பயணம் போகலாம் நண்பர்களே

எப்போது பிழைப்பேன்
இந்த நரகத்திலிருந்து?
அச்சோ! தவறு..
நரகம் அல்ல.. நகரம்!

மூழ்குகிறேன்..
என் கிராமத்து நினைவுகளில்!
உங்களையும் சேர்த்து கொள்கிறேன்
ஒரு அழகிய பயணத்தில்!

பள்ளி நாட்களில்
தேர்வு விடுமுறையில்
சிட்டாய் பறப்பேன்
என் சொந்த ஊரை நோக்கி!

ஒரு நாள் போதும்
நான் வந்த சேதி ஊருக்கு சொல்ல
சென்னைக்காரி வந்துட்டா..
கூச்சலிடுவர் நண்பர்கள்!

உண்ணவும் உறங்கவும் மட்டுமே
வீட்டிற்குள் நுழைவோம்..
மற்ற நேரம் எல்லாம்
தோழியரோடு வயல்களில் மகிழ்வோம்!

கன்று குட்டிகளை கட்டி பிடித்திட
காலையே செல்வேன் தோட்டத்திற்கு..
காளைகளுக்கும் பெயர் வைப்பேன்
தூரத்தில் இருந்து அழைப்பதற்கு!

செவ்வானம் சூழ்ந்து கொள்ள
சேர்ந்து விடுவோம் கண்ணாமூச்சி ஆட..
எல்லா வீடுகளும் தெரியும்
துள்ளி குதித்து ஒளிந்து ஓட!

உடல் சிலிர்க்க குளித்து விடுவோம்
ஐந்து மணிக்கே ஆற்றங்கரையில்..
கருவாட்டு குழம்பு மணக்கும்
மதிய நேரம் சமையல் கூடத்தில்..

நீண்ட பயணத்தில் களைத்து விட்டீரா
தோழர் சமூகமே..
கவலை வேண்டாம் வாருங்கள்
பதநீர் குடித்து நுங்கு தின்னலாம்!

எழுதியவர் : மது (6-Jul-18, 6:51 pm)
பார்வை : 125

மேலே