காற்று

#காற்று ..!

காற்று என்னைத் தீண்டிச் சென்ற
மாயமென்னவோ...
கன்னம் தொட்டு முத்தமிட்ட
செய்தி சொல்லவோ ..!

தொட்டுவிட நினைத்து நானும்
தோற்றுப் போகிறேன்
கண்ணில் மண்ணைத் தூவ
நானும் கலங்கி வாடினேன்...!!

மரக்கிளையில் இலைகளோடு
ஆடி நிற்குது
பூக்கள் உதிர்த்து எந்தன்மீது
மழையும் பொழியுது..!!

என் சுவாசமாகி உள்ளிருந்து
வாசம் செய்யுது
உயிரோடு உயிராகி என்னை
வாழ செய்யுது..!

தென்றலாக வரும் காற்று
இன்பம் சேர்க்குமே
புயலாகத் தாக்கும்போது
காவு கொள்ளுமே ..!

இசையான வடிவினிலே
துன்பம் தீர்க்குமே
ஒலியினையே நித்தம் சுமந்து
மொழிகளாக்குமே..!

காற்றுடைய பல வடிவம்
எண்ணிப் பார்க்கிறேன்
கடவுளவன் செய்த வித்தை
எண்ணி வியக்கிறேன்..!!

காற்றிலாமல் உலகினிலே
உயிரினம் உண்டோ..!
உயிரில்லாத உலகத்திலே
அழகதும் உண்டோ..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (6-Oct-18, 7:24 am)
சேர்த்தது : C. SHANTHI
Tanglish : kaatru
பார்வை : 7377

மேலே