பெண்களை போற்றுவோம்
சாலையில் பெண்கள் எவ்வளவு திறமையாக வாகனம் ஓட்டினாலும் ஒண்ணு ‘பார்த்து பொறுமையா ஓட்டுமா (30கிமீ வேகத்தில் சென்றாலே)!’ அப்படினு ஒரு அறிவுரை குரல் கேட்கும், இல்லை ‘பொண்ணுங்களுக்கெல்லாம் லைசனஸ் கொடுத்து நம்ப உசுர வாங்குறாங்க! கொஞ்சம் வேகமா தான் போயேன்’ அப்படினு மிரட்டும் தொனியில் ஒரு குரல் கேட்கும். பெண்களுக்குப் பாதுகாப்பாக வண்டியோட்டத் தெரியாது என்பது எழுதப்படாத ஒரு நியதியாகவே உள்ளது. இதைப் பொய்யாக்க போகிறது இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி.
இத்தனை ஆண்டுகளாக ஆண்கள் மட்டும் செய்து கொண்டிருந்த இருசக்கர வாகன சாகசத்தை இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாகப் பெண்களும் நிகழ்த்தி இந்திய வரலாற்றுப் பக்கங்களில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைக்கப் போகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இதனை சிறப்பிக்கும் வகையில் தில்லியில் முப்படை பாதுகாப்பு வீரர்கள் அணிவகுத்து வீர, தீரச் சாகசங்களை நிகழ்த்தி அனைவரையும் வியப்பிலும், பெருமையிலும் ஆழ்த்துவார்கள்.
Border Security Force (BSF) எனப்படும் எல்லை பாதுகாப்பு படையில் இந்த ஆண்டு 113 பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 26 ராயல் என்ஃபீல்டு 350சிசி வண்டியில் டேர்டெவில் ஸ்டண்ட் எனப்படும் ஓடும் வாகனத்தில் மனித பிரமிடு போன்ற சாகசங்களை இவர்கள் நிகழ்த்தப் போகிறார்கள். இவர்கள் அனைவரும் 26 முதல் 31 வயதிற்குட்பட்ட பெண்கள். இந்தப் பெண்கள் அணிக்கு சீம பவானி என பெயரிடப் பட்டிருக்கிறது.
இந்த 113 பெண்களையும் தலைமை தாங்கி முன் நடத்தப் போவது ஸ்டான்ஜின் நோரிக்(28) என்னும் துணை ஆய்வாளர். ஜம்மு காஷ்மீர் லதாக் பகுதியைச் சேர்ந்த இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இந்தியாவின் ‘பெண்கள் டேர்டெவில்’ அணியை வழிநடத்த இவரைத் தேர்ந்தெடுத்த போது இவருக்கு இருசக்கர வாகனம் ஓட்டக் கூட தெரியாதாம், ஆனால் இன்று அதிக கணமுள்ள புல்லட் வண்டியில் 10 பேரை வைத்து சாகசம் நிகழ்த்தும் அளவிற்கு வாகனம் ஓட்டும் உத்தியைக் கற்று தேர்ந்துள்ளார்.
இவரைப் போலவே இந்த அணியில் இருக்கும் பெண்கள் பலரும் பைக் ஸ்டண்ட் செய்ய முன்வந்த போது இருசக்கர வாகனத்தை ஓட்டத் தெரியாது, பின்னர் விடா முயற்சியுடன் அதைக் கற்று தேர்ந்துள்ளனர். ஆண்களுக்குப் பதிலாக பெண்களை இந்த ஆண்டு இருசக்கர வாகன சாகசத்தை நிகழ்த்தச் சொல்லலாம் என முடிவெடுத்தது இந்திய எல்லை பாதுகாப்பு படையின் டிரக்டர் ஜென்ரல் கே.கே.சர்மா ஆவார்.
113 பெண்களைக் கொண்ட இந்த அணியில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதே வருத்தத்திற்கு உரிய ஒரு விஷயம்.