களம் காண
ஒரு குடும்பமாய் இருந்த இந்த உலகில் ஆள் ஆளுக்கு வல்லமை பேசி
ஆயுதங்களின் வலிமை கூட தலைக்கணமே ஏறி அறிவிறந்த நிலையில்
அடுத்துவர் முன்னேற்றத்திற்குத் தன் வல்லமை கொண்டு தடைவிதிக்கும் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன உலக நடைமுறையின் சாட்சியாக.
வலிமை கொண்டேன் என மெலியவர்கள் ஒடுக்கி பகைவர்களாக்கி, பகைவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே சென்றேன் என்றால் விரைவில் வீழ்வேன் வலிமையான வண்டியில் ஏற்றப்பட்ட அளவுக்கு அதிகமாக மெல்லிய மயில்தோகையை ஏற்றினால் வலிமையான வண்டியின் அச்சு முறிவதைப் போல.
குடும்பத்தைப் பிரித்து,
வல்லமை பேசி திரிதல் காணுகையில் குடும்பத்தின் அழிவு கண்களுக்குத் தெரிகிறது நன்றாகவே.
உணவு, உடை, நீர் போன்ற அத்தியாவசியங்களை விட ஆயுதங்களை வாங்க அதிக விலை கொடுப்பது அழிவை விருந்து வைத்து அழைப்பதைப் போல் அறிவற்ற செயல்களாக,
இனம், மொழி, மதமென பகுப்பாடுகளால் கட்டப்பட்டு கிடக்கிறாள் சுதந்திர தேவி.
தன் சுதந்திரத்தால் பிறர் சுதந்திரத்தைக் கெடுத்து மகிழ்வோரெல்லாம் இல்லாது போக காலம் காத்திருக்கிறது களம் காண.
களம் காணும் நாள் வரும்.
கதற வைத்தவையெல்லாம் அடியோடு கதறும் நாளாய் அன்றே அமையும்.