சங்கே முழங்கு

அத்தனை தேவர்களும் மொத்தமாய் சேர்ந்து
சித்தம் ஒருமித்து பாற்கடல் கடைந்ததை
சமுத்திர பந்தனம் என்று உரைத்தார்
இரத்தின வகை பதினான்கு எடுத்தார்

பத்திலும் நாலிலும் சத்தம் செய்திடும்
கத்து கடலதின் ஓசை எதிரொலிக்கும்
ஒத்த ஒன்றும் அவனியில் இல்லை
தத்துவப் பொருளாம் சங்கு அதற்கு

சங்கு அதனைக் காதினில் வைத்தால்
பொங்கியே வழியும் ஓங்கார நாதம்
புந்தியில் ஏகன் படைத்த அவனிக்கு
முந்திய சான்றாய் எங்கிலும் வாய்க்கும்

வாயினில் வைத்து ஊதினோம் என்றால்
முதன் முதலில் எழுந்த ஓசை அதுவென
நாதம் எழும்பிடும் நம்மையும் உய்விக்கும்
சங்க நாதம் என்றது சொலப்படும்

சொல்லிடும் ஒவ்வொரு சங்கும் நாதம்
வெவ்வேறு தீமையை அழிக்க வல்லது
போரினில் முரசுடன் ஓங்கி ஒலித்தது
நாதம் வேறாக ஒலிக்க வல்லது.

வல்ல பாரதப் போருக்கு முன்னரே
பாஞ்ச சன்யத்தைக் கிருட்டிணர் முழங்கிட
போரென ஒன்று துவக்கு முன்னரே அது
வெற்றியை உலகுக்குச் சொல்லிய வாழ்த்து.

வாழ்த்து பெற்ற அருச்சுனனிடம் இருந்தது
தேவ தத்தன் எனும் ஒரு சங்கு அது
எதிர் மறை வினைகளை அழித்துப் போடும்
புதிர்மிகு த்வணி கொண்ட பொருளாம்

பொருளதில் வலது இடது என வட்டங்கள்
இருப்பின் அதுவே தட்சிண வர்த்தம்
சங்கு அதுவே விலை மதிப்பு அற்றதாம்
இலட்சுமி என்றும் உறைந்திடும் வேதம்.

ஆயுர் வேதத்தில் சங்கினில் உறை நீர்
ஆயுளை நீட்டிக்கும் அமுத பானமென்பர்
சங்கினை எரித்து வரும் சங்க பஸ்பம்
சங்கட நோய் நீக்கியும் ஆகும்.

தா. ஜோ. ஜூலியஸ்



















.



LikeShow more reactions
Comment

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (26-Sep-18, 4:06 pm)
Tanglish : sange mulanggu
பார்வை : 88

மேலே