அந்திசாயும் அழகே

ஊசிமழை உச்சி நனைக்கிறது
மண்வாசம் மனத்தைக் கிளறுகிறது

அந்திசாயும் அழகிய வானக்காட்சி
பொடிநடை போட்டு நடைபயணம்
புன்னையும் வேம்பும் பாதுகாவலர்களாக
சாலையின் இருமருங்கும் மரங்களாக
தென்றல் வந்து தழுவும்
பச்சைக் கிளிகள் பாடித்திரியும்
குயிலினமும் ஓயாது இசைமீட்டிடும்
வண்ண மயிலும் அதிரப் பறக்கும்
புள்ளிமான்களும் மருண்டு ஓடிடும்

ஊட்டிமலை உச்சியிலே மறைவான்
கதிரவன் கிரணங்கள் உதிர்த்து
மேகங்கள் சூழ்ந்தாலும் ஒளி மறையாது

மேடு பள்ளம் நிறைந்த சாலை
மின்சார வேலி மிருகங்களை விரட்ட ;
அத்துமீறுபவர்கள் யாரோ ?

பசுமைப் படர்ந்த வாழைதோப்பு
ஓங்கியுயர்ந்த தென்னைமரங்கள் வரிசையாக

எழில்கொஞ்சும் காடுகளைச் சூழ்ந்தே கரியமலை
உள்ளம் ததும்பும் நினைவுகள்
புல்வெளி படுக்கையும் வானக்காட்சியும்
வாழ்க்கையின் ரம்மியம் ருசித்தவாறு இருக்க

வானை வெட்டும் மின்னல்;
பேரிடி முரசறைய
தங்குமிடம் திரும்பும் நாட்கள்தான்
எத்தனை சுகம் எத்தனை சுகம்

இயற்கையோடு இருக்கையிலே இன்பம்தானே!
துன்பங்கள் தூசாய் பறந்துவிடும்

இயற்கையோடு பயணிப்போம்
நல்வாழ்வு வாழ்வோம்!

எழுதியவர் : கயல் (11-Sep-18, 5:52 pm)
சேர்த்தது : கயல்
பார்வை : 2056

மேலே