இன்பம் இசைதொறும் இன்னாமை நோக்கிப் பசைதல் பரியாதாம் மேல் – நாலடியார் 60
நேரிசை வெண்பா
துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல். 60
- துறவு, நாலடியார்
பொருளுரை:
வாழ்க்கையில் துன்பமே மேலும் மேலும் மிகுந்து வருதல் உணர்ந்தும் பற்றில்லாமல் இருத்தலை நினையாராய் இடையே தினையளவாக உண்டாகும் இன்பமே விரும்பி நிற்பார் மனவலிமை இல்லாதார்;
ஆனால் அச் சிற்றின்பம் கிடைக்கும்போதெல்லாம் அதனால் உண்டாகும் பெருந்துன்பங் கருதி அதனை விரும்புதலை மேற்கொள்ளார் மேலோர்.
கருத்து:
வாழ்க்கையிற் சிறிய இன்பத்துக்காகப் பெருந்துன்பம் உண்டாதலின், அச் சிற்றின்பத்திற் பற்று வைக்கலாகாது,
விளக்கம்:
உள்ளவலியில்லாதவராதலின், இரக்கந் தோன்ற ‘ஏழையார்' என்றார்.
இசைதல் வந்து பொருந்துதல்; கிடைத்தல்.
பரிதல், "காய்பரீஇ" 1 என்புழிப்போலக் கொள்ளுதற் பொருளில் வந்தது.