குளிரும் காதல்
சூரியன் கோடை விடுமுறைக்கு சென்ற காலம்
சந்திரனும் மேகப்போர்வை போர்திக்கொண்ட குளிர் இரவு.
இந்த குளிரில் மொட்டை மாடி காதல் தேவைதானா என்று எங்களை திட்டிக்கொண்டே தன் கூட்டில் மறைந்தது அந்த காகம்.
அந்த இரவு முழுவதும் போர்திக்கொண்டு
முகத்தோடு முகம் சாய்த்தபடி
கம்பளிக்குள் உறைந்து கொண்டோம் இருவரும்.
கண்களும் மூக்கும் மட்டும் தான் இருளை தீண்டுகின்றன மற்றவை குல்லாவிற்குள்
குளிரும் வெப்பமுமாய் கதகதப்பு காதல் செய்தன.
ஆங்காங்கே சில நட்சத்திரங்கள்
நம்மை பார்ப்பதற்காக மேகத்திரையை
விலக்கி நம்மை எட்டி எட்டிப் பார்த்தது.
அந்த நட்சத்திரங்களை நாம் பார்த்ததும்
அவை மறைந்து ஒளிந்து கொண்டன
அதை கண்டதும் நீ புன்னகையித்து நாணம் கொண்டது
என்னையும் சிறு பிள்ளையாய் சிரிக்க வைத்தது.
அப்போது நீ கூறியது இன்றும் எனக்கு நியாபகம் இருக்கிறது
" இரவு எவ்வளவு தனிமையில் வாழ்கிறது
அது விழித்திருக்கும் போது எவரும் அதை கவனிப்பதில்லை
நான் தூங்கும் போது நீ தரும் முத்தத்தை போல அதன் அழகும் யாரும் அறியாது
விடியலில் மறைகிறது"