முன்னம் தனையறிய நேரின் தரணியில் அனைவர்க்கு அவனே அணி – அணியறுபது 51
நேரிசை வெண்பா
தன்னை யறிவதே தத்துவ ஞானவணி;
பின்னை யறிவது பித்தணியே; – முன்னம்
தனையறிய நேரின் தரணியில் உள்ள
அனைவர்க் கவனே அணி. 51
- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்
பொருளுரை:
தனது ஆன்ம நிலையை அறிவதே மெய்யான ஞான அழகு; வேறு தெரிவதெல்லாம் மாறான ஊன அழகு; தன்னை ஒருவன் உணர நேரின், இந்த உலகில் உள்ள எவர்க்கும் அவனே தலைமை அழகனாய் நிலவி நிற்பான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
உரிமையாய் உணரவுரிய உண்மைப் பொருள் தெரிய வந்தது. எதை உணர்ந்தால் எல்லாம். உணர்ந்ததாமோ அதை உணர்ந்தால்,. அவ்வுணர்வு துக்கத்தை நீக்கிச் சுகத்தை ஆக்கி யருளும்.
உயிரும் உடலும் கூடி உலாவி வருகிற உருவங்களுள் மனித இனம் மதிநலம் உடையதாய் மருவியுளது. அந்த மதி கூர்மை வாய்ந்தது எனினும் தன்னைக் கூர்ந்து அறிவதில்லை. இந்த அறியாமையே எல்லாத் துயரங்களுக்கும் மூல காரணமாய் மூண்டு நிற்கிறது. தன்னை மறந்து தாழ்ந்ததனாலேயே இன்னல் இழிவுகள் எங்கும் தொடர்ந்து சூழ்ந்துள்ளன.
தோலால் செய்த பாவைகளை உள்ளே இருந்து ஒருவன் ஆட்டுவது போல் இந்த உடல் இயங்கி வருகிறது. அகத்தே அமர்ந்து இயக்குகிறவன் யார்? உயிர் என ஒரளவு உரையாடி வரினும், அதன் உண்மை நிலையை உணர்ந்து தெளியாமல் மாய மயல்களில் அழுந்தி யாவரும் மறுகி யுழல்கின்றனர்.
இந்தச் சீவான்மா அந்தப் பரமான்மாவிலிருந்தே பிரிந்து வந்துள்ளது. ஆதியும் அந்தமும் இல்லாத அந்த அரிய பரஞ்சோதியினின்று வெளியே சிதறியுள்ள ஒரு சிறிய பொறியே உயிர் எனப் பெயர் பெற்றுள்ளது. பேரொளிப் பிழம்பின் ஓர் ஒளித்துளி எனயிதனை உணர்ந்து தெளிவதே மெய்யுணர்வாம். இந்த உணர்வொளியின் முன் வீண் மையல்கள் யாவும் விலகி ஒழிகின்றன. தெய்வநிலை நேரே தெளிவாய்த் தெரிய வருகிறது.
இவ்வாறு உய்த்து உணர்ந்தவரே தத்துவ ஞானிகள் எனத் தலைசிறந்து நிலையுயர்ந்து நின்றுள்ளனர். உண்மையறிவு உயர் பேரின்பமாகிறது.
இந்த மெய்ஞ்ஞான ஒளி தோன்றிய பொழுது அஞ்ஞான இருள் அடியோடு ஒழிந்து போகிறது. துன்பங்கள் யாவும் தொலைந்து ஒழிகின்றன; அதனால் இன்ப மயமான பரமனோடு இனிது கலந்து உயிர் பரமானந்தமாய் விளங்குகிறது,
கலி விருத்தம்
உன்னை முன்னம் உணர்க! உணரினோ,
பின்னே இன்பம் பெருகும்; பிறவியின்
இன்னல் யாவும் இரியும்; இறைவனும்
துன்னி நின்று துலங்குவன் சோதியாய். (1)
சோதி யான பரமன் ஒளிஎன
ஓதி உன்னை உணர்ந்து தெளியினோ,
பேதி யாது பிறவிகள்; பின்புநீ
ஆதி யாவை; அதிசய இன்பமே. (2)
இவை இங்கே சிந்தித்துத் தெரிய உரியன. பொருள் நிலைகளைக் கூர்ந்து உணர்ந்து உண்மையை ஓர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும்,
தன்னை அறியாமல் மறந்து போனதினாலேயே பிறந்து பிறந்து மனிதன் பெருந்துயரங்களை அடைய நேர்ந்தான். எதை எதையோ அறியவேண்டும் என்று ஆவலாய் வெறிகொண்டு ஒடி உழலுகின்றான்; அவை யாவும் அவலப் புலைகளே.
தனது உண்மையை உணர்ந்து தன் உயிரைத் தனக்கு உரிமையாகப் பெற்றவனே பிறவித் துயரங்கள் முற்றும் அற்றுப் பேரின்ப நிலையைப் பெறுகின்றான். தேவர் முதல் யாவரும் அப் பேறாளனை வியந்து புகழ்ந்து உவந்து போற்றுகின்றனர்.
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும். 268 தவம்
இந்த அருமைத் திருக்குறளின் பொருளைக் கருதியுணர்ந்து நாளும் சிந்தித்து வர வேண்டும். உன் உயிரை நீ உரிமையாகப் பெற்றால் உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் உன்னைப் பெருமையாகத் துதித்துத் தொழுது வரும் என்ற இதில் எவ்வளவு மருமங்கள் மருவியுள்ளன என்று ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
உடலுள் உறைந்துள்ள உயிர் இயல்பாகவே அறிவும் இன்பமும் உடையது. எல்லாவற்றையும் அறிய வல்லது. எங்கும் சுக வடிவமானது: எவ்வழியும் விழுமிய மகிமையது: என்றும் நிலையானது. புனிதமான இந்த ஆன்மாவே தனது இனிய நிலை என்று மனிதன் தெளிவாய் உணர்வதில்லை. உணர வேண்டியதை உரிமையோடு உணராமல் ஊனமாயுழல்வது ஞான சூனியமாய் வளர்ந்துளது.
மாயத் தோற்றமாய் மருவியுள்ள உடல், பொருள், மனைவி, மக்கள் முதலிய பொய்யுறவுகளையே மெய்யென்று நம்பி வைய மையல்களில் அழுந்தி வருதலால் கொடிய துயரங்களையே எவ்வழியும் அடைந்து வேதனைகள் படிந்து உழல்கின்றான்.
பிறப்பும் இருப்பும் சூழல்களும் அவனை மறப்பில் ஆழ்த்தி மயக்கி வருகின்றன. மறப்பு நீங்கிய பொழுதுதான் பிறப்பின் மெய்யான பயனை அவன் பெற நேர்கின்றான். தன்னை உண்மையாக அறிய நேர்ந்த அன்றே பெரிய மகானாய்ப் பேரின்ப நிலையைப் பெற்றவனாகின்றான். அறியாத வரையும் வெறியனாயலைந்து வீணே விரிந்து திரிகின்றான்.
கலி விருத்தம்
எல்லாம் அறியும் அறிவு, தனைவிட்(டு)
எல்லாம் அறிந்தும் இலாபம் அங்கில்லை;
எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில்
எல்லாம் அறிந்த இறைஎனல் ஆமே. – 2596 திருமந்திரம்
கருமூலம் கட்டறுத்த திருமூலர் இவ்வாறு தெளிந்து மொழிந்துள்ளார். வெளியே எல்லாவற்றையும் அறியவல்ல அறிவு ஆன்மாவாகிய தன்னை உள்ளே நோக்கி உரிமையுடன் உணரவில்லையானால் அது பயன் அற்ற பாழ் அறிவே என்று எள்ளி இகழ்ந்துள்ளமை இங்கே உள்ளி யுணரவுரியது.
வானத்தின் நீளம், சூரிய மண்டலத்தின் எல்லை, சந்திர மண்டலத்தின் அளவு, விண் மீன்களின் விளைவு முதலியவற்றை அறிந்ததுபோல் திரும்பத் திரும்பப் பாராட்டிப் பேசி வருவதால் உனக்கு என்ன பலன்? உன்னுடைய உண்மை நிலையை முன்னதாக உணர். அவ்வாறு உணரின் தன்னுயிரைத் தானறப் பெற்றவனாய் மன்உயிர் எல்லாம் தொழுது வர, வானமும் வையமும் வணங்கி வர விழுமிய பேரின்ப நிலையில் விளங்கி மிளிர்வாய்.
உன்னை நீ அறிந்தால் எல்லாம் அறிந்த இறை எனல் ஆமே என்னும் இந்த மந்திரமொழி ஈண்டு ஆழ்ந்து சிந்தனை செய்து தெளிய வுரியது.
எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்கய்ச்சீர் வரலாம்)
உன்னைநீ முன்னம் உணர்ந்தனை என்றால்
உயர்வற உயர்ந்துள ஒருவன்
தன்னையும் உணர்ந்தாய்! தத்துவம் தெளிந்தாய்!
தமர்மனை மக்களென் றயலே
மன்னிய உறவின் வகைதொகை அறிந்தாய்!
மறிதிரைக் கடலென வளைந்த
இன்னல்வெம் பிறவி இடரையும் கடந்தாய்!
இன்பமே இயல்புடன் இருந்தாய்!
இந்தக் கவியில் கனிந்துள்ள பொருள் நலன்களையும் குறிப்புகளையும் கூர்ந்து ஓர்ந்து கொள்ள வேண்டும். உடலில் உள்ள சீவ ஒளியை உண்மையாக உணர நேரின் அது தேவ ஒளியாய்த் திகழ்ந்து வருவதைத் தெளிவாகத் தெளிந்து கொள்ளலாம்.
உயிர் துயர் நீங்கி உய்யும் வகையைச் செய்பவனே மெய்யறிவாளனாகிறான். அவன் பிறப்பே பெருமகிமை யுடையது: பேரின்ப வீட்டுக்கு அவனே உரியவன் ஆகிறான். ஆவதை ஆய்ந்து தெளிய வேண்டும்.