கற்பு

கற்பு என்கின்ற வார்த்தையானது மனித சமூகத்தில் சரிபகுதியான எண்ணிக்கையுள்ள பெண்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காக மாத்திரமே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்கின்ற தத்துவத்தின் மேல் இதை எழுதுகின்றேன்

கற்பு என்ற வார்த்தையைப் பகுபதமாக்கிப் பார்ப்பபோமானால், கல் என்பதிலிருந்து வந்ததாகவும், அதாவது படி - படிப்பு என்பது போல், கல் - கற்பு என்கின்ற பகுபதமாகச் சொல்லப்பட்டு வருகிறது. அன்றியும் "கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை!" என்கின்ற வாக்கியப்படி பார்த்தால் கற்பு என்பது சொல் தவறாமை; அதாவது நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திற்கு விரோதமில்லாமல் நடப்பது என்கின்றதான கருத்துக்கள் கொண்டாதாக இருக்கின்றது.


அதைப் பகாப்பதமாக வைத்துப் பார்த்தால், மகளிர் நிறை என்று காணப்படுகின்றது. இந்த இடத்தில் நிறை என்பது பெண்களையே குறிக்கும் பதமாக எப்படி ஏற்பட்டது என்பது விளங்கவில்லை. நிறை என்ற சொல்லுககுப் பொருளைப் பார்த்தால் அழிவின்மை, உறுதிப்பாடு, கற்பு என்கின்ற பொருள்களே காணப்படுகின்றன. கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டது என்பதற்குத் தக்க ஆதாரம் கிடைக்காவிட்டாலும் அழிவில்லாதது. உறுதியுடையது என்கின்ற பொருள்களே காணக்கிடக்கின்றன.


அழிவில்லாதது என்கின்ற வார்த்தைக்குக் கிரமமான கருத்துப் பார்க்கும் போது, இந்த இடத்தில் சுத்தம் அதாவது கெடாதது, மாசற்றது என்பதாகத்தான் கொள்ளலாம். இந்த சுத்தம் என்கின்ற வார்த்தையும் கெடாதது என்கின்ற கருத்தில் தான் ஆங்கிலத்திலும் காணப்படுகிறது. அதாவது சேஸ்டிடி (Chastity) என்கின்ற ஆங்கில வார்த்தைப்படி பார்த்தால் வர்ஜினிட்டி (Verginity) என்பதே பொருள் ஆகும். அதை அந்தப் பொருளின்படி பார்த்தால் இது ஆணுக்கென்றோ, பெண்ணுக்கென்றோ சொல்லாமல் பொதுவாக மனித சமூகத்திற்கே எவ்வித ஆண், பெண் புணர்ச்சி சம்பந்தமே சிறிதும் இல்லாத பரிசுத்தத் தன்மைக்கே உபயோகப்படுத்தி இருக்கிறது என்பதைக் காணலாம்.


ஆகவே கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல என்பதும்; அதுவும் ஆணோ, பெண்ணோ ஒரு தடவை கலந்த பிறகு எவ்வளவு சுத்தமாயிருந்தாலும் கற்புப் போய் விடுகிறது என்கின்ற கருத்துக் கொள்ளக் கூடியதாயுமிருக்கின்றது. ஆனால் ஆரிய பாஷையில் பார்க்கும் போது மாத்திரம் கற்பு பதத்திற்குப் பதிவிரதை என்கின்ற பொருள் கொள்ளப்படுகிறது. இந்த இடத்தில் தான் கற்பு என்கின்ற வார்த்தைக்கு அடிமை என்ற கருத்து நுழைக்கப்படுகின்றது என்பது எனதபிப்பிராயம். அதாவது, பதியைக் கடவுளாகக் கொண்டவள், பதிக்கு அடிமையாய் இருப்பதையே விரதமாகக் கொண்டவள், பதியைத் தவிர வேறு யாரையும் கருதாதவள் எனப்பொருள் கொடுத்திருப்பதுடன் பதி என்கின்ற வார்த்தைக்கு அதிகாரி, எஜமான், தலைவன் என்கின்ற பொருள்கள் இருப்பதால் அடிமைத்தன்மையை இவ்வார்த்தைகள் புலப்படுத்துகின்றன. ஆனால், தலைவி என்ற பதத்திற்கும், நாயகி என்ற பதத்திற்கும், மனைவி என்ற பொருள் குறிக்கப்பட்டிருப்பதாலும் அது அன்பு கொண்ட நிலையில் மாத்திரம் ஆணையும் பெண்ணையும் குறிக்கின்றதேயொழிய, வாழ்க்கையில் கட்டுப்பட்ட பெண்களுக்குத் தலைவி என்கின்ற வார்த்தை அதன் உண்மைக் கருத்துடன் வழங்கப்படுவதில்லை. நாயகன், நாயகி என்கின்ற சமத்துவமுள்ள பதங்களும், கதைகளிலும், புராணங்களிலும் ஆண், பெண் இச்சைகளை உணர்த்தும் நிலைகளுக்கே மிகுதியும் வழங்கப்படுகின்றன. ஆகவே காமத்தையும், அன்பையும் குறிக்கும் காலங்களில் சமத்துவப் பொருள் கொண்ட நாயகர் - நாயகி, தலைவர் - தலைவி என்ற வார்த்தைகளை உபயோகித்துவிட்டு, கற்பு என்ற நிலைக்கு வரும்போது அதைப் பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்படுத்தி, பதி ஆகிய எஜமானனையே கடவுளாகக் கொள்ள வேண்டுமென்ற கருத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது. இந்த இடத்தில் நமது திருவள்ளுவரின் நிலைமையும் எனக்குச் சற்று மயக்கத்தையே தருகிறது.

அதாவது குறளில் வாழ்க்கைத் துணை நலத்தைப் பற்றிச் சொல்ல வந்த 6 ஆம் அத்தியாயத்திலும், பெண்வழிச் சேரல் என்பதைப் பற்றிச் சொல்ல வந்த 1 ஆவது அத்தியாயத்திலும், மற்றும் சில தனி இடங்களிலும் பெண்கள் விஷயத்தில் மிக்க அடிமைத் தன்மையும், தாழ்ந்த தன்மையையும் புகுத்தப்பட்டிருப்பதாகவே எண்ணக்கிடக்கின்றன. தெய்வத்தைத் தொழாமல் கொழுநனாகிய தன் தலைவனைத் தொழுகின்றவள் மழையைப் பெய் என்றால் பெய்யும் என்றும், "தன்னைக் கொண்டவன்" என்றும் இம்மாதிரியான பல அடிமைக்குகந்த கருத்துக்கள் கொண்ட வாசகங்கள் காணப்படுகின்றன. இவ்விஷயத்தில் மாறுபட்ட அபிப்பிராயம் கொள்ளுவோர் மேற்கண்ட இரண்டு அத்தியாயங்களையும் 20 குறளையும் உரைகளைக் கவனியாமல் மூலத்தை மாத்திரம் கவனிக்கும்படி வேண்டுகிறேன். அப்படிப்பார்த்த பிறகு இந்த இரண்டு அதிகாரங்களும் அதாவது, "வாழ்க்கைத் துணைநலம்" அதிகாரமும், "பெண்வழிச் சேரல்" அதிகாரமும் குற்றமற்றது என்பதாக யார் வந்து எவ்வளவு தூரம் வாதிப்பதானாலும் கடைசியாக, திருவள்ளுவர் ஒரு ஆணாயில்லாமல் பெண்ணாயிருந்து இக்குறளை எழுதியிருப்பாரானால் இம்மாதிரிக் கருத்துக்களைக் காட்டியிருப்பாரா? என்பதையாவது கவனிக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன்.


அதுபோல, பெண்களைப் பற்றிய தர்ம சாஸ்திரங்கள் என்பதும், பெண்களைப் பற்றிய நூல்கள் என்பதும் பெண்களால் எழுதப்பட்டிருக்குமானாலும் அல்லது கற்பு என்கின்ற வார்த்தைக்குப் பெண்களால் வியாக்கியானம் ஏற்பட்டிருந்தாலும் கற்பு என்பதற்கு, "பதிவிரதம்" என்கின்ற கருத்தை எழுதியிருப்பார்களா? என்பதையும் யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.


கற்பு என்பதற்குப் "பதிவிரதம்" என்று எழுதிவிட்டதன் பலனாலும், பெண்களைவிட ஆண்கள் செல்வம், வருவாய், உடல் வலி கொண்டவர்களாக ஆக்கப்பட்டு விட்டதனாலும் பெண்கள் அடிமையாவதற்கும், புருஷர்கள் மூர்க்கர்களாகிக் கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்று நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை.


தவிர புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை.


இந்த விஷயத்தில் உலகத்தில் ரஷ்யா தவிர, வேறு நாடோ, வேறு மதமோ, வேறு சமூகமோ யோக்கியமாய் நடந்து கொண்டிருக்கிறது எனச் சொல்ல முடியாது. உதாரணமாக அய்ரோப்பிய தேசத்தில் பெண்களுக்குப் பலவிதச் சுதந்திரங்கள் இருப்பது போல் காணப்பட்டாலும் புருஷன் பெண் சாதி என்பதற்காக ஏற்பட்ட பதங்களிலேயே உயர்வு தாழ்வுக் கருத்துக்கள் நுழைக்கப்பட்டிருப்பதுடன் சட்டங்களும் புருஷனுக்கு அடங்கி நடக்க வேண்டியதாகவே ஏற்பட்டிருக்கின்றன. மற்றும் சில சமூகங்களில் பர்தா என்றும், கோஷா என்றும் திரை என்றும் அதாவது பெண்கள் அறைக்குள் இருக்க வேண்டியவர்கள் என்றும் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளும் புருஷன் பல பெண்களை மணக்கலாம். பெண்கள் ஏக காலத்தில் ஒரு புருஷனுக்கு மேலே கட்டிக் கொண்டு வாழக்கூடாது என்ற கொள்கையும்; நம் நாட்டில் ஒரு தடவை புருஷன் பெண்சாதி என்கின்ற சொந்தம் ஏற்பட்டு விட்டால் பிறகு அந்தப் பெண்ணுக்குச் சாகும் வரைக்கும் வேறு எந்தவிதச் சதந்திரமும் இல்லையென்றும்; புருஷன் அப்பெண்ணின் முன்பாகவே பல பெண்களைக் கட்டிக் கொண்டு வாழலாம் என்றும்; புருஷன் தன் மனைவியைத் தன்னுடைய வீட்டில் வைத்துக் கொண்டு அவளுடன் ஒன்றித்து வாழாமலிருந்தாலும் கூட மனைவி புருஷனைச் சாப்பாட்டிற்கு மாத்திரம் கேட்கலாமேயொழிய, இன்பத்திற்கோ, இச்சையைத் தீர்ப்பதற்கோ அவனைக் கட்டுப்படுத்த உரிமை இல்லை என்றும் கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன.


இந்நிலை சட்டத்தாலும், மதத்தாலும் மாத்திரம் ஏற்பட்டதென்று சொல்வதற்கில்லாமல் பெண் சமூகமும் ஒப்புக்கொண்டு இந்நிலைக்கு உதவி புரிந்து வருவதானாலும், இது உரம் பெற்று வருகின்றதென்றே சொல்ல வேண்டும். அநேக வருடப் பழக்கங்களால் தாழ்ந்த சாதியர் என்பதை ஒப்புக் கொண்டு, தாமாகவே கீழ்படியவும், ஒடுங்கவும் முந்துகின்றார்களோ, அது போலவே பெண் மக்களும் தாங்கள் ஆண் மக்களின் சொத்துக்களென்றும் ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களென்றும், அவர்களது கோபத்திற்கு ஆளாகக் கூடாதவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு சுதந்திரத்தில் கவலையற்று இருக்கின்றார்கள். உண்மையாகப் பெண் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்பு முறை ஒழிந்து, இருபிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும். கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுதுகொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும். கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள் சட்டங்கள் மாயவேண்டும். கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும், அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கின்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.

எனவே, இக்கொடுமைகள் நீங்கின இடத்தில் மாத்திரமே மக்கள் பிரிவில் உண்மைக் கற்பை, இயற்கைக் கற்பை, சுதந்திரக் கற்பைக் காணலாமே ஒழிய நிர்ப்பந்தங்களாலும், ஒரு பிறப்புக்கொரு நீதியாலும், வலிமை கொண்டவன் வலிமையற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒருக்காலும் காணமுடியாது என்பதுடன், அடிமைக் கற்பையும், நிர்பந்தக் கற்பையுந்தான் காணலாம் அன்றியும், இம்மாதிரியான கொடுமையைவிட வெறுக்கத்தக்க காரியம் மனித சமூகத்தில் வேறொன்று இருப்பதாக என்னால் சொல்ல முடியாது.



-------------------- *சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் எழுதியது - "குடிஅரசு" 8-11-1928*

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (22-Sep-18, 5:23 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : karpu
பார்வை : 782

சிறந்த கட்டுரைகள்

மேலே