ஒழுங்கை
பாதைகள் பலவிதம். கிராமப்புரங்களில் ஒற்றையடிப் பாதை, ஒழுங்கை (Lane) ஆகியவை பிரசித்தம். நகரப்புரங்ககளில் வீதிகள் (Roads), பெரும் பாதை (Highway). விரைவுப் பாதை (Express Highway) . பணம் கொடுத்து பயணிக்கும் பாதை(Toll Road), என்று நகரத்தின் பொருளாதரத்துக்கு ஏற்ப பல விதப் பாதைகள் உண்டு. ஒவொன்றும் ஒரு கதை சொல்லும். இதில் ஒற்றயடிப் பாதை மனிதனதும், மிருகங்களினதும் அடிச்சுவடுகளினால் வயல் வெளிகளில் உருவாகியவை.
யாழ்ப்பாணத்தில் பல கிராமங்களில் ஒழுங்கைகளுக்கு பஞ்சமில்லை . ஈழத்து போர் காலத்தில் இந்திய அமைதிப் படைக்கு எதிராக விரைவாக எதிரிக்கு தெரியமால் செய்திகளக் கொண்டு செல்ல புலிகளுக்கு இந்த ஒழுங்கைகள் பெரிதும் உதவின .
வல்வெட்டித்துறையில் இந்த ஒழுங்கையில் தமிழ் நாட்டில் உள்ள வேதாரண்யத்தில் இருந்து விசைப் படகுகளில் வந்த பொருட்களை வெகு விரைவாக சில நிமிடங்களில் பேர்ஜோ 304 காரில் ஏற்றி செல்ல இந்த ஒழுங்கைகள் பெரிதும் ஒரு காலத்தில் வியாபார்]த்துக்கு வழிப் பாதையாக இருந்தன.
நல்லூர் அரசடி சந்தியில் இருந்து திருநெல்வேலி சிவன் கோவிலடிக்கு சுமார் அரை மைல் தூரத்துக்கு வளைந்து போகும் ஒழுங்கையில் நடந்து செல்வது ஒரு தனி அனுபவம் . ஆறு தசாப்தங்களுக்கு முன் என் அனுபவத்தை வைத்து உருவாகிய சிறு கதை இது
***
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை வீதியில் இரு மைல்கள் போனால் நல்லூர் கந்தசுவாமி கோவிலை அடையலாம். கோவிலை அடையமுன் வரும் நான்கு தெருக்கள் கூடும் சந்தி அரசடிச் சந்தி. சங்கிலி அரசன் காலத்தில் அந்த சந்தியில் ஒரு அரசமரம் இருந்தது என்று அந்த மரத்தின் வரலாற்றினை அப்பகுதியில் வாழும் கிழவர்கள் பெருமையாக சொல்வார்கள் . நல்ல வேளை அப்போது சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. இருந்திருந்தால் புத்தர் சிலை அரச மரத்தின் கீழ் தோன்றி இருக்கும். அரச மரம் இருந்த இடத்தில் மாஹாகவி பாரதியாரின் சிலை குடி புகுந்து விட்டது.
ஒரு காலத்தில் மரத்தைச் சுற்றி உயர் சாதி சனங்கள் அமர்ந்து இருந்து வம்பு அளக்க சலவைக் கற்கள் வைக்கப்பட்டிருந்தன . அதில் இருந்து அரசியல் பேசுபவர்களுக்கு தேவை பட்டபோது வாயுக்கு ருசியாக உளுந்து வடையும், சுடச் சுட ஆட்டு பால் கோப்பியும், புகைக்க வை சி சி கு சுருட்டும், த்ரீ ரோஸ் சிகரெட்டும். இரண்டு யானைகள் படம் போட்ட நெருப்பெட்டியும், சந்திக்கடை சண்முகம் மரியாதையோடு தானே கொண்டு வந்து கொடுப்பார். சலவை கல்லில் இருந்து பேசுபவர்களின் பூர்வீகம் பற்றி சண்முகத்துக்கு தெரியும். பல காலம் சந்தியில் கடை வைத்திருப்பவர் .
சலவைக் கல்லில் இருந்து வம்பு அளக்கும் கூட்டத்தின் தலைவர் யாழ்ப்பாணக் கச்சேரியில் பிரதம லிகிதராக இருந்த ஆறுமுகம். இவரின் அடைப்பெயர் முகத்தார் . சந்தியில் உள்ள இவரின் வீட்டை கொழும்பார் வீடு என்று ஊர் சனங்கள் சொல்லுவது வழக்கம் . காரணம் முகத்தார் கொழும்பு கச்சேரியில் பல வருடங்கள் வேலை செய்து இறுதி காலத்தில் யாழ்பாணக் கச்சேரிக்கு மாறி வந்தவர் . அருகில் உள்ள வீர மகாகாளி அம்மன் கோவில் தேருக்கும், தீர்த்தத்துக்கும் தண்ணீர் பந்தல் நடத்துவது அவரின் பொறுப்பு . அரசடி சந்தியில் உள்ள மதில் உள்ள வீடு முகத்தாரின் மாமனர் காராளசிங்கம் கட்டியது . முகத்தாரின் சீதன வீடு அது. யாழ்ப்பாண இராச்சியத்துக்கு மன்னாக இருந்த செகராஜசிங்கம் வழி வந்தவன் நான் என்று காராளசிங்கம் அடிக்கடி பெருமையாக சொல்லுவார் . அரசடி சந்தி வீட்டுக்கு மேற்குப் பக்கத்தில் ஆறடி ஒழுங்கை. மறு பக்கத்தில் செல்லத்துரையரின் வீடு.
அந்த அரசடி சந்தியில் இன்னொரு விசேசம் உண்டு. நல்லூர் தேர் தீர்த்த திருவிழா நாட்களில் காவடிகள் அந்த சந்தியில் நின்று தங்கள் ஆட்டத் திறமையை அரசடிக்கு அருகில் உள்ள வைரவருக்கு காட்டிச் செல்வது ஒரு வழக்கமாக இருந்து வந்தது.
முடமாவடியில் இருக்கும் என் வைத்தியர் விசுவலிங்கம் வீடு எங்கள் வீட்டிலிருந்து ஒழுங்கை வழியே போனால் ஒருமைல். பெரிய அகண்ட பாதியூடாக போனால் இரு மைல்கள் போகவேண்டும் .
குறுக்கு வழியே ஒழுங்கையால் போவதை நான் போக விரும்பியதுக்கு சில காரணங்கள் உண்டு அந்த ஒழுங்கயூடாக என் பயணம் வைத்தியர் விசுவலிங்கம் வீட்டுக்கு பெதி குளுசை வாங்கி வர ஆரம்பிக்கும். எனக்குத் தனியாக யாழ்ப்பாணத்து ஒழுங்கைளினூடாக போவதெனறாலே பயம். அவ்வொழுங்கைகள் தெரு நாய்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதுவும் அக்கூட்டத்துக்கு தலைவன் கள்ளுக்கடை வைத்திருக்கும் கந்தனுக்கு பிரியமான “சடையன்” எனற பெயர் கொண்ட கறுவல் நாய். நல்ல உயரம். அந்நாய் குரைத்தாலே பத்து வீட்டுக்கு அப்பால் கேட்கும். எப்போதும் மற்றைய நாய்களோடு சடையன் சண்டைக்கு போக தயாராக இருப்பான். அதுவும் தனது காதலியான பக்கத்து வீட்டு பெட்டை நாய் ராணியை வேறு நாய்களோடு கண்டால் சடையனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். தனக்கு மாத்திரம் ராணி சொந்தம் என்பது சடையனின் எண்ணம் போலும். சடையனின் தோற்றத்தில் ராணிக்கு ஒரு தனிப்பிடிப்பு.
எனக்கு அந்த ஒழுங்கை அத்துப்படி. அந்த ஒழுங்கை வழியே போவது என்றால் மூக்கை பொத்திக் கொண்டே போகவேண்டும், அவ்வளவுக்கு சிறுநீரின் நாற்றம். அதோடு வேலி ஓரம் மலம் கழிக்கும் இடமாகவும் இருந்தது.
வளைந்து போகும் ஒழுங்கையில் நடந்து போவோருக்கு அவசரத்துக்கு சிறுநீர கழிக் ஒழுங்கையில் உள்ள வேலிகள் பெரும் உதவி . மழை காலத்தில் அந்த ஒழுங்கையில் முலங்காளுக்கு மேல் வெள்ளம் நிற்கும்.. நீர் வடிய ஒரு கிழமை மட்டில் எடுக்கும். நீர் வற்றியபின் ஒழுங்கையில் ஒரே சேறு. சைக்கிளில் போக முடியாது.
அந்த ஒழுங்கையில் ஒரு சிறப்பு இருந்தது சுமார் முன்நூறு யார் போனதும் பொன்னுத்துரையன் வீட்டிலும். சின்னவன் வீட்டிலும் ஒழுங்கையின் ஒரு பக்கம் தென்னம் கிடுகு போட்ட வேலி. அதன் ஒரமாக கொய்யா, இலந்தை மரங்கள் உண்டு. அவைக்கு தனி சுவையுண்டு. ஒழுங்கையில் கற்கள் இல்லாததால் வைத்தியரிடம் போகும் போது கலுசான் நிரம்பக் கற்கள் நான் கொண்டு போவது வழக்கம் . இன்னும் நூறு யார் தள்ளி போனால் வேலி ஓரமாக பச்சைதண்ணி மாமரம். எந்த சேற்றிலும் நடந்து போய் இந்த மூன்று பழங்களையும் சுவைக்க வேண்டும் போல் இருக்கும்.
சேற்றில் வெறும் காலோடுதான் நடந்து போக முடியும் வெள்ளத்தில் குப்பைகள், மலம் மிதந்து வருவது ஒரு தனி காட்சி அனைத் ஒழுங்கையில் முதல் இருநூறு அடிகளுக்கு முகத்தாரின் வீட்டு வேலி. அந்த ஒழுங்கை அரசவெளி ஊடாக திருநெல்வேலி சிவன் கோவிலுக்கு போய் சேருகிறது . நல்லூர் வழியே வைத்தியரிடம் போவேதேன்றல் ஒன்றரை மைல் தூரம். மழை காலத்தில் ஒழுங்கையில் முழங்கால் மட்டும் வெள்ளம் நிற்கும் . அந்த ஒழுங்கை முடியமுன் செல்லனின் கள்ளுக் கொட்டில் உங்களை வரவேற்கும் . நடந்த களைப்பு போக சிலர் கள்ளுக் கொட்டிலுக்கு பொய் கொட்டிலுக்கு முன் இருக்கும் வாங்கில் இருந்து ஒரு கடி இறால் வடையோடு புலாவில் பனம் கள்ளை சுவைத்து குடித்து போவார்கள்.
ஒழுங்கையில் போகிற போது என் தந்தையாருக்கு தெரிந்தவர்களைச் சந்தித்தால் “என்ன தம்பி திருநெல்வெலி சிவன் கோவிலுக்கோ”? இது சிலரின் விடுப்பு கேள்வி. அவரகள் கேட்டதில் நியாயம் இருந்தது. காரணம் அந்த ஒழுங்கையை சிவன் கோவில் ஒழுங்கை என்று பெயர் வைத்தது அரசவெளிச் சனங்கள் .
என் தந்தையின் நண்பர் பாட்டுக்கார சோமு எப்பவும் நெற்றியில் குங்குமப் பொட்டோடு காட்சி கொடுப்பார். சின்ன மேளக்காரி சிந்தாமணிக்கு ஹர்மோனியம் வாசித்து, “ராதை உன்க்கு கோபம் ஆகாதடி” பாடுபவர் சோமு . அவருக்கும் வைத்தியர் விசுவலிங்கம் . பாட்டு மாஸ்டர் சோமு என்னை ஒழுங்கையில் கண்டால் “ என்ன தம்பி விசுவலிங்கத்தாரிடமே போறீர்” இது அவரின் விடுப்புக் கேள்வி. அவருக்கும் அந்த பேதி குளிசையை குடித்து மயங்கி விழும் அளவுக்கு மலம் கழித்த அனுபவம் போல எனக்குத் தெரிந்தது .
பலரின் வேண்டு கோளுக்கு சம்மதித்து அந்த ஒழுங்கையை 12 ஆடி அகலம் உள்ள தார் போட்ட வீதியாக மாற்ற மாநகர சபை முடிவு செய்தது. சிலர் தங்கள் காணி விட்டு கொடுக்க மறுத்தும் சட்டம் இடம் கொடுக்கவில்லை. அவர்கள் இழந்த காணிக்கு நகர சபை பணம் கொடுத்தது.
நான் வெளி நாட்டில் இருந்து பல் வருடங்களுக்கு பின் ஊருக்கு போன போது என் பழைய நினைவுகளை மீட்பதுக்கு தார் போட்ட பதின்ரண்டு அடி அகலம் உள்ள வீதியாக பதவி உயர்வு பெற்ற ஒழுங்கை முற்றிலும் மாறி இருந்தது.
நாய்களை நான் காணவில்லை. அந்த ஒழுங்கையில் இருந் குடிசைகள் மறைந்து மதில்போட்ட பல கல் வீடுகள் அதிகம் காணப்பட்டன. ஒரு மூன்று மாடிக் கட்டிடம். வெளியில் “சிவன் லொட்ஜ்” என்ற போர்ட். நல்லூர் கந்தசாமி கோவில், சிவன் கோவில், வீர மாஹா காளி அம்மன் கோவில் திருவிழாவுகளுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து நல்ல வருமானம் , இந்த ஒரு ஸ்டார் லொட்ஜ் வெகு சீக்கிரம் மூன்று ஸ்டார் ஹோட்டல் ஆகலாம். இன்னும் பல லொட்ஜூகள் அந்த புதிய சிவன் சிவன் கோவில் வீதியில் வருங்காலத்தில் தோன்றலாம் .
அந்த வீதியில் இரண்டு தென்னம் கிடுகு வேலிகளை மட்டுமே காண முடிந்தது அந்த வீதியில் வாழ்பவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை என்பதை வீடுகளின் தோற்றம் எடுத்துக் காட்டியது. ஒழுங்கையில் இருந்த காணி விலை ஒழுங்கை “புது சிவன் கோவில் வீதி” எனப் பதவி ஊயர்வு பெற்றதால் பல மடங்கு கூடி விட்டது. வெளி நாட்டு பணம் கொடுத்து வாங்கப் பலர் ரெடி. என்று சந்திக் கடை சண்முகம் சொன்னார்.
ஒரு காலத்தில் என் அன்புக்குப் பாத்திரமாக இருந்த இலந்தை, கொய்யா , பச்சைத்திண்ணி மாமரம் ஆகிய மூன்றும் ஒழுங்கை வீதியானதும் பலியாகி விட்டன. ஒரு வீட்டில் மட்டும் “Beware of Dogs” பலகை ஆங்கிலத்தில் தொங்கியது. அது ஒரு காலத்தில் சடையன் இருந்த வீடு. ஒரு வேலை சடையனுக்கும், ராணிக்கும் பிறந்த வாரிசு இப்பொது வீட்டை பாதுகாத்து கொண்டு இருக்கிறது.
செல்லனின் கள்ளுக் கொட்டிலைக் காணவில்லை. அந்த லொட்ஜில் கள் கிளாசில் கொடுக்கப்படலாம். கள்ளுக் கொட்டில் இருந்த இடத்தில ஒரு ஒரு ஐஸ் கிரீம் கடை இருந்தது. என்ன இருந்தாலும் ஒழுங்கையின் புழுதி மண் வாசனைக்கு ஈடாகுமா என்றது என் மனம்.
****