகவே அவரையும் புத்தரையும் பார்க்கிறேன், இருவரிடமும் நிறைய ஒப்புமைகள் இருக்கின்றன, காந்தியிடம் இந்திய பெண்களின் அகமே உள்ளது, அது வலிமையானது, எளிதில் வீழ்ந்துவிடாதது, உண்ணாவிரதம் இருப்பதை ஆயுதமாக பயன்படுத்துகிறார் என்றாலே அது பெண்மை உருவாக்கிய எதிர்ப்பு வடிவம் தானே என்றாள்

அம்மா ஆழ்ந்து பேசுகிறாள், புத்தகங்கள் அவளுக்கு நிறைய கற்றுதந்திருக்கின்றன, எது எனக்கு வெறும் தகவலாக இருக்கிறதோ, அது அவளுக்கு அனுபவமாக மாறியிருக்கிறது என்று மட்டும் புரிந்த்து,

மற்றபடி காந்தி என்னை பெரிதாக வசீகரிக்கவில்லை

அதன்பிறகு ஒரு நாள் அம்மாவும் நானும் நடந்தே விக்டோரியா பார்க்கிற்கு போனோம், அம்மா அன்று தான் வார்தாவிற்கு தான் ஒடிப்போன கதையை முழுமையாக சொன்னாள்

அப்போது அம்மாவிற்கு வயது பத்தொன்பது வயது நடந்து கொண்டிருந்தது. பதினாலு வயதில் அவளுக்கு திருமணம் நடந்துவிட்டது, திருமணத்திற்கு பிறகு ஆறுமாதம் அவள் அம்மாவீட்டிலே இருந்தாள், அந்த நாட்களில் அப்பா சால்ட் இன்ஸ்பெக்டராக மரக்காணத்தில் வேலையில் இருந்தார்,

முற்றிய கோடைகாலத்தில் அம்மாவை அழைத்துக் கொண்டு அப்பா கடற்கரையில் தனக்கு ஒதுக்கபட்ட வீட்டிற்கு புதுக்குடித்தனம் போயிருந்தார், ஆள் அரவமற்ற அந்த வீடு, மினுக்கும் உப்பளங்கள், உப்பு காய்ந்து உருகும் மணம், கடற்காகங்களின் பீதியூட்டும் குரல், கொதிக்கும் வெயில் எல்லாமும் ஒன்று சேர்ந்து இரண்டுவாரத்திலே அம்மாவின் உடல்நிலையை மோசமாக்கியது, இருமலும் காய்ச்சலும் ஒன்று சேர்ந்து வாட்டின, உறங்க முடியாமல் இரவெல்லாம் இருமிக் கொண்டே கிடந்தாள், இதை சகித்துக் கொள்ள முடியாமல் அப்பா அவரது அத்தைவீடான கொல்லத்தில் கொண்டு போய் அம்மாவை விட்டுவந்தார்,

அங்கே இருக்கும் போது தான் முதன்முறையாக அம்மா சுதந்திர போராட்ட ஊர்வலங்களை காணத்துவங்கியிருந்தாள், அவளும் நாராயணி என்ற பெண்ணுமாக சாலையில் கொடிபிடித்தபடியே செல்லும் காங்கிரஸ் காரர்களுக்கு வாழ்த்து சொல்வார்கள், ஒரு நாள் இருவரும் பகவதி கோவிலில் போய் காங்கிரஸ் ஜெயிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள், அதன்பிறகு தான் அம்மா காந்தியை பற்றி கேள்விபடத்துவங்கினாள், அதுவும் நீலம்மை வழியாக தான் கேட்டறிந்தாள்,

நீலம்மை ஒரு பணிப்பெண், அவள் காந்தியை பற்றி சொல்லும் போது வியப்புடன் சொன்னாள்

சுசிலா கேட்டியோ, அந்த மனுசன் ஆம்பளைக யாரும் கள்ளுக்குடிக்க கூடாதுனு சொல்றார், அது ஒண்ணு போதும் அவர் நல்லவர்ங்கிறதுக்கு, போலீஸ்கிட்ட அடிவாங்கி ஜெயிலுக்கு போயிருக்கிறார், தான் துணியை தானே துவைச்சிகிடுறார், கழிப்பறையை கூட தானே சுத்தப்படுத்துறதா தளியத் முதலாளி சொன்னார், அப்படி ஒரு மனுஷன் நடந்துகிடுறார்னா, அவர் தானே உண்மையான தலைவர்,

நீலம்மை வழியாக காந்தியை பற்றி கேட்டு அறிந்த இரண்டுநாட்களுக்கு பிறகு உள்ளுரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்திற்கு ரகசியமாக ஒளிந்து போய் கேட்டாள், அதில் தான் காந்தியை பற்றிய பாடலை முதன்முறையாக கேட்டாள், உருக்கமான பாடலது, அந்த பாடல் காந்தியின் பற்றிய ஒரு பிம்பத்தை அவள் மனதிற்குள் உருவாக்கியது,

காந்தி என்பவர் ஒரு மீட்பர், வெள்ளைகாரர்களிடம் இருந்து இந்திய ஜனங்களை மீட்பதற்காக பாடுபடுகின்றவர், எளிமையான மனிதர், ஒயாத போராட்டக்காரர், அன்றைய கூட்டத்தில் கூட காந்தியை பற்றி பலரும் புகழ்ந்து, வியந்து பேசினார்கள், கேட்க கேட்க காந்தியை உடனே பார்க்க வேண்டும் போலிருந்தது

கொல்லத்தில் இருந்த போது அம்மா முதல்முறையாக கர்ப்பிணியானாள், உடனே அவளை சில மாதங்கள் அவளது தாய்வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள், அங்கே அவள் சீனுவாச மாமாவிடம் இருந்து காந்தியை பற்றி பிரசுரம் ஒன்றினை வாங்கிவந்து படிக்க துவங்கினாள், படிக்க படிக்க அவளுக்குள் காந்தி என்ற மனிதன் வேர்விட்டு வளரத்துவங்கினார், காந்தியை பற்றி அவளுக்குள் ஏதேதோ கேள்விகள், எழுந்தன, அவற்றை யாரிடம் கேட்டு விளக்கம் பெறுவது என்றே தெரியவில்லை,

இதற்குள் அவளை மறுபடியும் மரக்காணம் அழைத்துப் போனார், அப்பா, இடமாற்றம், அப்பாவின் தீராத காமஇச்சை இரண்டும் அவளை மிகவும் சோர்வடைய செய்தன, தூரத்து கடற்கரையின் ஒயாத சப்தம், உக்கிரமான வெயில் இரண்டும் அவளுக்கு தலைவலியை அதிகமாக்குவதாக இருந்தது, வெறுமையான பகல்கள், அர்த்தமில்லாத பொழுதுகள் என்று நீண்டன நாட்கள், இதற்கிடையில் அவளது கர்ப்பம் கலைந்து போனதுடன் அதிக ரத்தம் போக்கும் ஏற்பட்டு அவள் நலிவுறத் துவங்கினாள், அப்பா அவளை போன்ற ஒரு உதவாக்கரையை கட்டிக் கொண்டு தான் அவதிப்படுவதாக மாமனாருக்கு தந்தி அனுப்பி உடனே கூட்டிப்போக செய்தார்

ஒன்றரை வருஷம் அவள் ஊரிலே வாழவெட்டியாக இருந்தாள், அந்த நாட்களில் அவளை மனச்சோர்வில் இருந்து காப்பாற்றியவர் காந்தி, அவள் சதா காந்தியை பற்றிய செய்திகளை கேட்டறிந்து கொண்டும் ராட்டை நூற்றுக்கொண்டுமிருந்தாள், இடையில் ஒருமுறை மரக்காணத்தில் இருந்து அப்பா வந்து சமாதானம் பேசி அவளை அழைத்துக் கொண்டுபோனார், அவர்கள் மதுரை ரயில்கெடி போவதற்குள் வழியில் சண்டை வந்து அப்பா ரோட்டிலே அம்மாவை அடித்து வளையல்களை உடைத்து போட்டதுடன் அவளை அங்கேயே தனியே விட்டுவிட்டு தனி ஆளாக மரக்காணத்திற்கு கிளம்பி போய்விட்டார்

அப்பாவின் கெடுபிடியும் கோபமும் ஆத்திரமும் அம்மாவின் மனநிலையை ஒடுக்க துவங்கின, மனநலம் பாதிக்கபட்டவரை போல அப்பாவின் பெயரை சொன்னாலே நடுங்க துவங்கினாள், அந்த நாட்களில் சீனுமாமா அவளை நூலகத்திற்கு அழைத்துப்போய் புத்தகம் எடுத்துவர உதவி செய்தார், அது தான் அம்மாவின் சகல மாற்றங்களுக்குமான முதற்படி, வள்ளல் ரத்னம் செட்டியார் நூலகத்திற்கு போய் வரத்துவங்கியது அவளுக்கு ஆசுவாசம் தருவதாக இருந்தது

காந்தியை காண வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் புகைந்து கொண்டிருந்த போது அப்பா இடமாற்றம் ஏற்பட்டு தூத்துக்குடி வந்து சேர்ந்தார், தனிமையும் பதவி உயர்வும் அவருக்குள் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன, மறுபடி அம்மா கர்ப்பிணி ஆனாள், இந்த முறை பெண் குழந்தை இறந்தே பிறந்த்து, அதை அப்பா ஏறிட்டு கூட பார்க்கவில்லை, அப்படியே புதைத்துவிடும்படியாக சொன்னார், அம்மா தனது குழந்தையை நினைத்து பல நாள் அழுதபடியே கிடந்தாள், அந்த நாட்களில் படுக்கை சுகம் தவிர வேறு எதற்கும் அப்பா அவளை நாடவில்லை,

மறுமுறை கர்ப்பிணியானதும் வீட்டில் பாட்டு கேட்பதற்கு கிராமபோன் பெட்டி ஒன்றினை வாங்கி வைத்தார், அம்மாவிற்கு புத்தகம் மேலிருந்த விருப்பம் இசையின் மீது கூடவில்லை, அவள் புத்தகம் படிக்க மட்டுமே ஆசைப்பட்டாள், அப்பா அதை அனுமதிக்கவேயில்லை, பருப்பு, கடுகு சீரகம், புளி வாங்கி வரும் காகிதங்களை தவிர வேறு காகிதங்கள் அந்த வீட்டில் கிடையாது, அப்பா உள்ளுர் நூலகத்திற்கு போய் வருவதற்குள் அவளை அனுமதிக்க வில்லை, அப்போது தான் பெரிய அண்ணன் பிறந்தான், அவன் கைக்குழந்தையாக இருந்த போது அண்டை வீட்டிற்கு வந்த ஜெபமேரியின் ஸ்நேகிதம் கிடைத்தது, அவளுக்காக ஜெபமேரி புத்தகங்ளை வாங்கிவருவாள், அவற்றை அவளது வீட்டில் வைத்தே படிக்க வேண்டிய கட்டாயம் இருந்த்து, ஒரு நாள் ஜெபமேரி தனது சகோதரன் நாக்பூரில் இருப்பதாகவும் அவனை பார்த்தால் காந்தியை பார்க்க வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துப்போய் காட்டுவான், அதில் ஒரு பிரச்சனையும் இருக்காது என்றாள்

அப்பா வேதாரண்யத்திற்கு அலுவலக கேம்பிற்காக கிளம்பிய போது அம்மா மனதில் வார்தாவிற்கு போய்விட வேண்டும் என்ற எண்ணம் முளைவிட துவங்கியிருக்க வேண்டும், அப்பா போன மறுநாள் தனது கைக்குழந்தையை ஜெபமேரியிடம் ஒப்படைத்துவிட்டு கோவிலுக்கு போய்வருவதாக கிளம்பினாள்

அதன்பிறகு எப்படி பஸ் பிடித்து மதுரை வந்து அங்கிருந்து ரயிலேறி சென்னை வந்து இன்னொரு ரயில் பிடித்து நாக்பூருக்கு போய் ஜெபமேரியின் சகோதரன் தாவீது வீட்டிற்கு போய் சேர்ந்தாள் என்பது அவளுக்கு நினைவில்லை, ஒரு விசை, கட்டுபடுத்தமுடியாத வேகம், அவளை இழுத்துக் கொண்டு போய்விட்டிருக்கிறது,

தாவீது அவளை இரவு தனது வீட்டில் தங்க சொல்லிய போது கூட தான் காந்தியை சந்திக்காமல் எங்கும் தங்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்திருக்கிறாள், இரவிலே அவர்கள் கிளம்பி வார்தாவிற்கு போய்விட்டார்கள், ஆனால் ஆசிரமத்தில் அனைவரும் ஒன்பது மணிக்கு உறங்க போய்விடுவார்கள் என்பதால் அது அமைதியாக இருந்த்து,

எளிய குடில்களுடன் இருந்த அந்த கிராமப்புற இடத்தை அம்மா திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள், இந்த இருட்டிற்குள் தான் காந்தி வசிக்கிறாரா, வார்தா ஆசிரமம் என்பது இவ்வளவு ஒதுக்குபுறமான ஒன்று தானா, அவர்கள் ஆசிரமவாசியாக இருந்த சியாம்லாலை சந்தித்தார்கள், அவர் விடிகாலையில் பிரார்த்தனையின் போது பாபுஜியை சந்திக்கலாம் என்று சொன்னார்

அன்று தான் பாபுஜி என்ற சொல்லை அவள் முதன்முறையாக கேள்விபடுகிறாள், அவளுக்கு அன்றிரவு தூக்கமில்லை, தனது அருகாமையில் உள்ள ஏதோவொரு குடிலில் காந்தி உறங்கிக் கொண்டிருக்கிறார், பொழுதுவிடிந்தவுடன் அவன் முன்னால் போய் கைகூப்பி வணங்கி தொழு வேண்டும் என்று தோணியது

விடிகாலை நான்கரை மணிக்கு ஆசிரமவாசிகள் எழுந்துவிடுவார்கள், நாலே முக்காலிற்கு காலை பிரார்த்தனை துவங்கிவிடும், அதற்குள் குளிர்ந்த தண்ணீரில் குளித்துவிட்டு நடுங்கிய உடலுடன் அம்மா பாபுஜியை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்தாள்

அந்த ஆசிரமத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இருந்தார்கள், அதில் ஒரு வெள்ளைகாரப்பெண் தெரிந்தார், அவள் எப்படி காந்தியோடு இணைந்து வேலை செய்கிறாள் என்று அம்மாவிற்கு வியப்பாக இருந்த்து, அவளை போலவே காந்தியை பார்ப்பதற்காக இரண்டு தொழுநோயாளிகள் நின்றிருந்தார்கள், அவர்களை யாரும் வெறுப்புடன் விலக்கவில்லை, அன்பாகவே நடத்தினார்கள், பர்ச்சூரி குடிலில் இன்னமும் வைத்திய சிகிட்சைகள் துவக்கபடவில்லை, மனோகர்ஜி திவான் அங்கே இலவச சிகிட்சைகள் செய்து கொண்டிருந்தார்

மகாதேவ் குடில் என்றொரு சிறிய குடில் காந்தியின் குடிலுக்கு அருகில் இருந்த்து, அதில் தான் மகாதேவ் தேசாய் தங்கியிருந்தார், அவர் காந்தியின் உதவியாளர், தீவிர பற்றாளர்

இன்னமும் முழுமையாக விடியாத அந்த இளங்காலையில் பாபுஜி பிரார்த்தனைக்காக எழுந்து வந்திருந்தார், முதுமையின் அழகுடன் கூடிய அவர் முகத்தில் உறக்கத்தின் சுவடேயில்லை, அதே மாறாத புன்னகை, குழந்தையின் துறுதுறுப்பு, அவருடன் ரஹீம் என்ற சேவாகிரகவாசி உடன் வந்து கொண்டிருந்தார், காந்தி தனது ஆசிரமவாசிகளை அக்கறையுடன் விசாரித்தபடியே நடந்து வந்த போது தாவீது, அம்மாவை அறிமுகப்படுத்தி உங்க்ளை பார்ப்பதற்காக வீட்டை விட்டு ஒடிவந்திருக்கிறாள் என்று ஹிந்தியில் சொன்னார்

பாபுஜி வியப்புடன் கேட்டார்

உனக்கு திருமணம் ஆகிவிட்டதா

அம்மா பதில் பேசாமல் நின்று கொண்டிருந்தாள், தாவீது சொன்னார்

திருமணமாகி குழந்தையும் இருக்கிறது, அவளுக்கு உங்களை காண வேண்டும் என்ற ஆசை.

என்னிடம் என்ன இருக்கிறது நான் ஒரு சேவகன், பணியாளன், என்றபடியே அம்மாவை அருகில் அழைத்து ஆறுதலாக தலையை தொட்டிருக்கிறார்

அம்மாவிற்கு அந்த ஸ்பரிசம் அவளது மனவேதனையை உடைத்துக் கொண்டு கண்ணீரை பெருகச்செய்தது, அந்த கண்ணீரின் வெதுமையை காந்தி புரிந்திருக்க கூடும், அவர் மெதுவான குரலில் சொன்னார்

உன்னை போல ஆயிரமாயிரம் இந்திய பெண்கள் சொல்லமுடியாத வேதனைகளில் அழுது கொண்டிருக்கிறார்கள், அம்மா உங்களை போன்றவர்களுக்கு அந்த கடவுளால் மட்டுமே ஆறுதல் தர முடியும், ஒன்று மட்டும் சொல்வேன், எனது மனஉறுதியும், போராட்ட குணமும் பெண்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது, உன்னை என் மகளை போலவே நினைக்கிறேன், இது நம் அனைவருக்குமான வீடு, உன் விருப்பமான நாள் வரை நீ இங்கே இருக்கலாம், ஆனால் சொகுசாக இங்கே வாழமுடியாது, வேலை செய்ய வேண்டும், சமூக சேவை செய்ய வேண்டும், நோயாளிகளுக்கு மருந்திட வேண்டும், உன்னால் முடியுமா

பாபுஜியின் ஒரு சொல்கூட அம்மாவிற்கு புரியவில்லை, ஆனால் அவள் அத்தனைக்கும் சம்மதம் தெரிவித்து தலை அசைத்தாள், பாபுஜி சிரித்தபடியே வா மகளை பிரார்த்தனையுடன் நாளை துவங்குவோம் என்று அழைத்துக் கொண்டு போனார்

அப்படிதான் அம்மா வார்தா ஆசிரமத்திற்குள் நுழைந்தாள், அம்மா எங்கே போனாள் என்று அப்பா தேடவேயில்லை, அவ்வளவு கோபம், ஒடுகாலி நாய் என்று திட்டியபடியே அவர் குழந்தையை வளர்ப்பதற்காக தனது சகோதரி வீட்டில் ஒப்படைத்துவிட்டு அம்மாவை மறந்தே போனார்,

இரண்டரை மாதகாலம் அம்மா காந்தி ஆசிரமத்தில் வாழ்ந்திருக்கிறாள், காந்தியின் அருகாமை அவளுக்கு நிறைய கற்றுதந்திருக்கிறது, அவளது செயல்களில் பேச்சில், பார்வையில் காந்தியின் மென்மை கலந்துவிட்டிருக்கிறது, அம்மா தொழுநோயாளிகளுக்கு சிகிட்சை தரும் செவிலியாக வேலை செய்திருக்கிறாள், மீராபென் அம்மாவிற்கு ஆங்கிலம் கற்றுதந்திருக்கிறாள், ஒருநாள் அம்மாவும் மீரா பென்னும் கோல்வாடா என்ற ஊரில் உள்ள தேவாலயத்திற்கு போன போது மீரா பென் அங்கிருந்த பியானோவில் பீதோவனின் உன்னத சங்கீதம் ஒன்றினை வாசித்து கேட்கையில் அம்மா அழுதிருக்கிறாள், மீரா பென் அம்மாவின் கைகளை பற்றிக் கொண்டு பீதோவன் இசையின் கடவுள், காந்தி சேவையின் கடவுள் என்று சொல்லியிருக்கிறாள், அம்மா அங்கிருந்த இரண்டரை மாதங்களில் ராட்டை நூற்கவும் ஆசிரம நடைமுறைக்கும் பழகிவிட்டிருந்தாள்

ஆசிரமத்தில் நாலரை மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும், நாலேமுக்காலுக்கு பிரார்த்தனை, ஐந்தே கால் மணி முதல் ஒரு மணி நேரம் படிப்பு, அதன் பிறகு ஆறரை முதல் ஏழரை வரை சமையற்பணிகள், பாத்திரங்களை துலக்குவது, எட்டு மணிக்குள் காலை உணவு, அதன்பிறகு தோட்டவேலை, மருத்துவ சேவை பனிரெண்டு மணிக்கு மதிய உணவு, சாப்பிட்ட பாத்திரங்களை தானே கழுவி வைக்க வேண்டும், அதன்பிறகு ஒய்வு, பின்பு இரண்டரை முதல் ராட்டை நூற்பது, மீண்டும் படிப்பு, கூட்டுவிவாதம், சில சமயங்களில் சொற்பொழிவு நடைபெறும், மாலை ஐந்தரை மணிக்குள் இரவு உணவு முடிந்துவிடும், சூரியன் அஸ்தமனம் ஆனதும் இரவு பிரார்த்தனை துவங்கிவிடும், பிறகு பரஸ்பரம் பேசிக் கொள்வது, சில வேளைகளில் இசை கேட்பது நடக்கும், ஒன்பது மணிக்கு உறங்கிவிடுவார்கள்

இந்த ஒழுங்கும் எளிமையும் அம்மாவின் மனதை முற்றிலும் மாற்றியிருந்தன, அம்மா தனக்கு கடந்த காலமென ஒன்று இருந்ததை மறந்து போயிருந்தாள், ஒரு நாள் அம்மா காந்தியின் அறைக்குள் தேசாய் கொடுத்து அனுப்பி கடிதம் ஒன்றினை கொடுக்க சென்ற போது பார்த்தாள், காந்தி இரண்டு கிளிஞ்சல்களை தனது மேஜையில் காகிதம் பறந்து போகாமல் வைத்திருந்தார்,

பாபுஜி இந்த கிளிஞ்சல்கள் அழகாக இருக்கின்றன என்று சொன்னாள்

அதற்கு அவர் இவை போர்பந்தரில் உள்ள கடற்கரையை சேர்ந்தவை, சிறுவயதில் இருந்தே இந்த கிளிஞ்சல்களை கூட வைத்திருக்கிறேன், இந்த கிளிஞ்சல்களை என்னோடு லண்டனுக்கு கொண்டு சென்றிருந்தேன், இவை தான் எனது துணை, இன்றுவரை இவை என் ஊரை, அதன் நினைவுகளை என்னோடு மௌனமாக பகிர்ந்து கெர்ண்டிருக்கின்றன, ஒவ்வொரு மனிதனும் தனது கடந்தகாலத்தினை நினைவுபடுத்தும் ஒரு பொருளை தன்னோடு எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறான், அதன் மகத்துவம் மற்றவர்களுக்கு புரியாது என்று சொல்லி சிரித்தார்

பின்பு ஒரு நாள் அப்பா, சீனுவாச மாமாவுடன் வார்தா ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்திருந்தார், அவர்களுடன் ஊருக்கு போக மறுத்த அம்மாவை பிடிவாதமாக அப்பாவும் சீனுவாச மாமாவும் அழைத்துக் கொண்டு போனார்கள், அம்மா ஆசிவாங்குவதற்காக பாபுஜியிட்ம் போனாள்

காந்தி அமைதியான குரலில் சொன்னார்

குடும்ப அமைப்பிற்குள் உள்ள வன்முறையை என்னால் மாற்றவே முடியவில்லை, தோற்றுப்போன மனிதனாகவே என்னை உணருகிறேன், பெண்களின் முழுமையான பங்களிப்பும் ஆதரவும் இல்லாமல் இந்தியாவில் எந்த பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதை உணர்கிறேன், ஒரு தாய் மகளிடம் சொல்வதை போலவே சொல்கிறேன், நெருக்கடிக்குள் வாழ்வது ஒரு சவால், அதை எதிர்கொண்டே ஆக வேண்டியிருக்கிறது, இந்த சேவகனிடம் உன்னை போன்ற தூய உள்ளம் கொண்ட பெண்ணுக்கு தருவதற்கு வேறு எந்த ஆலோசனையும் இல்லை, ஆனால் நீயும் மற்றவர்களும் எனது செயல்பாடுகளின் மீது உருவாக்கி வைத்துள்ள நம்பிக்கையில் நான் என்றும் உறுதியாக இருப்பேன், இந்த நம்பிக்கையை ஏற்படுத்தி தந்தவர்களில் நீயும் ஒருத்தி என்பதால் உனக்கு நன்றி கூறுகிறேன்,

அம்மா அழுதாள், முதல்நாள் பாபுஜியை பார்த்தபோது அழுததை விடவும் பலமாக அழுதாள், பாபுஜி அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தார், அம்மாவை அப்பா இழுத்துக் கொண்டு ஊருக்கு ரயிலேறிய இரவில் அப்பா ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஊருக்கு வந்தபிறகு காந்தியை தேடி ஒடியதற்காக, அம்மாவின் கையை முறித்தது அப்பா தந்த தண்டனையாக இருந்த்து

நடந்த எல்லாவற்றையும் சொல்லிவிட்டு முடிவில் அம்மா சொன்னாள்

லட்சுமா, ஏதோ நான் ஒருத்திக்கு இது அதியசமாக நடந்த சம்பவம் என்று நினைக்காதே, இதே அனுபவத்திற்கு உள்ளான பலநூறு பெண்கள் இருக்கிறார்கள், அவர்கள் காந்தியை மறக்கவேயில்லை, அவர்களுக்குள் காந்தி எப்போதும் ஒளிர்ந்து கொண்டேதானிருக்கிறார்,

வீடு திரும்பி வரும்வரை அம்மா காந்தியை நோக்கி போனதை விடவும் அப்பா அம்மாவை மிக மோசமாக நடத்தியது என்னை உறுத்திக் கொண்டேயிருந்த்து, இதற்கு நான் மன்னிப்பு கேட்கலாமா என்று நினைத்தேன், இறந்து போன ஒருவர் மீதான கசப்புணர்வை எப்படி போக்கிக் கொள்வது என்று எனக்கு தெரியவில்லை,

அம்மாவும் ராகேலும் அன்றிரவு ஒன்றாக டிவியில் ஏதோவொரு தமிழ்படம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள், அந்த அந்நியோன்யம் ஏனோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது,

அன்றிரவு படுக்கையில் ராகேலிடம் கேட்டேன்

உனக்கு காந்தியை பிடிக்குமா

இந்தியர்கள் காந்தியை காரணம் இல்லாமலே வெறுக்கிறீர்கள், அது ஒரு சிண்ட்ரோம், காந்தியை பலநேரங்களில் ஒரு டஸ்ட்பின் போல உபயோகிக்கிறீர்கள், அது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்றாள்

ஏன் அப்படி சொல்றே என்று கேட்டேன்

ராகேல் சொன்னாள்

நான் காந்தியை அதிகம் வாசித்ததில்லை, ஆனால் காந்தியின் புகைப்படத்தை பார்க்கும் போது ஏதோவொரு ஈடுபாடு உண்டாகிறது , களங்கமில்லாத காந்தியின் சிரிப்பை பாருங்கள், இப்படி சிரிக்க முடிந்த ஒரு மனிதன் நிச்சயம் உயர்வான வாழ்வையே வாழ்ந்திருப்பான் என்று உறுதியாக சொல்வேன், அவரைப்பற்றி நான் கேள்விப்பட்ட ஒன்றிரண்டு தகவல்களே அவரை என் விருப்பத்திற்குள்ளாக போதுமானதாக இருந்தது, ஒருவரைப்பற்றி நிறைய தெரிந்து கொள்ளும்போது அவரை உள்ளுற நமக்கு பிடிக்காமல் போய்விடுகிறது என்பது தான் உண்மை, காந்தி என்வரையில் ஒரு தூரத்து நட்சத்திரம் போல, அதன் ஒளி தான் என்னை வசீகரிக்கிறது, நெருங்கிச் சென்று அதை ஆராய்ச்சி செய்ய எனக்கு விருப்பமில்லை,

நான் ராகேலை கட்டிக் கொண்டேன்

பெண்கள் காந்தியை வேறுவிதத்தில் அணுகுகிறார்கள், ஆழமாக புரிந்து கொள்கிறார்கள் என்பது மறுபடியும் நிருபணம் ஆனது போலிருந்த்து

மறுநாள் அம்மாவிடம் நான் காந்தியின் சுயசரிதை படிக்க விரும்புகிறேன் நூலகத்தில் இருந்து எடுத்து வாருங்கள் என்று சொன்னேன்

அம்மா சிரித்தபடியே சொன்னாள்

வேகமாக காந்தியை நோக்கி வருகிறவர்கள், வேகமாக வெளியேறி போய்விடுவார்கள்

நானும் சிரித்தேன், அம்மா காந்தியின் சத்திய சோதனையை நூலகத்தில் இருந்து கொண்டுவரவில்லை, லண்டனுக்கு வந்து இருந்து திரும்பிய ஆறேழு மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போனில் பேசும் போது அம்மாவிடம் சொன்னேன்

வார்தாவிற்கு ஒரு முறை போய்வர வேண்டும் நீயும் எங்களுடன் வரவேண்டும் என்று தோன்றுகிறது

உதிர்ந்த சிறகு பறவையோடு மீண்டும் ஒட்டுவதில்லை என்ற கவிதை வரி நினைவிற்கு வருகிறது என்றாள்,

காந்தி இல்லாத ஆசிரமத்திற்கு வருவதற்கு தயக்கமாக இருக்கிறதா என்று மறுபடி கேட்டேன்

முறிந்த எனது கை ஒவ்வொரு நாளும் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டுதானிருக்கிறது, வார்தாவிற்கு போய் நினைவுகளை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றாள் அம்மா

அம்மா பேசி சம்மதிக்க வைக்க முடியாது என்பதால் அந்த திட்டத்தை கைவிட்டேன், ஆனால் அம்மா இறந்து போன பிறகு ராகேல் அதை மறுபடியும் நினைவூட்டினாள்

லட்ஸ், உன் அம்மாவிற்காக நாம் ஒருமுறை வார்தாவிற்கு போய்வருவோம், கடந்த காலத்தை நினைவுபடுத்த ஏதாவது ஒன்று தேவையாக தானே இருக்கிறது

அப்படித்தான் நானும் ராகேலும் வார்தாவிற்கு வந்து இறங்கினோம், இங்கே வந்து இறங்கிய நிமிசம் முதல் அவள் பரபரப்பாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தாள்,

இது தான் வார்தா ஆசிரமம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, காந்தி ஆசிரமத்தை ஏன் இப்படி கைவிடப்பவர்களுக்கான ஆசிரமம் போல வைத்திருக்கிறார்கள், இங்கே உற்சாகமான செயல்பாடுகள் எதையும் காணமுடியவில்லையே,

அங்கே தங்கியருப்பவர்கள், வந்து போகிறவர்கள் ஒருவரிடமும் காந்தியின் மீதான ஈர்ப்பு துளியுமில்லை, அது ஒரு புகலிடம் போலவே இருந்தது

மாலை வரை நானும் ராகேலும் வார்தாவில் இருந்தோம், ,இரவு புறப்படும் போது ராகேல் சொன்னாள்

உண்மையில் இந்தியர்கள் விசித்திரமானவர்கள், அவர்கள் எதை நேசிக்க விரும்புகிறார்களோ, அதற்கு எதிராகவே செயல்படுகிறார்கள், இந்தியர்களின் பிரச்சனை காந்தியை அவர்களால் இன்னமும் புரிந்து கொள்ளமுடியவில்லை என்பதே, அவர்களுக்கு இப்படி ஒரு அதிசயம் எப்படி சாத்தியமானது என்று வியப்பாக இருக்கிறது, உண்மையில் காந்தியின் செயல்பாடுகள், எண்ணங்கள் நமது பலவீனங்களை., குறைபாடுகளை, மனசாட்சியை கேள்விகேட்கிறதே என்று பலருக்கும் கோபமாக இருக்கிறது, இன்றைய இளைஞர்களுக்கு காந்தி ஒரு விளையாட்டு பொம்மை, அவர்கள் உதைத்து விளையாட விரும்பும் ஒரு கால்பந்து, அவர்களுக்கு புதிராக இருப்பது எவ்வளவு உதைத்தாலும் இந்த பந்து திரும்ப திரும்ப அதன் இயல்பிற்கு வந்துவிடுகிறதே என்பது தான்,

இளம் இந்தியன் ஒவ்வொருவனும் தன் மனதிற்குள் காந்தியை கொல்ல விரும்புகிறான், ஆனால் அது எளிதான ஒன்றில்லை, அந்த தோல்வி அவனை கசப்பிற்குள்ளாக்குகிறது, அவரை கடந்து செல்ல ஒருவழி தானிருக்கிறது, அவரை புனிதமாக்கிவிடுவது, அவரை அதிமனிதாக்கிவிடுவது, அதை வெற்றிகரமாகவே செய்திருக்கிருக்கிறீர்கள்,, காந்தி இன்று வெறும் பிம்பமாக, சிலையாக மட்டுமே இருக்கிறார், அவரது குரலை இந்த தலைமுறையினர் கேட்டதில்லை, ஒருமுறை அவரது குரலை கேட்டுபாருங்கள், எப்படி சொல்வது, தற்செயலாக ஒரு நாள் இணையத்தில் அவரது குரல்பதிவு ஒன்றினை கேட்டேன், என்னால் முழுமையாக கேட்கமுடியவில்லை, கண்ணீர் பெருக்கெடுத்துவிட்டது ஹி இஸ் இம்பாசிபிள், எப்படி சொல்வது என்று தெரியவில், ஹி இஸ் ப்யூர், ஹி டச் அவர் ஹார்ட்,

அந்த மனிதர் என்ன சொல்கிறார் என்பது முக்கியமில்லை அவர் எதைச் சொல்லும் போதும் அதில் வெளிப்படும் பரிவும் தன்னமல்லமற்ற தூய்மையான எண்ணமும் தான் அவரை பிடிக்க செய்கிறது, சிலவேளைகளில் அவர் எனது தந்தையை போல இருக்கிறார், சில வேளைகளில் அவர் நாளை பிறக்க போகிற எனது பிள்ளையை போல இருக்கிறார், இதற்கு மேல் என்னால் சொல்லமுடியவில்லை

என்று அமைதி அடைந்தாள், ஆனால் அவளிடம் ஆழமான பெருமூச்சு வெளிப்பட்டது,

அந்த நிமிசம் நான் ராகேலிடமிருந்து எனக்கான காந்தியை உருவாக்கி கொள்ள துவங்கினேன், காந்தியை உதைத்து விளையாட விரும்புகிறவர்களில் நானும் ஒருவனாகவே இருந்தேன், காந்தியை வெறுத்தேன் என்று சொல்ல முடியாது, ஆனால் காரணம் இல்லாமல் காந்தியை விலக்குகின்ற பல்லாயிரம் மனிதர்களில் ஒருவராக இருந்தேன், காந்தியை நெருங்கிச் செல்வதற்கு தான் ஈடுபாடு தேவை, வெறுப்பதற்கு எவ்வளவோ காரணங்கள் முன்னதாக உருவாக்கி வைக்கபட்டிருக்கின்றன,

இந்தியாவில் இவ்வளவு மோசமான வசைகள், அவதூறுகள், தூஷணைகளை சந்தித்த மனிதர் வேறு யாராவது இருக்க கூடுமா என்ன, அப்படியிருந்தும் காந்தியின் வசீகரம் குறையவேயில்லை, ஒருவேளை காந்தியை வெறுப்பது என்பது அவரை நேசிக்க செல்வதற்காக ஒரு பயிற்சி தானோ என்னவோ,

அந்தரங்கமாக ஒருவன் தனது மனதினுள் ஆழ்ந்து போனால் அவன் காந்தியின் நெருக்கத்தை உணரவே செய்வான், அவனால் காந்தியை வெறுக்கமுடியாது, அப்படி வெறுப்பதாக நடிப்பதற்கு தனக்குள்ளாக மன்னிப்பு கேட்டுக் கொள்வான், ஆனால் வெளியுலகிற்கு காந்தியை வெறுப்பவர்கள் தேவைப்படுகிறார்கள், அது காந்தியின் காலத்தில் இருந்தே தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது,

காந்தி ஒரு தூய்மையான காற்று, அது எப்போது உக்கிரம் கொள்ளும், எப்போது தணிவு கொள்ளும் என்று தெரியாது, ஆனால் அதன் வேகத்தில் தூசிகள், குப்பைகள் அடித்து கொண்டு போகப்படும் என்பது உண்மை தானே,

ஏதேதோ யோசனைகளுடன் நான் வாங்கியிருந்த சத்தியசோதனை நூலை பயணத்தில் வாசிக்க துவங்கியிருந்தேன், அதன் பிறகு இரண்டுவாரங்கள், மதுரை காந்தி ம்யூசியம், போர்பந்தர், சபர்மதி, டெல்லி என்று சுற்றிவிட்டு மீண்டும் லண்டன் திரும்பியிருந்தேன்

திடீரென காந்திய நூல்களாக எனது வீட்டில் நிரம்பத் துவங்கின, காந்தியைப்பற்றி பலரிடம் நான் பேசவும் விவாதிக்கவும் துவங்கினேன், ஒருநாள் ராகேல் என்னிடம் சொன்னாள்

லட்ஸ் நீ காந்தியை வழிபட ஆரம்பித்திருக்கிறாய், வழிபடுதல் பரிசோதனைக்கான முறையில்லை, அவரை புரிந்து கொள்ளவும் அது போல வாழவும் முயற்சி செய், உன் அம்மாவை போல,

காந்தி தனது புத்தகத்திற்கு The Story of My Experiments with Truth என்று பெயரிட்டிருக்கிறார், Experiment என்பது வெறும் சொல் கிடையாது, அது ஒரு, செயல்பாடு, அறிவியல்பூர்வமான வேலை, காந்தி என்ற மனிதனுக்குள் ஒரு விஞ்ஞானியிருக்கிறார், அவர் தொடர்ந்து மனிதனை ஆராய்ந்து கொண்டேயிருக்கிறார், இந்தியர்கள் பொதுவில் உடலை மர்மபடுத்தவே விரும்புகிறார்கள், , அப்படி நடந்து கொள்ளாத முதல் இந்தியனாக காந்தியை மட்டுமே கருதுகிறேன்,

காந்தி கைத்தடியை ஊன்றி நடப்பதில்லை, கையில் அதை துணையாக தான் வைத்திருக்கிறார், அவருக்கு கைத்தடி என்பது வேகத்தை அதிகப்படுத்தும் ஒரு கருவி

லட்ஸ் இருப்பை விட இன்மை தான் அதிகம் நினைவுகளை தூண்டிவிடுகிறது, காந்தி விஷயத்தில் அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லி சிரித்தாள்

அந்த சிரிப்பின் ஊடாக அம்மாவின் புன்னகையும் சேர்ந்து வெளிப்படுவதாகவே எனக்குத் தோன்றியது ,அவளை இறுக்கி கட்டிக் கொண்டேன்

உயிர்மை இதழில் வெளியானது


எஸ்.ராமகிருஷ்ணன்

எழுதியவர் : (26-Jun-18, 5:00 am)
பார்வை : 123

மேலே