நீ வேண்டும் கண்ணம்மா

சிலநூறு சிந்தனைகளை சிதறடித்த தருணம்
பலநூறு வெண்ணிலவு ஒரு பென்னிலவாய் உலாவும் வர
சின்னஞ்சிறு கண்களில் பொங்கி வழிந்த காதலடி
வண்ணமிகு கலைமதியே கைகளிலே சேராயோ!

அல்லிமலர் சூடிக்கொண்டு வண்டுதனை காக்கவிட்டால்
வண்டினமே நோகுமடி வண்ணநிலவே நீயறியாயோ
என்மனதை கொள்ளைகொண்டு எனைநீ நீங்கிச்சென்றால்
சிறுநெஞ்சம் அலைகடலாய் ஆர்ப்பரிக்கும் அறியாயோ

சிருபுருவம்தனை வில்லாக்கி நீதொடுக்கும் பார்வைக்கணை
ஓராயிரம்நினைவுகளை நொடிப்பொழுதில் தூண்டிச்செல்ல
மறுநொடியில் நானும் மலராக மாறிப்போனால் - எனை
மறுப்பேதும் பேசாமல் மணப்பாயோ மரிக்கொழுந்தே..

பூமணம் வீசும் புன்னகைப்பூ பூத்துக்குலுங்க
கார்குழலில் மல்லிகை பந்தலென படர்ந்திருக்க
நிலவுக்கே கண்கூச கண்ணிமைக்க மறந்து நிற்க
பெண்ணிலவே வெண்ணிலவாய் வீதியுலா வரலாமோ

புன்னகைக்கும் வேளைதனில் பூவுலகம் நான்மறக்க
சிறுகொஞ்சல் நகைப்பாலே முத்துப்பல் முகத்தில் காட்டி
மூவுலகம் தான்வியக்க மூடிவைத்த ஓவியமே
தீண்டா தூரிகைகையில் வரைந்து வைத்த சித்திரமே

பார்வை மட்டும் மோதிக்கொண்டால் விழிகள் ஊமையாகிவிடும்
விழிகள் ரெண்டும் மோதவிட்டு வழிகள் யாவும் சேர்ந்திருப்போம்
உலகம் மறந்து மனத்தால் கலந்து வாழ்வில் ஒன்றாய் கலந்திருப்போம்
வரிகள் சொல்லா காதலினை விழிகளில்பேசி இணைந்திருப்போம்

மழையோடு தென்றலாக என்னுடன் நீ இணைந்துவர
இன்பமழை பொழியும்வேளை ஒற்றைகுடையில் பயணிக்க
குழலிடையில் காற்றைப்போல் இணைந்து இசை மீட்டிடவே
நித்தம் நீ வேண்டுமடி என் முட்டைககண்ணி முனியம்மா..!

எழுதியவர் : சிவா விஜய் (27-Nov-18, 7:03 pm)
சேர்த்தது : விஜய் சிவா
Tanglish : nee vENtum kannamma
பார்வை : 147

மேலே