நீதான் உன்னை கழுவவேண்டும்

நீதான் உன்னை கழுவவேண்டும்

எந்த தண்ணீர் தேசமும்
உன் கடந்த கால அழுக்குகளை
கழுவ காத்திருக்கவில்லை
உன் கண்ணீர் தேசம் மட்டுமே
உன்னை கழுவ முடியும்
அதன் வலிகளில்தான்-உன்
வசந்த வாழ்வின் வயாகரா ஒளிந்திருக்கிறது

ஏறி இறங்கும் உன்
துலாபார எண்ணங்களை
சுவாசகாற்றோடு கலந்து விடு

வேம்பின் கசப்புகளால்
கட்டுண்ட எண்ணத்திவலைகளை
வழித்தெடுத்து மனக்குவளைக்குள் வை

காழ்ப்புணர்வுகளால்
கலங்கியிருக்கும் உன்
குவளைத்தண்ணீரை
கூர்ந்து கவனி -பின்
சாட்சியாக நில்

உன் சிந்தை பலூனில்
மௌனக்காற்றை நிரப்பு
இறக்கை இழந்த பறவையாய்
உன் நினைவுகள் மேலெழும்ப
தடுமாறட்டும்

ஒருபோதும் ஒருமுக படுத்த
முனையாதே
முனைவதற்கு பெயர் முயற்சி
கழுவுதலின் நிகழ்வு இயல்பானது

எல்லாத்திசைகளிலும்
எண்ணங்களை பறக்க விடு
விண் முட்டி பின் வீரியம் இழக்கும் வரை

இனி உன் உள்முகம் நோக்கு
மழலையின் மனதுபோல

ஆழப்பெருமூச்சை
அடிவயிறுவரை இறக்கு
புல்லாங்குழலுக்குள் செல்லும்
காற்றைப்போல

நிறைந்த வெற்றிடத்தில்
நிறைந்திரு

நினைவுகள் இல்லா மாளிகைக்குள்
மகிழ்ச்சி உலா வா

உன் கசப்பின் கட்டடங்களில்
வெறுமையின் வேர்கள்
புரையோடி போகட்டும்

உன் காமத்தின் கண்களில்
நினைவற்ற நிசப்தம்
புகுந்து நிர்மூலமாக்கட்டும்
பின் அங்கே காதல் மலரட்டும்

சமூகம் உன்மேல் தெளித்த
சாக்கடையும்
நீ சமூகத்தின்மேல் தெளித்த
சாக்கடையும்
எண்ணங்களற்ற ஓவியங்களால்
அழகு படுத்த படட்டும்

நேற்றைய நாளைய அழுக்குகள்
கழுவப்பிட்டபின்
இன்றுமட்டும் நீ வாழ்கிறாய்

இப்போது நீ இருக்கும் இடம்
இருத்தல் இயல்

எழுதியவர் : இளவல் (18-Sep-18, 11:41 am)
சேர்த்தது : இளவல்
பார்வை : 57

மேலே