துடைத்தெறிந்து விட்டனர்

கணினி அலுவலகம்,
சுமாரான கட்டிடம்,
ஓ எம் ஆர் சாலையில் ஒய்யாரமா
வளர்ந்து நின்றது.
வெளியில் வெய்யில் அடித்தால்,
உள்ளே கனகனவென இருக்கும்.
பேருந்து சென்றால் கூட
பேய் சத்தம் கேட்க்கும்.
சுமாரான கான்டீன்,
கொஞ்சம் சுத்தம் குறைந்த
கழிப்பறை.
ஆண்களும் பெண்களும்
சகஜமாய் வேலை செய்யும்
மென்பொருள் நிறுவனம்.
போன வருடம் பெய்த
மழையின் போது
ஓ! வென கேட்கும் சத்தத்தால்
கஸ்டமரிடம் தொலைபேசியில் கூட
பேச முடியாத உபத்திரம்.
சில பெரு மழையால்
தண்ணீரெல்லாம் உள்ளே வந்து
எங்களை வதம் செய்தது.
வேலையென்னவோ உயர்தர
மென்பொருளாளராய் இருந்தும் ,
அலுவலக கட்டமைப்பு கண்றாவியாய்
பட்டது.
ஏதோ மேலிட மனமாற்றத்தால்
புது அலுவலத்திருக்கு மாற்றலானை
கிடைத்துவிட்டது.
அலாதி சந்தோசம்!
அலுவலகமோ கண்ணாடி பேழைபோல்
மினு மினுத்தது.
ஒரு சங்கடம்,
அருகிலும், குறுக்கிலும், நெடுக்கிலும்
குப்பையோ குப்பை.
ஆனால் உள்ளே சென்றால்,
பல பல பல்புகளும்,
பளீர் பளீர் மார்பில் தரையும்,
கொஞ்சம் குஷி படுத்தியது .
காற்று புகமுடியாத
தூசி படியாத மேசைகள்,
சுகமான இருக்கைகள்.
பன்னிரண்டு அடுக்குகள்,
சில அடுக்குகளில்
கண்ணை பறிக்கும்
சுவர் செடிகள் -பார்க்க பார்க்க
நேரத்தை உறிஞ்சிவிடும்
சக்தி படைத்தாய் பாவித்தது.
நெரிசல் இல்லை,
கச கச பேச்சு சத்தம் இல்லை.
வெளியில் மழை பெய்தாலும்,
இடி இடித்தாலும்,
வெயில் சுட்டெரித்தாலும்,
பூகம்பமே வந்தாலும்,
உள்ளே இருக்கும் எங்களுக்கு
தெரியவே தெரியாத
கட்டமைப்பு.
வேலை செய்ய உகந்த இடம்.
திறமையை மேம்படுத்த
உறுதியான கட்டிடம்.
எங்கு பார்த்தாலும்
உச்ச பாதுகாப்பு உறுதியாயிருந்தது.
அங்கி அணிந்த மற்றும்
அங்கி அணியாத பாதுகாப்பாளர்கள்
நிறைந்திருந்தது.
வேலையில் ஒவ்வொருவரும்,
போட்டி போட்டு வேலை
செய்யும் அருங்காட்சியகமாக
மாறியிருந்தது.
தொழில் நுட்பத்திலும்,
தொழில் பக்தியிலும்,
வெளிநாட்டு காரர்களை
திரும்ப திரும்ப இந்த
கண்ணாடி கட்டிடத்திற்கு
வர வைத்தது.
வேலை பளுவிலும்,
வேலை ப்ரியத்திலும்,
வேலைசார்ந்தே பேச்சுகளும்,
ஏச்சுக்களுமே எங்கும் பிரதானமாய்
பிரகாசித்தது.
துப்புரவாளர்களும்,
பணியார்க்காலும்
விடிய விடிய வேலை பார்த்தனர்.
குடித்த காபியோ,
தேனீரோ சிந்தி விட்டால்,
கண் இமைக்கும் நேரத்தில்
துடைத்தெறிந்து விடுவர்!
ஒரு முறை கண்ணாடி பேழை,
கை தவறி விழுந்துவிட்டது.
அது ஏழாம் மாடியின் நடைபாதையில்
போட்டு விட்டேன்.
என்ன செய்வதென்று தெரியாமல்,
வரவேற்பறை நோக்கி ஓடினேன்.
சொல்லிவிட்டு திரும்பி வந்தால்
பேழை விழுந்த இடமே எனக்கு
தெரியவில்லை.
துடைத்தெறிந்து விட்டனர்!!
இந்த பேழை உடைந்த சம்பவத்தை,
சில பல அலுவலக நண்பர்கள்
கூடி பார்த்தனர்...
இருந்தும் உதவி செய்ய நேரமின்றி
மின்னலாய் மறைந்து சென்று
வெள்ளை காரர்களின் துயரம்
துடைக்க ஆரம்பித்தனர்.
இதேபோல் நேற்றும் ஒன்று நடந்தது,
கீழ் தளத்தில் நானும், என் நண்பர்களும்
காபி அருந்தி திரும்பும்போது,
தொப்பென்று ஒரு சத்தம்.
ஏதோ மண் மூட்டை விழுந்ததுபோல் இருந்தது.
சிறிது நேரத்தில்
ஒரு இருபது பேர் சூழ முயன்றனர்,
பாதுகாப்பு பணியில் இருந்த நால்வர்
கவசம் போல் தடைபோட்டனர்.
ஏதோ சிகப்பு துணி,
துவண்டு கொட்டி கிடந்தது தெரிந்தது.
என்னவாக இருக்கும்?
கண்களுக்கு புல படவில்லை,
பார்த்தவர்கள், ஆ வென அலறி
ஒதுக்கினர்.
என்னவென்று விசாரித்தோம்,
யாரோ ஒரு இளம் பெண்
குதித்து விட்டாளாம் - ஒன்பதாவது
மாடியிலிருந்து!
விழுந்த மறுநொடி,
இறந்துவிடலாம்.
மனசு பட பட படத்து துடித்தது.
நாங்கள் அனைவரும் சற்று
சங்கடப் பட்டோம்.
சடக்கென்று கைக்கடிகாரத்தை பார்த்தேன்,
மாலை ஐந்து ஐந்து மணி.
ஐயோ, ஒரு அமெரிக்கா நிறுவனத்
தலைவரிடம் மீட்டிங் இருந்தது
நினைவுக்கு வர,
சிதறி மின்தூக்கி பக்கம்
ஓடினோம்.
ஏழாம் மாடி சென்று,
அலைபேசியில் அரைமணி நேரம்
அமெரிக்கரின் பிரச்னைக்கு
தீர்வு கொடுத்தபின்.
அக்கம் பக்கத்து நண்பர்களிடம்,
நடந்ததை நாங்கள் சொன்ன அடுத்த
நொடி.
பதறி அடித்து,
படி வழியே சுமார் பத்து பேர்,
விரைந்து ஓடினோம்.
தரைத் தளம் அடைந்தால்,
சுவடே தெரியாமல்,
அந்த இளம் பெண்ணையும்
துடைத்தெறிந்து விட்டனர்...!!!