ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க பயணிகள் எதிர்ப்பு அலுவலக நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்கக் கோரிக்கை

புறநகர் ரயில்களில் விபத்தைத் தடுக்க தானியங்கி கதவுகள் அமைக்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ள கருத்துக்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தானியங்கி கதவுகளுக்குப் பதிலாக அலுவலக (நெரிசல்) நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ. மனோகரன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், மின்சார ரயில்களில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதைத் தவிர்ப்பதற்காக தானியங்கி கதவுகள் பொருத்தப்பட வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளார். இதற்கு ரயில் பயணிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, ரயில் பயணிகள் கூறியதாவது:

பயணிகள் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததுதான் பரங்கிமலை ரயில் விபத்துக்கு முக்கியக் காரணம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார். காலை, மாலை நேரங்களில் அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்பவர்கள் என ஏராளமானோர் ஒரே நேரத்தில் பயணம் செய்கின்றனர். இதனால், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயில் பெட்டிக்குள் நிற்கக்கூட இடம் இல்லாததால்தான் பயணிகள் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்கின்றனர். சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் நெரிசல் நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்கினாலேயே இப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும்.

அத்துடன், சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் ஒருசில ரயில்கள் மட்டுமே 12 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படுகிறது. மற்ற ரயில்கள் அனைத்தும் 9 பெட்டிகளை கொண்டு இயக்கப்படுகிறது. இதுவும் ரயில்களில் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே, தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படுவதுபோல அரக்கோணம் வழித்தடத்திலும் அனைத்து ரயில்களும் 12 பெட்டிகளைக் கொண்டு இயக்க வேண்டும்.

அதேபோல், மெட்ரோ ரயில்களில் உள்ளதுபோல, மின்சார ரயில்களிலும் நீளவாக்கிலான இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுவும் நடைமுறைக்கு சாத்தியமாகாத ஆலோசனை. ஏனென்றால், மெட்ரோ ரயில்கள் குறைந்த தூரம் இயக்கப்படுவதோடு, அதில் குறைந்தளவு பயணிகள் மட்டுமே பயணம் செய்கின்றனர். அதேசமயம், மின்சார ரயில்கள் நீண்ட தூரம் இயக்கப்படுவதோடு, அதிகளவு பயணிகள் பயணம் செய்கின்றனர். இதனால், நீண்டதூரம் நின்று கொண்டு பயணம் செய்ய முடியாது. எனவே, ரயில்வே நிர்வாகம் இப்பிரச்சினைகளைத் தீர்க்க கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பயணிகள் கூறினர். தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படுவதுபோல அரக்கோணம் வழித்தடத்திலும் அனைத்து ரயில்களும் 12 பெட்டிகளைக் கொண்டு இயக்க வேண்டும்.

எழுதியவர் : (29-Aug-18, 7:01 pm)
பார்வை : 63

மேலே