கலேன்பிண்டுனுவேவா கொலை வழக்கு

இது ஒரு விசித்திரமான வழக்கு 1973 இல் ஆரம்பித்து மூன்று தடவை வழக்கு நடந்தது. இரு தடவை தண்டனை பெற்று , எட்டு வருடத்துக்கு பின் குற்றம் சாட்டப் பட்ட போலீஸ் சார்ஜன்ட் குணவர்தனே விடுதலையானான்
ஊரின் பெயரில் இருந்து இந்த கொலை ஒரு குளத்துக்கு அருகில் நடந்தது என்பதை காட்டுகிறது
****
கலேன்பிண்டுனுவேவா (Galenbindunuwewa) என்ற அநுராதபுர மாவட்டத்தில் உள்ள பகுதி ஒரு காலத்தில் ஒரே காட்டுப் பகுதியாக இருந்தது . கலத்தாவ கொலைகள் இந்த காட்டுப் பகுதியில் நடந்தது . சிங்களத்தில் வேவா என்றால் குளத்தைக் குறிக்கும். இந்த பகுதியில் பல குளங்கள் உண்டு. இந்த பகுதியில் உள்ள பபுனுதேனிய கிராமத்தில் மன்னன்லா கெதர சுந்தரா தம்பதிகளுக்கு 1944 இல் பிறந்தவள் சோமா பெரேரா என்று அழைக்கப்பட்ட சோமாவதி . அவள் பதினாறு வயது அழகிய கிராமத்துப் பெண்ணாக இருக்கும் போது அழகு ராணி போட்டியில் கிராமத்தில் பரிசு பெற்றவள். அவளுக்குத் தான் அழகி என்ற கர்வம் வேறு. படிப்பை முடிக்கமுன் ஒரு இளம் விவசாயியான ஜேமிஸ் என்பவனுக்கு 1960 யில் அவளின் தந்தை திருமணம் செய்து வைத்தார். தந்தையின் வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்தார்கள் . அரசு கொடுத்த காணியில் ஜேமிஸ் வசிக்க வீடு கட்டியபின் மனைவி சோமாவதியோடு தன் வீட்டுக்குப் குடி புகுந்தான் .

எட்டு வருட தாம்பத்திய வாழ்கையில் மூன்று பிள்ளைகளுக்கு சோமாவதி தாயானாள். அந்த நிலையிலும் அவளின் அழகு குறையவில்லை. திரண்ட மார்பகங்கள் , நீண்ட முடி, மாநிறம், சிவந்த உதடுகள், ஊடுருவும் பார்வை என்று அவளை வர்ணித்துக் கொண்டே போகலாம். அந்த கிராமத்தில் உள்ள குளத்தில் பூத்த செந்தாமரை என்றே சொல்லலாம். அவளைப் பார்த்தவர்கள் மூன்று பிள்ளைகளுக்கு தாய் என்று எவரும் சொல்ல மாட்டார்கள்.

அவள் தன் பார்வையாலும், பேச்சாலும் ஆண்களை கவர்ந்து விடுவாள். தான் நினைத்ததைச் சாதித்தும் விடுவாள் . ஜேமிசும் அவளின் விருப்பப்படி நடந்தான்
***
ஓரு நாள் ஜேமிஸ் வீட்டில் திருட்டு போயிற்று . அந்த சமயம் ஒருவரும் வீட்டில் இருக்கவில்லை. கிராமத்து கன்னிமடுவ ரஜ மஹாவிஹராவுக்கு குடும்பமே போய்திரும்பி வீட்டுக்கு வந்த போது வீட்டின் முன் கதவை உடைத்து திருட்டு நடந்திருந்தது. ஜேமிஸ் தன் கடும் உழைப்பால் விவசாயம் செய்து நெல் விற்று வைத்திருந்த பணமும், சில பொருட்களும் திருட்டு போயிற்று. ஜேமிஸ் உடனே போய் போலீசுக்கு முறைப்பாடு செய்தான். குணவர்தனா என்ற சார்ஜன்டையும். பண்டா என்ற போலீஸ்காரனையும் ஜேம்ஸ் வீட்டுக்கு சென்று விசாரித்து வரும்படி இன்ஸ்பெக்டர் ஹெட்டியாராச்சி அனுப்பினார். அதுவே சோமாவதியின் வாழ்கையை திசை மாற்றியது.

ஜேமிசின் வீட்டுக்கு களவு பற்றி விசாரிக்க போன குணவர்தனாவையும், பண்டாவையும் சிரித்த முகத்தோடு சோமாவதி வரவேற்றாள். அவளின் அழகைக் கண்டு பொலீஸ்காரர் இருவரும் அதர்ந்து போனார்கள். இந்த காட்டுப்புற கிராமத்தில் இப்படியும் ஒரு அழகியா என்று இரகசிமாக பண்டா குணவர்தனாவின் காதுக்குள் சொன்னான். அதுவே அந்த இரு இள வயதுடைய பொலீஸ்காரர்களின் சோமாவதியோடு முதல் சந்திப்பு .
குணவர்தனாவுக்கு திருமணமாகி அவனுக்கு இரு பிள்ளைகள் இருந்தன. பண்டா திருமணமாகாதவன்.

களவு பற்றிய விசாரணை காரணம் இல்லாமல் நீடித்தது விசாரணையைக் காரணமாக வைத்து இருவரும் அடிக்கடி ஜேமிஸ் இல்லாத நேரம் பார்த்து சோமாவதியை சந்தித்து, அவளோடு உடலுறவு வைத்துவந்தனர் . சோமாவதி பண்டாவுடன் நெருங்கிப் பழகினாள். இது அவளின் கணவன் ஜேமிசுக்கு தெரியவந்தது அவன் இன்ஸ்பெக்டரிடம் முறையிட்டான். ஜேமிசுக்கும் சோமாவதிக்கும் இடையே உள்ள குடும்ப பிரச்சனையை இன்ஸ்பெக்டராலும், அவளின் தந்தையாலும் தீர்த்து வைக்க முடியவில்லை. கணவனோடு வாழப் பிடிக்காமல் சோமாவதி பண்டாவின் வைப்பாட்டியாக வேறு வீட்டில் வாழத் தொடங்கினாள். அவளை இருவரும் தமது ஆசை நாயகியாக பாவித்தனர். அவளும் அவர்களோடு நெருங்கிப் பழகினாள் .

குணவர்தனாவும். பண்டாவும் மாறுதலாகி நுவெரேலியாவுக்கு சென்றதும் சோமாமாவதி தனித்துப் போனாள். கணவனிடம் போனபோது அவன் அவளை ஏற்கவில்லை. இரு போலீஸ்காரர்ளையும் தேடி நுவெரேலியாவுக்குப் போனாள். அங்கு பண்டாவிடம் தன்னை மணம் முடிக்கும்படி வற்புறுத்தினாள் . அவனுக்கு வேறு பெண்ணை பெற்றோர்கள் நிட்சயித்து வைத்திருந்தார்கள். சோமாவதி ஒழுக்கம் கேட்டவள் என்று தெரிந்த படியால் அவளை திருமணம் செய்ய பண்டா மறுத்தான். கோபமடைந்த சோமாவதி போலீஸ் நிலையத்தில் சத்தம் போட்டு பேசி பண்டாவோடு வாதாடினாள் . அவளை அழைத்து விசாரித்த உயர் அதிகாரி அவளின் மன நிலை அறிந்து உளவளத் துறை அதிகாரி (Probation officer) ஒருவரிடம் அவளை அனுப்பினார். அவர் சோமாவதியுடன் சில நாட்கள் உறையாடி தனித்து விடப்பட்ட அவளின் நிலை அறிந்து உயர் அதிகாரிக்கு “ இந்த சோமாவதி என்ற பெண் குடும்பத்தில் இருந்து இவளின் ஒழுக்கமற்ற நடத்தை காரணத்தால் கணவனால் ஒதுக்கி வைக்கப்பட்டாள். இவள் இப்போது ஒரு ஆண் உதவி இல்லாமல் தனித்துப் போனாள். தனக்கு ஒரு துணை தேடுகிறாள். தன் வாழ்கையைச் சீரழித்த இரு போலீஸ்காரர்களில் ஒருவரையாவது எங்கு போனாலும் தேடித் தான் திருமணம் செய்யப் போவதாக பிடிவாதமாக சொன்னாள். அவளது போக்கு விசித்திரமானதும், தான் நினைத்ததை சாதிக்கும் குணம் உள்ளவள் என்பது அவளோடு நான் பேசியதில் அறிய முடிந்தது .” என்று எழுதினார்.
.
அவள் மீது பரிதாபப்ட்டு 1970 யில், கொழும்பில் மாத சம்பளத்தில் ஒரு வீட்டில் வேலைக்காரியாக அந்த அதிகாரி அமர்த்தினார் . அந்த வீட்டில் இருக்கும் போது ரத்னாயக்கா என்ற எலக்ட்ரீஷியன் ஒருவனோடு தொடர்பு வைத்தாள். அவனும் அவளும் அழகில் மயங்கி அவளத் திருமணம் செய்ய முடிவெடுத்தான் . திருமணத்துக்கு முன் அவள் பற்றி விசாரித்து ரத்னாயக்கா தன் முடிவை மாற்றிக்கொண்டு அவளோடு தொடர்பு கொள்வதை நிறுத்தினான்.
அதன்பின் சோமாவதிக்கு டக்சி ஓட்டுபவன் ஒருவனின் அறிமுகம் கிடைத்தது. அவனோடு சில காலம் அவனின் வைப்பாட்டியாக வாழ்ந்து அவனோடு பிரச்சனைப் பட்டு தனித்து இருக்கும் போது அவளை விதி விடவில்லை. திரும்பவும் குணவர்தனாவை சந்திக்கும் சந்தர்ப்பம் அவளுக்குக் கிடைத்தது. அவன் அவளை திரும்பவும் தன்
வைப்பாட்டியாக தொடர்ந்து வைத்திருந்தான். அப்போது அவள் மாத்தளையில் ஒரு வீட்டில் இருந்தாள்.

****
குணவர்த்தனா பொலீஸ் சேவையில் 1953ஆண்டில் சேர்ந்து. பயிற்ச்சி பெற்று முதலில் கிளிநொச்சி பொலீஸ் ஸ்டேசனில் வேலை செய்து , அதன் பின் சுன்னாகம், வல்லிவேட்டித்துறை. யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வேலை செய்து அதன் பின் சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்று, மாறுதலாகி கலேன்பிண்டுனுவேவா போலீஸ் ஸ்டசனில் வேலை செய்த போது சோமாவதியின் சந்திப்பு அவனுக்கு ஏற்பட்டது .

நிட்டம்புவவை பிறப்பிடமாக கொண்ட குணவர்த்தனா குளியாபிட்டியாவை சேர்ந்த நேர்ஸ் ஒருத்தியை காதலித்து திருமணம் செய்து, நான்கு பிள்ளைக்ளுக்கு தந்தையானான் . அந்த நிலையில் தான் சோமவதியின் அழகில் சிக்குண்டான். அப்போது அவன் குடும்பத்தோடு கலேன்பிண்டுனுவேவா போலீஸ் நிலயத்துக்கு அருகே உள்ள அரச வீட்டில் வசித்து வந்தான் .
****
1973 ஆம் ஆண்டு மாதம் 13ஆம் திகதி கொழும்பில இருந்து சோமாவதி புறப்பட்டு ஒரு வீட்டில் தங்கி அதன் பின் 14ஆம் திகதி சீலாவதி என்ற தெரிந்தவள் வீட்டில் தங்கி, அடுத்த நாள் 15 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மாத்தளையில் இருந்து பஸ்சில் கெக்கிராவையூடாக 110 கி மீ துரத்தில் உள்ள கலேன்பிண்டுனுவேவாவுக்கு புறப்பட்டாள். தற்செயலாகவோ , அல்லது ஏற்பாட்டின் மூலமோ அதே பஸ்சில் கெக்கிராவையில் குணவர்தனா ஏறினான் . அவன் கேகல்லை நீதி மன்றத்துக்கு இரு வழக்குகளுக்கு சாட்சி சொல்லி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தான். பஸ் கலேன்பிண்டுனுவேவாவை இரவு 8.15 மணிக்கு அடைந்தது. பஸ் இன்ஸ்பெசக்டர் சோமாவதியும், குணவர்தனாவும் ஒன்றாக சிப்புகுலம் பாதை வழியே செல்வதைக் கண்டதாக அவர்களோடு பயணித்த பஸ் இன்ஸ்பெக்டர் சாட்சியத்தின் போது சொன்னார்.

அடுத்த நாள் மே 16 ஆம் திகதி காலை 7.30மணிக்கு ஜமால்டீன் முகமது என்பவரால் சோமாவதியின் உடல் குளக் காரையோரத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. போலீஸ் டிரைவர் சிறிசேன இருந்த அரசவீடு சோமாவதியின் உடல் இருந்த இடத்தல் இருந்து 140 யார் தூரத்தில் இருந்தது. அவனின் வீடு இருந்தது. அவன் வீட்டில் இருந்து வடக்கே 40 யார் தூரத்தில் குணவர்தனாவின் வீடு இருந்தது.

ஆரம்ப விசாரணையின் பின், பலரின் சாட்சியங்களை வைத்து கொலை நடந்த ஒரு மணி நேரத்துக்கு முன் சோமாவதியை குணவர்தனாவோடு பஸ்சில் இருந்து இறங்கி ஒன்றாக போவதை கண்டதைக் சாட்சிகள் சொன்னார்கள். அதோடு விசாரணையின் போது திருமணமான . குணவர்தனாவுக்கு சில வருடங்களாக
சோமாவதியை தெரியும் என்றும் அவளைத் தன் வைபாட்டியாக வைத்திருந்தான் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருந்தன.. குணவர்தனா அவளுக்கு போஸ்டல் ஒடரில் அடிக்கடி பணம் அனுப்பி வந்ததுக்கு ஆதாரம் இருந்தது . சோமாவதி இறக்க முன் ஒருவரும் காணாதவாறு குளக் கரை ஒரத்தில் உடலுறவு வைதிருந்ததுக்கு ஆதாரம் உண்டு என வைத்திய பரிசோதகரின் அறிக்கை சொல்லியது. குணவர்தனா கொலைக் குற்றவாளியாகக் காணப்பட்டு, அவர் மீது வழக்கு 1974 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் திகதி கண்டி நீதி மன்றத்தில் தொடரப் பட்டது. அக்டோபர் 25 இல் வழக்கு முடிந்தது . நீதிபதி ஜுரிமாருக்கு வழக்கை விளக்கி சொன்னது பாரபட்சமாக இருந்ததினால் ஜுரிகள் ஏகமனதாக குணவர்தனாவை குற்றவாளி என்று தீர்ப்பு சொன்னார்கள் . அந்த தீர்ப்பில் போதிய அதாரமில்லாமல் ஜுரிகள் தீர்ப்பை வழங்கினார்கள் எனவும் சட்டத் துறையில் பலர் குறிப்பிட்டார்கள். அப்படி இருந்தும் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது.

அந்தத் தீர்ப்பினை எதிர்த்து குணவர்தனா அப்பீல் செய்து, மூன்று நீதிபதிகளுக்கு கீழ் கண்டி நீதி மன்றத்தில் வழக்கு எழு நாட்கள் விசாரிக்கப்பட்டு குணவர்தனாவுக்கு , நான்கு வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது . கடூழிய குற்றவாளிகள் இருந்த சிறையில் இருந்து, அதன் பின் சட்டத்தின் படி வழக்கு விசாரிக்கப் படவில்லை என்பதால் மூன்றாம் முறை வழக்கு நடந்து சுமார் எட்டு வருடங்களுக்குப் பின் 1976 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 13 ஆம் திகதி
குற்றவாளி குணவர்தனா விடுதலை செய்யப் பட்டார்
.
எட்டு வருடங்கள் சரியான தீர்ப்பு வழங்க எடுத்தது. இந்த தாமதித்தினால் அவர் மேல் பொது மக்களினதும். ஊடகங்களினதும் அனுதாபம் கூடியது. அதுவும் அவர் விடுதலையாக ஒரு காரணமாக இருந்திருக்கலாம் .

****

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (28-Jun-18, 12:12 am)
பார்வை : 185

மேலே