எளிய முறை தமிழ் பாகம் 5

பாகம் 5

குறில் ‘உ’ வரிசை

இந்த குறில் உகர வரிசையில் பல வடிவங்கள் உள்ளன. அவற்றை மாணவர்கள் எளிதில் அறிந்து கொள்ள புதிய அணுகு முறை இங்கு கூறப்பட்டுள்ளது.

அவை பின்வருமாறு:

சில எழுத்துகளின் மேலே வளைக்கப் பட்டிருக்கும். அவற்றிற்கு மேல் அரைவட்ட எழுத்துகள் என்று ஒரு புதிய அடையாளத்தை நல்கிப் பயில வைக்கலாம்.

(எடுத்துக்காட்டாக) கு, டு, மு, ரு, ழு, ளு
போன்ற எழுத்துகள் மேல்நோக்கி வளைக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.

இதில் மொழிக்கு முதலில் கு, மு ஆகிய இரண்டு எழுத்துகள் மட்டுமே பயின்று வரும். மற்றவை மொழிக்கு நடுவில் மட்டுமே வரும். எனவே அதில் வரும் சில சொற்களைக் காணலாம்.

1. மேல் அரைவட்ட எழுத்துகளுக்கு சில சான்றுகள்;
கும்பம், முயல், குயில், குரங்கு, முதலை, முத்து, முரசு, முருகன், முகம், குருவி, கும்மி, குடம், குடும்பம்......

பயிற்சி 1
இதுபோன்ற மேல் அரைவட்டச் சொற்கள் சிலவற்றை உன் பாட நூலிலிருந்து எடுத்து எழுதுக.

பயிற்சி 2

பின்வரும் பத்தியில் மேல் அரை வட்டச் சொற்களை குறிப்பிட்டுக் காட்டி, அவற்றை உரிய முறையில் உச்சரித்துப் பழகவும்.

''வாசனையா மட்டும் இருந்தா போதாது... ருசியாவும் இருக்கணும். அப்பதான் அது சாம்பார்! பருப்பை வேக வைக்கறதுக்கு முன்ன, 15 நிமிஷம் ஊற வெச்சா, சீக்கிரம் வெந்துடும். சீரகம், வெந்தயம், பெருங்காயம் இதையெல்லாம் கூடவே சேர்த்து வேக வெச்சா... மறுநாள் வரைகூட சாம்பார் கெட்டுப் போகாம இருக்கும்.”

2. அடுத்து கீழ்த்தொங்கல் எழுத்துகளும் மற்றும் அதற்கான எடுத்துக்காட்டு சொற்களும்

குறில் ‘உ’ வரிசையில் சில எழுத்துகள் கீழ்முகமாக சுழிக்கப் படுகின்றன.
அவை ஙு, சு, பு, யு, வு முதலியன.
இவற்றில் சு, பு, யு ஆகிய எழுத்துக்கள் மட்டுமே மொழிக்கு முதலில் வரும்.

அதற்கான சான்றுகள் சில:

புன்னகை, புளி, புலி, புத்தகம், புல்வெளி, புத்தர், புதியவை, புகழ், யுவதி, யுகம், யுக்தி, சுதா, சுகம், சுமை, சுந்தரி, சுண்ணாம்பு……

பயிற்சி 1
இவைபோன்று கீழ்த்தொங்கல் எழுத்துகளில் துவங்கும் சில சொற்களை உச்சரித்துக்கொண்டே எழுதவும்.

பயிற்சி 2

பின்வரும் பத்தியில் கீழ்த்தொங்கல் எழுத்துகளை வட்டமிட்டு அந்த சொற்களை படித்து மகிழவும்.
துவரம்பருப்பை மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். இன்னொரு பாத்திரத்தில் காய்கறிகளுடன் பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் புளியைக் கரைத்து ஊற்றி உப்பு, அரைத்த சாம்பார் பொடி, வெந்த பருப்பை சேர்க்கவும். பச்சை வாசனை போனதும். தேங்காய்ப் பால், தட்டிய பூண்டுப்பல் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும். தாளிக்க கொடுத்துள்ளவற்றை, நெய்யில் தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

அடுத்து குறில் ‘அ’ சுழி எழுத்துகளைப் பற்றிக் காண்போமா?

அதென்ன ‘அ’சுழி, பின்வரும் எழுத்துகளை நன்கு உற்று நோக்குங்கள். அவற்றில் அ என்ற எழுத்தின் பாதிவடிவம் தெரிகின்றதல்லவா? அதனால்தான் அதற்கு அந்தப் பெயர். பிடித்திருக்கிறதா?

இதோ அவை: ஞு, ணு, து, நு, லு, று, னு.

இனி அவற்றிற்கான சில சான்றுகளைப் பார்த்துவிடவேண்டியதுதான். வழக்கம் போல் இவற்றில் மொழிக்கு முதலில் எந்தெந்த எழுத்துக்கள் வரும்? ஊகித்து விட்டீர்களா?
ஆம் அதேதான் து, நு மட்டும் தான்.

எடுத்துக்காட்டுகள்:

நுங்கு, துரை(சீமான்), துறை(பிரிவு), நுழை, நுட்பம், தும்பிக்கை, துப்பாக்கி, துரும்பு, துடைப்பம், துண்டு, துலாக்கோல்.......

வழக்கம் போல் பயிற்சிக்கு வருவோம். தயார்தானே?

பயிற்சி 1

பின்வரும் பத்தியில் உள்ள கீழ்த்தொங்கல் எழுத்துகளை அடிக்கோடிட்டு உச்சரித்துக்கொண்டே படிக்கவும்

புலவர்கள் தாம் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயா சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும்.

பயிற்சி 2

வழக்கம் போல் ஐந்து சொற்கள் எழுத ஆயத்தம் ஆகிவிட்டீர்களா?

நன்றி

இனி பாகம் 6ல் அடுத்த பதிவைக் காணலாம்.

அன்புடன் திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி,
தமிழாசிரியை
கோயம்புத்துர்.

எழுதியவர் : ஸ்ரீ vijayalakshmi (1-Dec-18, 10:49 am)
பார்வை : 1079

மேலே