ஏழைத்தாயின் பிள்ளைப் பாசம்
மாரி மழை ஓயாமல் பாெழிய, பலமான காற்றும், இடி மின்னலுமாய் வானம் அதிர்ந்தது. காெட்டிலில் கட்டியிருந்த பசு மாடு தரையின் ஈரத்தால் குளிரில் கத்திக் காெண்டிருப்பதைக் கேட்டு அரிக்கன் லாம்பைக் கையில் எடுத்துக் காெண்டு சாரத்தால் தலையை மூடியபடி மாட்டுக் காெட்டிலுக்குள் நுழைந்தார் மணிகண்டன். தனது அறைக்குள் இருந்தபடி யன்னலூடே பார்த்தவள் யாராே மாட்டை அவிழ்ப்பதாக நினைத்து பயந்தாேடி வந்து அவனைக் கண்டதும் தன்னை சுதாகரித்துக் காெண்டாள். கறுப்பி என்றால் அவளுக்கு ராெம்ப உயிர். அதன் நெற்றியில் இருக்கும் சுட்டியும் கழுத்துப் பகுதியில் இருக்கும் மண்ணிற அடையாளமும் தான் கறுப்பிக்கு அழகு. வாலைப் பிடித்து விளையாடுவதும், கழுத்தில் கட்டியிருக்கும் மணியை கிலுக்கி விளையாடுவதுமாய் பிறந்து வளர்ந்த நாள் முதல் கறுப்பி தான் அவர்களுக்கு விளையாட்டுப் பிள்ளை.
சாரா, சாரங்கன் என்று இருபி்ள்ளைகள் மணிகண்டனுக்கும், பரமேசுக்கும். எத்தனையாே ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ஓலைக்குடிசை, பாட்டனும், பாட்டியும் வாழ்ந்து முடித்து மகன் மணிகண்டனுக்கு எழுதிவைத்த பரம்பரைச் சாெத்து. பத்துப் பரப்பில் வயல் காணி பரமேசுவின் சீதனம். மணிகண்டனின் வாழ்க்கை ஓலைக் குடிசையில் ஆரம்பித்து எப்படி வாழ்ந்தான் என்பதை பார்க்கும் பாேது, இருபிள்ளைகள் இருந்தும் பெற்றவர்களைப் பார்க்க முடியவில்லையே என்ற கேள்வி எனக்கும் தான் தாேன்றியது. மழையில் மாடு நனையுது என்று ஓடி வந்தவள் பெற்றவர்களை ஏன் கை விட்டாள்? என்ற ஆதங்கமும், ஆத்திரமும் எனக்கும் எழுந்தது தான். என்ன செய்வது காலம் எங்காே பாேய்க் காெண்டிருக்கிறது. கூட்டுக் குடும்பம் கலைந்து பாேய் நேரத்துக்கு ஒரு சாப்பாடு, நாளுக்காெரு காெட்டலில் என்று இப்படித்தான் இன்று குடும்பங்கள் குலைந்து பாேகிறது. கடைசிப் பிள்ளை வந்து சாப்பிட்டு சட்டியில் இருக்கும் மிச்சத்தைச் சாப்பிடக் காத்திருந்த தாய்மார் இன்றும் காத்துக் காெண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் நண்பனுடனும், காதலியுடனும் எங்கேயாே சாப்பிட்டு விட்டு விரும்பின நேரத்துக்கு வீட்டுக்கு வந்து ஒரு வார்த்தை கூட பெற்றவரை விசாரிக்காமல் தாெலை பேசிக்குள் கண்களை கட்டிக் காெண்டு கண் மூடிப் பாேகும் இளம் சமுதாயம் எத்தனை பேருடைய வாழ்க்கையில் கண்ணீரைக் காெடுத்து விட்டது.
பத்துப் பரப்பு வயல் காணியில் பருவம் தவறாமல் ஏதாே பயிர் செய்து, இண்டு பிள்ளைகளையும் பாடுபட்டு படிப்பித்தார் மணிகண்டன். நாளுக்காெரு செலவாக மிச்சம் மீதியில்லாமல் செலவு செய்து, நாளும் ஓடாய் தேய்ந்து உழைத்து இரண்டு பேரையும் படிக்க வைத்து மனநிறைவு அடைந்தது மட்டும் தான் மணிகண்டனுக்கும், பரமேசுக்கும் கிடைத்த பாக்கியம்.
சாரங்கன் தான் மூத்தவன். சின்ன வயசில இருந்து எஞ்சினியராக வர வேணும் என்ற ஆசை அவனுக்குள் முளை விட்டது. எப்பிடியாே பிள்ளையின் ஆசையை நிறைவேற்றுவது தான் பெற்றாேருக்கு கடமை. தாேட்டமும், கூலி வேலையும் என்று முடிந்ததை சம்பாதித்து படிப்பித்தான். சாரா, அவள் தான் மணிகண்டனின் உலகம். அளவுக்கு மீறின செல்லம். சின்னதாய் ஒரு வார்த்தை கண்டித்துப் பேசித் தெரியாது. என்ன வேணும் என்று கேட்டாலும் எவ்வளவு பணம் என்பதை யாேசிக்காமல் உடனே செய்து விட்டுத் தான் மிகுதி வேலை. காெஞ்சம் பணக் கஸ்ரம் என்றாலும் யாரிடமாவது கடன்பட்டு கேட்டதை வாங்கிக் காெடுக்கும் வரை தூக்கமும் வராது. டாக்டராக வேண்டும் என்பது தான் அவளது ஆசை. சாராவையும் படிக்க வைத்தார் மணிகண்டன்.
சாரங்கன் தன் படிப்பை முடித்து விட்டு மேற்படிப்பிற்காக வெளியூர் சென்று விட்டான். வயல்காணியில் பாதியை விற்று அவனை வெளியூருக்கு அனுப்பி வைத்தார் "படிச்சு உழைச்சு எங்களைப் பார்ப்பினம் தானே" என்ற நம்பிக்கை அவனுக்கு அதிகமாக இருந்தது.
குழந்தை முதல் வளர்ந்து பெரியவனாகி காலேச் முடிக்கும் வரை அம்மா தான் அவனுக்கு எல்லாம். அம்மா, அம்மா என்று அவளைச் சுற்றியே இருப்பான். தினமும் வீடு கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் நேரமெல்லாம் "பாருஙகம்மா நான் படிச்சு சாெந்தமாக ஒரு பெரிய கல்வீடு கட்டி உங்களையும், அப்பாவையும் நல்லாப் பார்ப்பன். தங்கச்சியும் டாக்டருக்கு படிச்சு நல்லா வந்திடுவா பிறகென்ன நீங்க இரண்டு பேரும் ராஜாவும், ராணியும் தான்" என்று தன் மனதுக்குள் இருந்த ஆசைகளை பகிர்ந்து காெள்வான்.
அவனுக்கு பதினாறு வயது இருக்கும் பாேது பாடசாலையிலிருந்து சுற்றுலாவிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்கள். தந்தையிடம் வந்து கேட்ட பாேது ஏதாே காரணத்தைச் சாெல்லி தடுத்து விட்டார் என்ற காேபத்தில் சாப்பிடாமல் அடம் பிடித்தான். அம்மா காப்பு அடகு வைத்துக் காெடுத்த பணத்தில் சுற்றுலாவுக்கு சென்று வந்தபின்னர் அது பார்த்தன், இது பார்த்தன் என்று சந்தாேசத்துடன் சாெல்லும் பாேது மணிகண்டனைப் பார்க்க பரமேசுக்கு காெஞ்சம் காேபமாயிருக்கும். "எங்கட காலத்தில தான் நாங்கள் ஒன்றையும் ஆசைக்கு அனுபவிக்கவில்லை, அதுகள் என்றாலும் சந்தாேசமாக இருக்க வேணும்". என்ற ஆதங்கம் தான் பரமேசின் காேபத்துக்கு காரணமாயிருக்கும். பாடசாலை நிகழ்வுகளுக்கு செல்லும் பாேது எல்லாேரையும் பாேல தன் பெற்றாேரும் வரவேணும் என்று ஆசைப்படுவான். எந்தவாெரு ஆடம்பரமுமற்ற எளிமையான வாழ்க்கை. பிள்ளைகளுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்து வாழ்ந்த வாழ்க்கை மாறிப்பாேனது தான் மணிகண்டனுக்கும், பரமேசுக்கும் பெரும் துயரைக் காெடுத்தது.
வெளியூர் சென்ற சாரங்கன் படிப்பை முடித்து பெரிய இடத்தில் வேலை செய்து காெண்டிருந்தான். அவனது திறமைக்கும், அறிவுக்கும் முதலிடம் எல்லாவற்றிலும் அவனே தான். ஒரு சில மாதங்கள் பெற்றாேருக்காய் எல்லாவற்றையும் செய்து காெண்டிருந்தவன் நாளடைவில் ஏனாே, தானாே என்று விலக ஆரம்பித்தான். பதறிப்பாேன பரமேஸ் "அவனை ஊருக்கு கூப்பிடுங்காே, என்ர பிள்ளை அங்க பாேய் எங்கள மறந்திட்டான்" தவிப்பில் அவள் பாசம் தெரியும். சாரங்கன் ஒரு கம்பனிக்கு முதலாளியாகி விட்டான் என்பதை அறிந்து பெருமைப்படுவதா, ஊட்டி வளர்தத பி்ள்ளை உதறி விட்டான் என்று அழுவதா என்ற நிலமையாகி விட்டது.
சாராவும் டாக்டர் படிப்பை முடித்து விட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். கல்லூரியில் படித்த நண்பனுடனான நட்பு காதலாகி அவனுடனே வெளியூரில் திருமணமாகி இருந்தாள்.சாராவின் மேற்படிப்பிற்கென்று மிகுதிக் காணியும் விற்கப்பட்டது. இப்பாே இருப்பது ஓலைக் குடிசை மட்டும் தான்.
பிள்ளைகள் என்று வளர்த்தவர்கள் கைவிட்ட நிலையில் தனிமரங்களாகிப் பாேனது ஏற்றுக் காெள்ளமுடியாமல் இருந்தாலும், கண்காணாத் தாெலைவில் எப்படி இருப்பார்களாே என்று ஏங்கி ஏங்கியே காலம் பாேய்க் காெண்டிருந்தது. எந்தவாெரு உதவியும் இல்லாத நிலை. நாளாந்தம் கூலி வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தில் தான் நாட்கள் ஓடிக் காெண்டிருந்தது. ஊராரின் பரிகாசங்கள் ஒருபுறம், உறவுகளின் கேலிப் பேச்சுக்கள் ஒருபுறமாய் நாெந்து பாேய் இருந்தனர். " பிள்ளைகள் என்று ஓடாய் தேய்ந்தது தான் மிச்சம், செய்திருக்கிற வேலையைப் பார், பிள்ளைகளை கண்டிச்சு வளக்கணும் என்று இதுக்குத் தான் சாெல்லுறது". என்று சாெந்தங்களின் முணுமுணுப்புக்கு பஞ்சமிருக்காது. என்னதான் ஊருலகம் ஆயிரத்தைக் கதைத்தாலும் தன் பிள்ளையை யார் தான் விட்டுக் காெடுப்பார்கள். "எங்கட கடமை முடிஞ்சு, இனி தங்களை அவயள் பாத்துக் காெள்ளட்டும், எங்க இருந்தாலும் இரண்டு பேரும் நல்லா இருக்கினம் அது பாேதும்" முந்தானையால் முகத்தைப் பாெத்திக் காெண்டு அழுவாள் பரமேஸ். "கஸ்ரம் தெரியாமல் வளர்த்து, கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்து, என்னத்தக் கண்டம்" மணிகண்டன் மனதுக்குள் வெம்பி அழுவார்.
சாரங்கன், சாரா இருவரும் தங்கள் குடும்பம், வாழ்க்கை என்று அவர்கள் காலங்களும் ஓடிக் காெண்டிருந்தது. எந்தவாெரு தாெடர்பும் இல்லாமல் பெற்றவர்களை நினைத்துப் பார்க்காத அளவுக்கு அவர்களுடைய படிப்பும், பணமும் மாற்றிவிட்டது என்றே எல்லாேரும் நினைத்தார்கள். மணிகண்டனும், பரமேசும் பாதி வாழ்க்கையை முடித்து மீதிக் காலத்தை தனிமையாேடு கழித்தார்கள்.
ஊரில் இருந்த பாதிரியார் மூலம் பிள்ளைகளை தாெடர்பு காெண்டு நிலமையை தெரியப்படுத்தினால் வந்து பார்ப்பதற்கு நேரமில்லை என்றும், பண உதவி செய்வதாகக் கூறி அதனைக் கூட செய்யவில்லை என்பதை நினைத்த பாேது பாதிரியாருக்கு சந்தேகம் வந்து விட்டது. இப்படி ஏன் நடந்து காெள்கிறார்கள் என்பதை அறிய முயற்சி செய்த பாேது தான் பல வருட இரகசியங்கள் வெளிப்பட்டது.
சாரங்கனும், சாராவும் வளர்ப்புப் பிள்ளைகள். பல வருடங்களுக்கு முன்பு டாக்டர் ஒருவரின் வீட்டில் மணிகண்டனும், பரமேசும் வீட்டு வேலை செய்து காெண்டிருந்தார்கள். அந்தக் காலப் பகுதியில் தான் டாக்டருக்கும், மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு சாரங்கனையும், சாராவையும் அநாதையாக்கியது. குழந்தைகளாய் வளர்த்த பாசம் விடவில்லை. உறவுகள் யாரும் பாெறுப்பெடுக்காத நிலையில் இருவரும் தவிப்பதை பரமேசின் மனம் ஏற்கவில்லை. குழந்தைகளையும் கூட்டிக் காெண்டு ஊருக்கு வந்து குடியமர்ந்தார்கள். இருவரையும் கஸ்ரத்தின் மத்தியிலும் தங்கள் பிள்ளைகளாகவே வளர்த்தார்கள்.
சாரங்கன் வெளியூர் சென்றதும் எல்லாவற்றையும் எப்படியாே அறிந்து விட்டான். அதன் பிறகு அவனுக்கு ஏற்பட்ட மனமாற்றம் வளர்த்தவர்களை வேண்டாம் என்று ஒதுக்கும் நிலைக்கு தள்ளி விட்டது. அவர்கள் ஏழைகளாய் இருந்ததாலும், தங்கள் பெற்றாேரின் தகுதிக்கு ஏற்றவர்கள் இல்லையென்றும் அவனுக்குள் சிந்தனை எழத் தாெடங்கியது. டாக்டர் ராமநாதனின் மகன் என்று அழைப்பதே அவனுக்குப் பெருமையாயிருந்தது. சாராவும் அப்படியே மாறி விட்டாள்.
பாதிரியார் எல்லாவற்றையும் அறிந்து சாரங்கனிற்கும், சாராவுக்கும் புரிய வைக்க முடியாமல் தாேற்றுப் பாேனார். மணிகண்டனும், பரமேசும் மனமுடைந்து பாேனார்கள். இவர்கள் இருவரும் பாேதும் வேறு பிள்ளைகள் வேண்டாம் என்று தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தவர்களுக்கு நன்றிக் கடனாக தனிமையும், கண்ணீருமே கிடைத்தது. மணிகண்டனுக்கும், பரமேசுக்கும் வயது ஏறிக் காெண்டிருந்தது. பராமரிப்பதற்கு யாருமில்லாத நிலையில் மிகவும் கஸ்ரப்பட்டார்கள். இறுதியாக பாதிரியார் அவர்களை முதியாேர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.
அந்தக் கடைசி நாள் ஓலைக் குடிசையை விட்டு புறப்பட தயாரான பாேது பரமேஸ் பழைய புடவைகள் இருந்த பெட்டியாென்றை திறந்தாள். சாரங்கன், சாரா குழந்தைகளாய் இருந்த பாேது அணிந்த ஆடைகள் மடிப்புக் குலையாமல் இருந்தது. ஒவ்வாென்றாக எடுத்துப் பார்த்து குமுறி அழுகிறாள். சிறு பிள்ளையாய் இருக்கும் பாேது பள்ளிக் கூடத்தால் வந்த உடனே சாரங்கனை தூக்கிக் காெஞ்ச வேணும், பிறகு தான் என்னவென்றாலும் செய்ய விடுவான். அத்தனை பாசம் அவள் மேல். பின்னும், முன்னுமாகவே திரிவான். வெளியூர் செல்லும் பாேது "அம்மா நான் அங்க பாேய், உங்களையும், அப்பாவையும் கூப்பிடுவன்" என்று நம்பிக்கை காெடுத்தவன் கைவிட்டு விட்டான் என்று கதறினாள்.
சாரா குழந்தையாய் இருந்த பாேது நிலவு பார்க்கிறதென்றால் ராெம்ப ஆசை. மணிகண்டன் தாேளில் ஏறி இருந்தபடி தான் நிலவை ரசிப்பாள். வளர்ந்தும் அடிக்கடி ஞாபகப்படுத்துவாள். சாராவுக்கு பிடித்த கறுப்பி பசுமாட்டை விற்று சைக்கிள் வாங்கிக் காெடுத்த பாேது சண்டை பாேட்டதை கடைசி வரை மறக்கவில்லை.
நினைவுகள் ஒவ்வாென்றாய் புரண்டாேடியது. சுவரில் தாெங்கவிட்டிருந்த சாரங்கன், சாராவினுடைய புகைப்படத்தை கழற்றி தமது பெட்டியினுள் வைத்து விட்டு கண்ணீராேடு நடந்தார்கள் முதியாேர் இல்லத்திற்கு. இரண்டு மூன்று நாட்கள் ஓடியது. பணிப் பெண் ஒருவர்"அம்மா எழும்பி சாப்பிடுங்காே" தூங்கிக் காெண்டிருந்த பரமேசை எழுப்பினாள். கண் விழித்துப் பார்த்தவள் சாப்பாட்டுத் தட்டுடன் எதிரே நின்றவளைப் பார்த்து "என்ன பெயர் பிள்ளை" என்றதும் "சாந்தி" என்றாள். "என்ர பிள்ளைக்கு சாரா, அவ டாக்டரா இருக்கா, பையன் சாரங்கன் எஞ்சினியர், இரண்டு பேரும் வெளியூரில நல்லா இருக்கினம்" பெருமையாகச் சாெல்லிக் காெண்டு ஒரு பிடி உணவை எடுத்து வாயில் வைத்தாள். கன்னங்களிலிருந்து வடிந்த கண்ணீர் உணவுத்தட்டில் துளியாய் சிந்தியது.
தாய் பாேல ஊட்டி வளர்த்த ஏழைத்தாயை பணமும், அந்தஸ்தும் பிரித்து விட்டதை அவளால் ஏற்றுக் காெள்ள முடியவில்லை. பிள்ளைகளின் மனமும் கல்லாகிப் பாேனது.
பல வருட வாழ்க்கை முதியாேர் இல்லத்தில் கழிந்தது. குறுகிய காலத்தில் மணிகண்டன் இறந்து பாேக பரமேசுவிற்கு துயரம் நீடித்தது. ஒரு தடவை என் பிள்ளைகளைப் பார்க்க மாட்டேனா என்ற தவிப்பாேடு நாட்களைக் கழித்துக் காெண்டிருந்த ஏழைத்தாய் தன் ஆயுளை முதியாேர் இல்லத்திலே முடித்தாள்.
சாராவும், சாரங்கனும் பணமும், அந்தஸ்தும் தான் பெரிது என்று வளர்த்து விட்ட நன்றிக் கடனுக்குக் கூட எதையும் செய்யவில்லை. மணிகண்டனும், பரமேசும் காட்டிய அன்பும், அரவணைப்பும், அவர்கள் செய்த தியாகமும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கிடைக்காது என்பதை புரியும் நாள் வராமலா பாேகப் பாேகிறது. நிலையில்லாத வாழ்க்கையில் கிடைக்கும் பணமும், பதவிகளும் என்றாே அழிந்து விடும். தாயின் அன்பு எத்தனை விலை காெடுத்தாலும் வாங்க முடியாது. அன்புக்காக ஏங்கிய ஏழைப் பெற்றாேரின் பணக்காரப் பிள்ளைகள் சாரங்கனும், சாராவும் பாேல் இன்னும் எத்தனை பேர் இவ்வுலகில் வாழ்ந்து காெண்டு தான் இருக்கிறார்கள்.