எது காதல்

காதல் என்பது என்ன..
கண்ணில் பட்ட அனைவரிடமும்
கேட்டேன்.... கோடி பதில்கள் குவிந்தன

'இன்பமிக்க இனிய பயணம்'
இளம்ஜோடிகள் இயம்பின -
எங்கே இது முடியும் என்றேன்
எதிர்காலம் யாமறியோம் என்றனர்

'உயிரைக் கொல்லுகின்ற நோய்'
உடையவளை தொலைத்தவன் இவன்
மீட்கும் மருந்தும் அதுவே தானோ?
மீண்டவன் மகிழ்ந்துரைத்தான்

கைவளை கழன்று விழ தலைவி
கண்ணீரும் கம்பளையுமாக கரைந்து
பசலையில் நொந்து வாடினாளாம்
பழங்கதை பகர்ந்தாள் சங்கத்து பைங்கிளி

இயற்கையின் தேவை என்றான் அறிஞன்
தீர்ந்த பின் இனிக்குமா? என்றேன்
தேடிய நூல்களில் இல்லை என்றான்

கடவுள் என்றனர் அநேகம் பேர்
கற்பனை என்றனர் ஒரு சிலர்
கனவு என்றனர் அறியாதவர்கள்
காத்திருப்பு என்றனர் காதலர்கள்

சரணாகதி என்றனர் சித்தர்கள்
சலனம் என்றனர் காதல் பித்தர்கள்
தூய்மை என்றனர் துறவிகள்
துக்கம் என்றனர் சில பிறவிகள்

காதலே..... நீ யார்?
காற்றடித்து வீழ்கின்ற மணல் வீடா
காலத்தால் அழியாத கற்கோபுரமா
மென்மை கொண்ட வெண்ணிலவா
அனலடிக்கும் ஆதவனா
வாழ்வளிக்கும் தேவதையா
வசவுரைக்கும் கடுஞ்சொல்லா
கட்டிலை மட்டும் நாடுகின்ற பால்மயக்கமா
காடுவரை உடன் வரும் பாதியா

காதலே நீ தண்ணீர் போல தான்
வளைபவுருக்கேட்ப வடிவம் கொள்வதனால்

இனி கேட்க போவதில்லை யாரிடமும்
உணர போகிறேன்
நான் வரையறுத்த காதலை...

எழுதியவர் : ரதி (14-Nov-18, 8:50 pm)
சேர்த்தது : ரதி
Tanglish : ethu kaadhal
பார்வை : 219

மேலே