இன்று கடக்கும் அந்த பிறந்தநாள்

வயது முப்பத்து எட்டை கடந்தாயிற்று ,
குருதியின் வேகம் குறைந்தாயிற்று,
இளமை பருவமோ இறுதியாயிற்று,
சிந்தையில் கொஞ்சம் தெளிவாயிற்று ,
வாழ்க்கையின் பாதியோ முடிந்தாயிற்று ,
தேடிய பாதையோ தொடர்ச்சியாயிற்று ,
மூப்பினை உணர்ந்திட முடி நரை கூடிற்று ,
தூரத்து காட்சிகள் திரைபோட ,
மூக்குக்கண்ணாடி அணிந்தாயிற்று,
பொருள் தேடலிலே காலங்கள் இறந்தாயிற்று,
சுகபோக பொருள்களாலே உடல் சோர்வாயிற்று ,
வாழ்க்கைமுறை மாற்றத்தால் வாழ்வியல் நோய் சேர்ந்தாயிற்று.

பால்குடி பருவகால ஞாபக சாத்தியமற்று ...
பாலர்பள்ளி ஞாபகங்கள் வந்தோடிற்று ,
ஒருசில சூழல்கள் கடக்கும்போது
அதை ஒத்த ஞாபகங்கள் வாசனைபோல் குறுக்கிடாயிற்று ,

வலிதந்த ஞாபகமோ முகம் சிறுவாட்டம்கொள்ளும்,
இனிமைதந்த ஞாபகமோ இதழ் புன்னகை தள்ளும் ,
உயிர்நீத்த உறவின் ஞாபகமோ இதயம் கிள்ளும் .

சிறுவன் என்ற சொல்வெறுத்தேன்,
பெரு ஆள் உயரம் என் தோள் உயர துள்ளிகுதித்தேன் ,
சைக்கிள் ஒட்டி சாகசம் காட்ட....
ஏரி, கம்மாய் , கிணறு எங்கும் நீந்தி குளிக்க...

அரும்பு மீசைமீது ஆசைகொண்டேன் இளமையைக்காட்ட ,
குறும்பு தாவணிகள் சிரிப்பொலிகள் ,கொலுசொலிகள் என்னை கடந்து செல்ல ,
புது சிலிர்ப்பும் , பலதவிப்பும் என்னுள் படர்ந்து செல்லும் .

எதிர்பார்க்கா நேரமொன்றில் , எதிர்ப்பட்ட பெண்ணொருத்தி,
என் கண் பார்த்து பேசுகையில்,....
என் இதயத்தில் ரயிலோசை தடதடக்கும் ,
உடலெங்கும் வியர்வை பூத்து தகிதகிக்கும்.
பேர்சொல்லத்தெரியாது, அதன் காரணங்கள் புரியாது ...
வெட்கமென்றோ ....
காதலென்றோ ...
காமமென்றோ ...

இந்த குழப்பமெல்லாம் தெளிவின்றி மறைந்துபோக,
புது குழப்பங்கள் அறிவிப்பின்றி மனம்புகுந்துகொள்ளும் .

பல வண்ண ஆடைகள்மேல் மனம் மோகம்கொள்ளும் ,
சிகை அலங்காரத்தில் திரை நாயகர்கள் சாயல் ஏறிக்கொள்ளும்.

காதல் கடிதம் ஒன்று தொடங்கும்போது,....
திடீர் ஞானம் வரும்,
கையெழுத்தை சரிப்படுத்த ,
தமிழ் வார்த்தைகளில் பிழை திருத்த.

காட்டாற்று வெள்ளம்போல் என் இளமை வேகம் ,
கழனிக்கு பாயாமல் கடலுக்குள் கலந்தாயிற்று,..
தடுப்பணைகள் ஏதுமற்று .
கடல்புகுந்த நதிகளெல்லாம் கரைக்கடக்க
மீண்டும் மீண்டும் முயன்று பார்க்கும் ,
அலை அலையாய் கரை நுனி தொட்டு....
நுரைபட்டு வலுவிழக்கும்.

----- கவிதை அலை தொடரும் ....

எழுதியவர் : (2-Aug-18, 5:14 pm)
பார்வை : 73

மேலே